|
|
மனைவியைப் பிரிந்த ராமனுக்குத் தன்னைப் போன்றவர்களின் வேதனை புரிந்தது. வாலி வதம், விபீஷணன் சரணாகதிக்கு இந்த வேதனை தான் மூல காரணம் என்று கூட சொல்லலாம். அப்படி பார்த்தால் லட்சுமணனும், மனைவியைப் பிரிந்திருப்பவன் தானே? அவன் மீது ராமன் ஏன் பரிவு காட்டவில்லை? இத்தனைக்கும் ராம, லட்சுமணருக்கு ஒரே நேரத்தில் தான் திருமணம் நடந்தது. மிதிலாபுரியில் இருந்த சிவதனுசை முறித்து அதற்குப் பரிசாக சீதையைக் கைபிடித்தான் ராமன். அப்போது லட்சுமணனுக்கு தன் மகள் ஊர்மிளையைத் திருமணம் செய்து கொடுத்தார் ஜனகர். ‘‘சகோதரரான நாங்கள் நால்வரும் ஒன்றாகப் பிறந்தோம். எனக்கும், லட்சுமணனுக்கும் திருமணமாகும் இந்த நேரத்தில் பரதன், சத்ருக்னனுக்கும் திருமணம் நடத்துவது தான் முறை. அவர்களுக்கு ஏற்ற பெண்கள் அமையாவிட்டால், அது வரை காத்திருப்பேன். சகோதரர் நால்வருக்கும் ஒரே நேரம் திருமணம் முடிப்பதையே விரும்புகிறேன்’’ என்றான் ராமன். அதைக் கேட்டு பெருமை பொங்கப் பார்த்தார் விஸ்வாமித்திரர். ‘‘உன் போல சகோதரன் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்’’ எனப் பாராட்டினார். ஜனகரின் தம்பியான குசத்வஜனின் மகள்களான மாண்டவி, சுருதகீர்த்தியை முறையே பரதன், சத்ருக்னன் திருமணம் செய்யலாம் எனக் கருதினார். அதன்படியே சகோதரர் நால்வருக்கும் திருமணம் நடந்தேறியது. ராமன் காட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்ட போது லட்சுமணனும் அண்ணனுடன் வர விரும்பினான். பிடிவாதம் செய்து சம்மதத்தையும் பெற்றான். ராமனின் மனைவி சீதை காட்டுக்கு செல்வது போல, லட்சுமணனின் மனைவி ஊர்மிளையும் செல்வது தானே முறை? ராமனிடம் சம்மதம் பெற்ற பிறகு தான் லட்சுமணனுக்கு மனைவியின் நினைவு வந்தது. தனியாகச் சென்றால் தான் அண்ணனுக்கு சேவை செய்ய முடியும். அதற்கு மனைவி சம்மதிப்பாளா? சீதை போல தானும் வருகிறேன் என்றால் என்ன செய்வது என யோசித்தான். அவளைச் சந்திக்க வந்தான் லட்சுமணன். முகமலர்ச்சியுடன் வரவேற்றாள். கையைப் பிடித்து கணவரை ஆசனத்தில் அமர்த்தி அருகில் அமர்ந்தாள். ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப் போவதில்லை என்பதும், அண்ணனுடன் தானும் காட்டிற்குச் செல்வதும் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் புரிந்தது. ‘‘ஊர்மிளை, வந்து....’’ என்றான் லட்சுமணன். ‘‘நாளை பட்டாபிஷேகம் நடக்க வாய்ப்பில்லை’’ என தயங்கியபடி கூறினான். ‘‘என்னாயிற்று? அவருக்கு உடல்நலமில்லையா?’’ எனப் பதறினாள். ‘‘நீங்கள் எப்படி இதை தாங்குவீர்கள்? என கலங்கினாள். ‘‘ராமனுக்கு பதிலாக பரதன் முடிசூட வேண்டும் என தந்தையார் ஆணையிட்டார்’’ என தெரிவித்தான் லட்சுமணன். அவ்வப்போது ராமனின் உயர்ந்த குணங்களை சிலாகித்து கணவர் சொன்னதை எல்லாம் கேட்ட அவளுக்கு, ராமனின் மீதான மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருந்தது. ‘பட்டாபிேஷகம் உனக்கு அல்ல; தம்பி பரதனுக்கே’ என மறுத்த போதும் சம்மதித்த ராமனின் பரந்த உள்ளம், அவளது எண்ணத்திற்கு மேலும் வலுவூட்டியது. ‘‘அன்னை சீதையும் காட்டிற்குச் செல்கிறார்’’ என லட்சுமணன் மெல்ல மனைவியை பக்குவப்படுத்தினான். ‘‘சீதையுமா?’’ திடுக்கிட்டாள் ஊர்மிளை. மிதிலையில் தன்னுடன் வளர்ந்த சீதையை நன்றாக அறிவாள் அவள். யாகசாலை நிலத்தை உழுத போது ஜனகருக்கு கிடைத்த பொக்கிஷம் அவள். சிறு வயது முதலே பெருந்தன்மை, அன்பு, விட்டுக் கொடுக்கும் பண்பு இவற்றால் அனைவரின் மனதையும் கவர்ந்தவள் சீதை. ராமனைக் கைபிடித்த போது மாவீரன் ராமனுக்கு ஏற்றவள் சீதை தான் என ஊர்மிளை மகிழ்ந்தாள். அந்த சீதை இப்படி காட்டுக்குச் செல்ல நேர்ந்ததே என கண்ணீர் விட்டாள். ஆனாலும் ‘‘சீதை எடுத்த முடிவு சரி தான்’’ என தெரிவித்தாள். இதைக் கேட்ட லட்சுமணன் சந்தேகத்திற்கு ஆளானான். ‘‘சீதையைப் போல ஊர்மிளை நானும் வருகிறேன் என்பாளோ? அப்படி வந்தால் ஏற்க முடியுமா? ஊர்மிளை வருவதை அண்ணனும் மறுக்க மாட்டார் தான். ஆனாலும் தன்னால் ராம சேவையை குறை இல்லாமல் செய்ய முடியாதே! மனைவி உடனிருப்பது சேவைக்கு இடைஞ்சல் தானே?’’ என அவனது மனம் அலை பாய்ந்தது. ‘‘ ஊர்மிளை! நானும் அண்ணனுடன் செல்கிறேன். ஏனென்றால் அவருக்கு சேவை செய்வதே என் வாழ்வின் ஒரே நோக்கம்’’ என்று தயக்கமுடன் தெரிவித்தான் லட்சுமணன். ஊர்மிளையிடம் சலனம் ஏதுமில்லை. ‘‘எனக்கு ஒரு வாக்குறுதி தர முடியுமா?’’ எனக் கேட்டாள் அவள். ‘‘என்ன ஊர்மிளை..?’’ என பயத்துடன் கேட்டான் லட்சுமணன். ‘‘ நாட்டை விட்டு ராமனுடன் காட்டுக்குப் போகிறீர்கள். அப்போது நீங்கள் தான் அவருக்கு காவல் புரிய வேண்டியிருக்கும். அப்போது உணர்வு மேலீட்டால் உங்களின் மனம் பேதலித்து விடக் கூடாது. அதனால் இப்போதே சபதம் ஒன்றை மேற்கொள்ளுங்கள்’’ ‘‘சபதமா? என்ன அது?’’ ‘‘அயோத்தி திரும்பும் வரை நீங்கள் என்னைப் பற்றி நினைக்கவே கூடாது. இல்லாவிட்டால், உங்களின் சேவைக்கு பங்கம் நேரும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்’’ நெகிழ்ச்சியுடன் பார்த்தான் லட்சுமணன். இப்படி ஒரு குணவதியை அடைய என்ன தவம் செய்தேனோ... என மனதிற்குள் பூரித்தான். அது மட்டுமின்றி கணவர் அயோத்தி திரும்பும் வரை, ஆழ்ந்த நித்திரையை வரமாக அளிக்க வேண்டும் என சூரிய பகவானிடம் வேண்டி உறக்கத்தில் ஆழ்ந்தாள். இதற்கிடையில் லட்சுமணனும் தனக்கு உறக்கம் வரக் கூடாது என சூரிய பகவானை வேண்டிக் கொண்டு ‘உறங்காவல்லி’யாக ராம சேவையில் ஈடுபட்டான். இந்த நிலையில் தான், தன் தம்பி லட்சுமணனுக்கு ஒருபோதும் மனைவி ஏக்கம் உண்டாகாது என்ற நம்பிக்கை கொண்டிருந்தான் ராமன்.
|
|
|