|
காஞ்சிபுரம் மடத்திற்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் 50 மாணவர்களுடன் பரமாச்சாரியாரை காண வந்தார். ஆனால் அன்று பரமாச்சாரியார் மவுன விரதம் இருக்கும் நாளாக இருந்தது. இறை தியானத்தில் தோய்ந்திருக்கும் அவர், இது போன்ற நாட்களில் பொதுவாக யாரையும் சந்திப்பதில்லை. சந்தித்தால் பேச நேரிடும். அதிலும் மாணவர்களிடம் கட்டாயம் பேசித்தான் ஆகவேண்டும். காஞ்சி பரமாச்சாரியார் மேற்கொண்டது சாதாரண மவுனம் அல்ல, காஷ்ட மவுனம். அதாவது சைகையால் கூடப் பேசாத நாள். மடத்தின் பணியாளர் சிந்தித்தார். என்ன ஆனாலும் சரி... பரமாச்சாரியாரிடம் தகவலைத் தெரிவிப்பது தான் சரி என முடிவு செய்தார். அதன் பிறகு என்ன செய்வதென்று பரமாச்சாரியாரே முடிவெடுக்கட்டும். மாணவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு பரமாச்சாரியாரிடம் சென்றார் பணியாளர். விஷயத்தை சற்றுத் தயங்கியவாறு தெரிவித்தார். பரமாச்சாரியார் கணீரென்ற குரலில் `அவர்களை உடனே இங்கு அழைத்து வா!` என வாய் திறந்து உத்தரவிட்டார்! பணியாளருக்கு வியப்பு. மவுனத்தை எதன் பொருட்டும் கைவிடாத பரமாச்சாரியார் இன்று கைவிட்டு விட்டாரே? இது எப்படி?மாணவர்கள் பரமாச்சாரியார் முன் ஆவலோடு வந்து நின்றார்கள். அவர்களுக்கு பத்து நிமிடம் அருளுரை வழங்கினார் அவர்.
பிரசாதம் கொடுத்து `அனைவருக்கும் என் ஆசி என்றும் உண்டு!` எனக் கூறி அனுப்பி வைத்தார். மாணவர்கள் விடைபெற்றுச் சென்றதும், பணியாளர் வியப்போடும் தயக்கத்தோடும் கேட்டார்: சுவாமி! எவ்வளவு பெரிய பதவியில் உள்ளவர்கள் வந்தாலும் இது போன்ற நாளில் நீங்கள் ஒருமுறை கூடப் பேசியதே இல்லையே? எதன் பொருட்டும் விரதத்தைக் கைவிடாத நீங்கள், இன்று கைவிட்ட காரணம் என்ன என்று தெரிந்துகொள்ளலாமா?பணியாளரை சற்றுநேரம் அருள்பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த பரமாச்சாரியார், புன்முறுவல் பூத்தவாறு விளக்கினார். வந்த குழந்தைகள் எல்லாம் எந்த ஸ்கூல்லேர்ந்து வந்திருக்கான்னு நீ சொன்னாய் அல்லவா? நான் என் மவுனத்தை கைவிட்டது அதனால் தான். அவர்கள் எல்லாம் பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்கள். அவர்களுக்கு தரிசனம் என்பது என்னுடைய தோற்றமில்லையே! குரல் தானே! அதைக் கேட்கத் தானே தொலைதுாரத்திலிருந்து ஆவலோடு வந்திருக்கிறார்கள்! பார்வையற்ற, அந்தக் குழந்தைகளை மகிழ்விப்பதை விட என் மவுன விரதம் ஒன்றும் முக்கியம் இல்லை.பரமாச்சாரியாரின் பதிலைக் கேட்ட பணியாளர், நெகிழ்ச்சியில் தளும்பிய விழிகளைத் துடைத்துக் கொண்டார். |
|
|
|