|
அவர் திருப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர். காஞ்சிபுரம் செல்லும் போது மகா பெரியவரை தரிசனம் செய்வது வழக்கம். அன்று ஒரு நண்பருடன் சென்றார். அவரது நண்பரோ பெரியவரை அதுவரை தரிசித்ததில்லை. பெரியவரின் ஞாபக சக்தி அபாரமானது. ஆயிரக்கணக்கானோரை அவர் பார்த்தாலும், பலரது குடும்ப விபரங்களையும் நினைவில் வைத்திருந்து விசாரிப்பது வழக்கம். ஆடிட்டர் குடும்ப நலன்களை விசாரித்த பெரியவர், பின் அவரது நண்பரிடம் பேசினார். முதல் கேள்வியே நண்பரின் ஜாதியைப் பற்றியது தான். நாங்கள் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்!- பணிவோடு பதில் சொன்னார் நண்பர். பரமாச்சாரியார் மகிழ்ச்சியோடு செட்டியார் இனத்தவரின் பெருமைகளைச் சொன்னார். பாரத தேசம் முழுக்க செட்டியார்கள் செய்துள்ள நல்ல காரியங்கள் எத்தனை இருக்கின்றன தெரியுமா? காசிக்குப் போனால்கூட, அங்கே அவர்கள் கட்டிய தர்ம சத்திரம் இருக்கிறது. ஆலயத் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் குலமல்லவா அது? நம் கலாசாரம் தழைத்திருப்பதில் செட்டியார்களின் பங்கு மகத்தானது. என்று பல உதாரணங்களோடு தொடர்ந்து பேசியவர், அதோடு விடவில்லை. அவரிடம் மேலும் ஒரு கேள்வி கேட்டார். செட்டியார்களில் நிறையப் பிரிவுண்டே? நீங்கள் எந்தப் பிரிவு?
பன்னிரண்டாம் செட்டியார் பிரிவு! அவா ரொம்ப ஒசந்த மனுஷா தெரியுமோ? ஆசாரம்னா அப்படியோர் ஆசாரம். பரம்பரை பரம்பரையா தீவிர சைவாள். அசைவம் அவா பக்கத்திலேயே நெருங்காது. வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை எத்தனையோ மகான்கள் புலால் உண்ணாமையைப் பெரிய விரதமாப் பேசியிருக்கா! புத்தர் கூடப் புலாலை எதிர்த்தவர் தான். இந்தச் செட்டியாரை உலகமே கும்பிடறதுன்னு வள்ளுவர் சொல்றார். புலாலை மறுத்தானை உலகம் கைகூப்பித் தொழும்னா அதானே அர்த்தம்? இப்படி, செட்டியார் குலத்தின் பெருமையையும் முக்கியமாக புலால் உண்ணாமையின் மகத்துவத்தையும், விடாமல் பேசிக்கொண்டே போனார். தரிசனத்திற்கு வந்திருந்த அனைவரும் பெரியவரின் அமுதமொழியில் திளைத்தார்கள். அந்த நண்பரின் கண்களில் மட்டும் கரகரவெனக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆடிட்டருக்குத் தன் நண்பர் ஏன் அழுகிறார் என புரியவில்லை. நல்லது. க்ஷேமமா இருங்கோ! என்று திருநீறு கொடுத்த பெரியவர், செட்டியாரைக் கூர்ந்து பார்த்தார். பின் ஓர் உத்தரவுபோல் சொன்னார்.
மடத்துல சாப்பாடு இருக்கும். சாப்பிட்டுட்டுப் போங்கோ. ஆடிட்டரும், நண்பரும் பெரியவரை வணங்கி, மடத்தில் சாப்பிட்டார்கள். சாப்பிடும்போது கூட நண்பரின் விழிகளில் கண்ணீர் தளும்பியே இருந்தது. மடத்தை விட்டு வெளியே வந்ததும், ஆடிட்டர் நண்பரிடம் கேட்டார்: பெரியவர் பேசும்போது ஏன் கண் கலங்கிக் கொண்டிருந்தீர்கள்? நண்பர் தழதழப்போடு பதில் சொன்னார்: அந்த மகான் பேசப்பேச நான் பிரமித்து, குற்ற உணர்வோடு உட்கார்ந்திருந்தேன். ஏனென்றால் நேற்றுத்தான் ஒரு நண்பரின் வற்புறுத்தலின் பேரில், என் ஜாதி வழக்கத்திற்கு விரோதமாக, முதல் முறையாக அசைவம் சாப்பிட்டேன். இதோ மடத்துப் பிரசாதத்தை இன்று சாப்பிட்டு விட்டேன். இனி என் வாழ்நாளில் அசைவத்தைத் தொடமாட்டேன். நண்பர் விழிகளைத் துடைத்துக் கொண்டார். பெரியவர் மனிதர்களைத் திருத்தக் கடைப்பிடிக்கிற வழிகள்தான் எத்தனை விதம். |
|
|
|