|
நாம் பிறந்து வாழும் இல்வாழ்க்கையில் எத்தனையோ செயற்கரிய செயல்களைச் செய்பவர்களைக் காண்கிறோம். கிடைத்தற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற அவர்க்கும் நம்மைப் போன்ற உறுப்புகளைத் தானே கடவுள் படைத்துள்ளார்! வேதகாலத்தில், இராமாயண, பாரதத்திலும் கூட இவ்வாறு செயற்கரிய செய்பவர்கள் இருந்துள்ளனர். அவர்களின் செயலால் மகிழ்ந்த கடவுளரும் தேவரும் பிறரும் அவர்கட்கு வரங்களையும் பரிசுப் பொருள்களையும் தருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இத்தகையோர் உலகம் உள்ளளவும் ஏன், என்றென்றைக்கும் நிலைத்து நீடூழி வாழ வேண்டும் என அவர்கட்கு சிரஞ்சீவி பட்டம் அல்லது தன்மையை மனமுவந்து வழங்குகின்றனர். இத்தகைய சிரஞ்சீவி பட்டம் பெற்றோர் எழுவர் என்றறிகிறோம்.
வியாசர்: ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயர் கொண்ட வியாசர் தோன்றுவார் என்கிறது கீதை. இவர்கள் சிரஞ்சீவிகள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு மாணவர் இருப்பர். நமக்குத் தெரிந்த வியாசர் வைவச்சுத மன்வந்தரத்தில் இருபத்தெட்டாவது துவாபர யுகத்தில் இருந்தவர். நான்கு வேதங்களை இவர் தனது நான்கு சீடர்களுக்கு அருளினார். பராசர முனிவர்க்கு பரிமள கந்தியிடம் பிறந்த இவர். வேதம், பிரம்ம சூத்திரம், புராணம், பாரதம் என்பவற்றை நமக்காக அளித்தவர். மேலும் இவர் மூலமாகத்தான் திருதரட்டிரன். பாண்டு, விதுரன் பிறந்தனர். பாரத யுத்தத்தின் முடிவில் திருதராட்டிரனைத் தோற்றி இறந்த கவுரவர்களையும் கர்ணன். அபிமன்யு, அரவான் என்போரையும் சுவர்க்கத்திலிருந்து அழைத்துக் காட்டினார். மேலும் இறந்த வீரர்களின் மனைவிகளைக் கங்கையில் வீழ்ந்து சுவர்க்கம் அடையுமாறு கூறினார். மேலும் பாண்டவர்களுக்கு அவ்வப்போது வனத்தில் தோன்றித் தர்மம் உரைத்தவர். யுகந்தோறும் அழியாமல் இவர் தோன்றுவதால் பகவான் விஷ்ணுவை நாம் வியாச ரூபாய் என்று போற்றித் துதிக்கிறோம்.
கிருபாசாரியார்: இவர் விசுவாமித்திரரின் மகனான சதானந்தருக்கும் தேவலோகவாசியான ரம்பைக்கும் பிறந்தவர். இவரது தங்கை கிருபி. இவர்கள் இருவரையும் வேட்டைக்கு வந்த சந்தனு மகாராஜன் எடுத்து வளர்த்தான். கவுரவர்க்கும் பாண்டவர்க்கும் படைப்பயிற்சி அளித்த குருமார்களுள் ஒருவர். கவுரவர்களின் சேனைகளுக்குத் தலைவனாக இருந்தவர். பாரதப் போரின் இறுதிவரை உயிரோடிருந்தவர்.
அசுவத்தாமன்: துரோணாச்சாரியாருடைய மனைவி கிருபி. இவளது கற்பின் திறத்தைச் சிவபெருமான் சோதிக்க நினைத்துத் தன் வீரியத்தை வெளிப்படுத்தினார். அதனைக் கிருபி அன்னத்துடன் கலந்து பெட்டைக் குதிரைக்கு வைத்தாள். அக் குதிரையின் வயிற்றைப் பிளந்து கொண்டு அசுவத்தாமன் பிறந்தார். பாரதப் போரில் இவன் இறந்து விட்டதாகத் தருமர் பொய் கூறவே, அவரது ரதம் நிலை தாழ்ந்தது என்பர். இறுதி வரை துரியோதனனுக்கு பாரதப் போரில் துணை நின்றவர். இவர் தலையில் ஒரு சிறந்த மணியை அணிந்திருந்தார். சிவபெருமானை நோக்கிக் கொடிய தவம் புரிந்து பிரம்மாஸ்திரத்தைப் பெற்றவர். இளம் பஞ்ச பாண்டவர்கள் உறங்கும்போது அவர்களைப் பாசறையில் சென்று கொன்றவர். மேலும் உத்தரையின் கருப்பத்தில் இருந்த சிசுவும் கரிக்கட்டையாகும்படி செய்தவர். எனவே, கண்ணனால் குஷ்ட வியாதியடையும்படி சாபம் பெற்றார். மேலும் தவம் செய்யச் செல்லும்போது வியாசரைச் சந்தித்து ஞானம் பெற்றார். வாழ்வில் பல அவமதிப்புக்களை அடைந்தாலும் இறுதியில் தன் தவ வலிமையால் சிரஞ்சீவிப் பட்டம் பெற்றார்.
