|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » சகுனியாகிய நான்… |
|
பக்தி கதைகள்
|
|
-ஜி.எஸ்.எஸ்.
மகாபாரதத்தைப் பொருத்தவரை யாருமே முழுமையாக நல்லவர்கள் அல்ல. யாருமே முழுமையாகத் தீயவர்கள் அல்ல. என்றாலும்கூட அவர்களில் மிகத் தீயவன், மிக வஞ்சகன் யார் என்று கேட்டால் உங்களைப் பலரும் என்னைத்தான் சுட்டிக் காட்டுவீர்கள். இருக்கட்டும், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. காந்தார மன்னன் சுலபனுக்குப் பிறந்தவன் நான். என் சகோதரி காந்தாரிக்குப் பல விதங்களில் அநீதி இழைக்கப்பட்டது. பீஷ்மர் தன்தம்பி மகனுக்காக பெண் கேட்டு காந்தாரத்துக்கு வந்தார். பாண்டுவுக்காக அவர் பெண் கேட்கிறார் என்று முதலில் நினைத்தோம். பிறகு தான் தெரிந்தது திருதராஷ்டிரனுக்கு அவர் பெண் கேட்டு வந்திருக்கிறார் என்று. திருதராஷ்டிரன் பார்வை இழந்தவர். அவருக்கா என் சகோதரியை மணம் முடிப்பது? பீஷ்மர் தனியாக வரவில்லை. தன் படையுடன் வந்திருந்தார். காசி ராஜனின் மகள்களின் சுயம்வரத்திற்கு, தன் தம்பிக்கு பெண் கேட்பதற்காகச் சென்றிருந்த பீஷ்மர், வந்திருந்த மன்னர்களைப் போரில் வென்று இளவரசிகளை கட்டாயமாக அழைத்துச் சென்றதை அறிந்திருந்தோம். ஆக காந்தாரியை திருதராஷ்டிரருக்கு மணமுடிக்க நாங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் பீஷ்மரின் படைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது புரிந்தது. ஹஸ்தினாபுரத்தைப் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. இந்த நிலையில் திருமணத்திற்கு என் தந்தை சம்மதித்தார். காந்தாரியின் திருமணத்துக்காக நாங்கள் ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்தோம். அடுத்த இடி காத்திருந்தது. திருதராஷ்டிரனுக்குதான் இளவரசுப் பட்டம் சூட்டுவதாக இருந்தது. மகாமந்திரியாக விதுரரும், தளபதியாக பாண்டுவும் செயல்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் விதுரர் ராஜநீதியைக் குறிப்பிட்டார். பார்வை இழந்த மன்னனால் பொதுமக்களின் குறைகளை சரியாக அறிந்து கொள்ள முடியாது என்றும் கண்ணிழந்தவன் அரசனாக முடியாது என்று சாஸ்திரம் கூறுகிறது என்றும் குறிப்பிட்டார். ஆக இளவரசுப் பட்டம் பாண்டுவுக்கு என்றானது. இப்படி அடுக்கடுக்காக அநீதிகள் இழைக்கப்பட, என் சகோதரி தனக்குத் தானே ஒரு அநீதியையும் தேர்வு செய்தாள்! தன் கணவனுக்குப் பார்வை இல்லை என்பதால் தானும் பார்வை இல்லாது வாழத் துணிந்தாள். துணியால் தன் கண்களைக் கட்டிக் கொண்டாள். அவள் வாழ்வு இருண்டு போனது என்பதை அறிந்ததும் துடித்தேன். கூடாது. விதி இனியும் அவளை ஆட்டிப்படைக்க விடக்கூடாது என்று தீர்மானித்தேன். காந்தாரத்துக்கு திரும்பாமல் ஹஸ்தினாபுரத்திலேயே தங்கத் தொடங்கினேன். ஹஸ்தினாபுரத்தின் அரசியலில் அதிகமாகக் குறுக்கிட்டேன். பீஷ்மருக்குத் தீராத தலைவலி ஆனேன். துரோணரின் எரிச்சலை சம்பாதித்தேன். துரியோதனின் கோப உணர்வைத் துாண்டிக் கொண்டே இருந்தேன். பாண்டவர்களுக்கு எதிரான