|
காட்டுக்குச் சென்ற மன்னர் தூரத்தில் தென்பட்ட விலங்கை கொல்ல அம்பு தொடுத்தார். அம்பு பட்டதும் ஐயோஎன்னும் அலறல் ஒலி கேட்டது. திடுக்கிட்ட மன்னர் ஒலி கேட்ட திசை நோக்கி ஓடினார். அங்கு ஒரு சிறுவன் அம்பு பாய்ந்து இறந்து கிடந்தான். வருந்திய மன்னர் வீரர்களிடம், சிறுவனின் தந்தையை தன்னிடம் அழைத்து வரும்படி வேண்டினார். சிறுவனின் தந்தையைத் தேடி கண்டுபிடித்த வீரர்கள் அரண்மனைக்கு அழைத்து வந்தனர். ஏழை விவசாயி வருவதைக் கண்ட மன்னர், ஐயா... பெரிய தவறு செய்து விட்டேன். விலங்கு என நினைத்து தவறுதலாக சிறுவன் மீது அம்பு தொடுத்து விட்டேன் என வருந்தினார். பதிலளிக்காமல் விவசாயி மவுனம் காத்தார். மன்னரின் திட்டப்படி அமைச்சர் இரு தட்டுகளுடன் அங்கே வந்தார். ஒன்றில் பொற்காசுகளும், மற்றொன்றில் கூரிய வாளும் இருந்தது. விவசாயியிடம், இந்த பொற்காசுகளை ஏற்றுக் கொண்டு என்னை மன்னியுங்கள். அல்லது வாளைக் கையில் எடுத்து என்னைக் கொன்று பழி தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார் மன்னர். மவுனம் களைத்த விவசாயி, மன்னா... உயிருக்கு விலையாக இந்த பொற்காசுகளைப் பெற எனக்கு மனமில்லை. அதே நேரத்தில் தவறுக்காக உயிரையும் தரத் துணிந்து விட்ட நல்லவரான தங்களைக் கொல்லவும் விரும்பவில்லை. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லதாகட்டும் என பதிலளித்தார். அவரது பேச்சை கேட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் பூக்களாக பெருகியது.
|
|
|
|