பரசுராமன்: சமதக்னி முனிவர்க்கும் இரேணுகாவுக்கும் பிறந்தவர். சிவபெருமானை எண்ணித்தவம் புரிந்து அவரிடமிருந்து பரசு என்ற ஆயுதத்தைப் பெற்றார். தந்தை சொற்படி தாயைக் கொன்று மீண்டும் தந்தையாலே தாயை உயிர்ப்பித்தவர். தன் தாய், தந்தையரைக் கொன்ற கார்த்தவீர்யார்ச்சுனனின் மகனைக் கொன்றதோடு இருபத்தோரு தலைமுறை அரசர்களைக் கொன்று அழித்தார். தன்னிடமிருந்த சிவ தனுசை இராமன் வளைத்து ஒடித்ததால் கர்வம் நீங்கித் தவம் செய்யச் சென்றார். அம்பை எனும் காசிராஜன் மகளுக்காகப் பீஷ்மருடன் போர் செய்து தோற்றார். கர்ணனுக்கு பல வில்வித்தைகளைக் கற்பித்தார். அவன் தன்னை யோர் பிராமணன் என்று பொய் கூறியதை அறிந்தவுடன் தக்க சமயத்தில் கற்று வித்தை பலியாது எனச் சாபமிட்டவர். மகேந்திர பர்வதத்தில் இன்றும் இவர் தவமியற்றி வருகிறார். சிவபெருமானால் சீரஞ்சீவி பட்டம் பெற்றார். இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இவர் இடம் பெற்றிருப்பது இவரின் சிரஞ்சீவித் தன்மையைக் காட்டுகிறது.
விபீஷணன்: விசிரவசு முனிவர்க்கு கேகசியிடம் பிறந்த இவர் பிரம்மாவை எண்ணித் தவம் புரிந்து தன்னிடம் தருமசிந்தை நீங்காமல் இருக்க வரம் பெற்றார். இராவணனுக்கு பல அறிவுரைகள் கூறியும் அவன் கேளாததால் இராமனிடம் அடைக்கலமானவர். பிரமனின் மகனான இவர் சரஸ்வதியின் சாபத்தால் அரக்கனாகப் (விபீஷணனாக) பிறந்தார்.
தன் தவவலிமையால் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர். இராமனிடம் இருந்து விஷ்ணு மூர்த்தியின் விக்ரகத்தையும் விமானத்தையும் பெற்றவர். காவிரிக்கரையிலிருந்து அவற்றைப் பெயர்த்தெடுக்க முடியாமையால் வருடம் ஒரு முறை ஸ்ரீரங்கம் வந்து தரிசித்துச் செல்பவர்.
மாபலி: பிரகலாதனின் பேரனான இவர் விரோசனன் என்ற அசுரனுக்கும் தேவிக்கும் பிறந்த வீரர். இவர் செய்ததொரு வேள்வியிலிருந்து குதிரை, தேர், சிங்கத்துவசம், தனுசு இரண்டு அம்பறாத் தூணி, ஒரு கவசம் என்பன கிடைத்தன. இவர் அசுவமேதயாகம் செய்கையில் திருமால் வாமனராய் வந்து மூன்றடி மண் கேட்டு இவரைப் பாதாளத்தில் அழுத்தினார். மகாபலி சிரஞ்சீவியாதலால் வருடம் தோறும் நடைபெறும் ஓணத் திருநாளில் தன்னாட்டு மக்களைச் சென்று காண வேண்டும் எனக்கேட்டு வரம் பெற்றார். கேரள மக்களும் அன்றைய தினம் மாபலி போல் வேடமிடுகின்றனர்.
அனுமான்: கேசரிக்கும் அஞ்சனைக்கும் பிறந்தவர். வாயு அம்சம். இவர் இளம் வயதிலேயே சூரியனைப் பழம் என்றெண்ணிப் பற்றச் செல்ல இந்திரனால் அடியுண்டவர். இதைக் கண்ட தந்தை, கோபித்து ஸ்தம்பிக்க அனைத்து தேவரும் கடவுளரும் வந்து குறை பொறுக்க வேண்டினர். தேவர்கள் விரும்பிச் சீரஞ்சீவி பட்டம் தந்தனர். இராமபிரானுக்குப் பல வகையில் பணி செய்து தாசனுக்கு இலக்கணமாத் திகழ்பவர். புஷ்ப யாத்திரை சென்ற வீமனது கர்வத்தை தன் வாலைத் தூக்கச் செய்து கர்வத்தை அடக்கியவர். கருடனின் கர்வத்தை அடக்கித் தன் வாலினால் அவரைத் துவாரகையில் தள்ளியவர்.
சிரஞ்சீவியர் எழுவருள் அநுமான் மட்டுமே நித்ய பிரம்மச்சாரி. இவர் தன் தந்தையால் சிரஞ்சீவிப் பட்டம் பெற்றார். பிறரோ இடையறாது புரிந்த தவத்தால் அழியா வாழ்வாகிய சிரஞ்சீவி பட்டம் பெற்றனர். எனவே அசுரரோ, அந்தணரோ, சத்ரியரோ யாராகிலும் செயற்கரிய தவம் இயற்றினால் சிரஞ்சீவிப் பட்டம் பெறலாம் என்பது தெளிவாகிறது. |
|
|
|