அத்தனை விஷயங்களையும் செய்தேன். பாண்டவர்களிடம் எனக்கு எந்தவித நேரடி பகையும் இல்லை. என்றாலும் கவுரவர்களின் மனங்களில் பாண்டவர் மீது தொடர்ந்து வெறுப்பு இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். குரு வம்சம் அழிய வேண்டும். இதுதான் என் லட்சியம். துரியோதனனின் மூலம் சிறுவன் பீமனுக்கு விஷம் கலந்த உணவை அளிக்கச் செய்தேன். அரக்கு மாளிகையில் பாண்டவர்களைத் தங்க வைத்து அவர்களை தீக்கிரையாக்க திட்டம் தீட்டினேன். வனவாசத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு துர்வாச முனிவரை அனுப்பினேன். அவருக்கு போதிய உணவு தர முடியாமல் பாண்டவர்கள் அவரது சாபத்துக்கு உள்ளாவார்கள் என்பது எனது திட்டம். ஆனால் எனது இந்த அனைத்து திட்டங்களும் தோற்றுப்போயின. எனினும் நான் ஏற்பாடு செய்த சூதாட்டம் பெரிதும் கை கொடுத்தது. ஒரு விளையாட்டில் கைதேர்ந்தவனாக இருப்பது அரசியலுக்கு உதவுமா? பகடை ஆட்டத்தில் நான் ஒப்பற்றவன். இதனால் ஹஸ்தினாபுர அரசையே என்னால் ஆட்டிப் படைக்க முடிந்தது. யுதிஷ்டிரனின் பலவீனங்களை துல்லியமாக உணர்ந்து கொண்டேன். பகடை ஆடும்படி தன் பெரியப்பா (திருதராஷ்டிரன்) அழைப்பு விடுத்தால் அவனால் அதை மறுக்க முடியாது. மறுத்தால் அது அவரை அவமதிப்பதுக்கு சமம் என்று அவன் நினைப்பான். தவிர அவனுக்கே பகடை ஆட்டத்தில் ஈடுபட வேண்டுமென்ற பலவீனம் உண்டு. ஆக பகடை விளையாட்டை ஏற்பாடு செய்ததில் பல உளவியல் காரணங்களை ஆராய்ந்து செயல்பட்டேன். துரியோதனனுடன்தான் பகடை விளையாட்டில் ஈடுபடுவோம் என்று யுதிஷ்டிரன் நினைத்திருக்க, துரியோதனனின் பிரதிநிதியாக நான் விளையாடுவேன் என்றேன். இதற்கும் ஒத்துக் கொண்டான் அப்பாவி யுதிஷ்டிரன். அவன் ஒவ்வொன்றையும் வைத்திழந்த போது வார்த்தைகளைத் துாண்டில்களாக்கி அவனை அடுத்தடுத்து பல பொருள்களையும் பின்னர் தன்தம்பிகள், தான், தன் மனைவி ஆகியோரையும் பணயமாக வைத்து இழக்கச் செய்தேன். பகடை ஆட்டத்தைப் பொருத்தவரை நான் தந்திரங்களில் கைதேர்ந்தவன். நான் கூறும் எண்தான் பகடையில் விழும். எலும்பிலிருந்து உருவாக்கப்பட்ட எனது பகடை நான் சொல்வதைக் கேட்கும். அப்படி அரிதாக விழாத போதிலும் பார்ப்பவர் கண்களில் நான் எண்ணிய எண்தான் விழுந்ததாக அவர்களை நம்ப வைக்கும். துரியோதனனின் ஆணைப்படி திரவுபதி சபைக்கு இழுத்து வரப்பட்டாள். அவள் அவமானப்பட்டதை ரசித்து மகிழ்ந்தேன். வெகுண்ட சகாதேவன் என்னைக் கொல்லப் போவதாக சபதம் இட்டான். மகாபாரதப் போரில் முழுமையாகப் பங்கு கொண்டேன். சக்கர வியூகம் அமைத்து அபிமன்யுவைக் கொல்வதற்கு எங்கள் தரப்பில் இருந்த துரோணர், கர்ணன் போன்றவர்கள் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. என்றாலும் துரியோதனனை வசப்படுத்தி இதைச் செய்ய வைத்தேன். அபிமன்யு இறந்தான். பதினெட்டு நாட்கள் நடைபெற்றது மகாபாரத யுத்தம். இதில் இறுதி நாள் வரை போரிட்ட முக்கியமானவர்களில் நானும் ஒருவன். தன் கோடாரியை என் மார்பில் குத்தி தன் சபதத்தை நிறைவேற்றினான் சகாதேவன். |
|
|
|
|