|
தசரதனின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற அரண்மனையில் அனைவரும் தயாரானார்கள். எண்ணெய்க் கொப்பரையில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட தசரதன் மேனி கொஞ்சமும் கெடாமல் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்த கோலத்தில் அப்படியே இருந்தது கண்டு அனைவரும் அதிசயித்து பின் சோகமும் கொண்டனர். இரு மகன்கள் கானகம் ஏகிவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் இரு பிள்ளைகளில் மூத்தவன்தானே நீத்தார் கடன் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஆனால் பரதனோ முற்றிலும் மனம் ஒடிந்து போயிருந்தான். ஒளியிழந்திருந்த கண்களிலிருந்து நீர் மட்டும் ஆறாகப் பெருகி வழிந்து கொண்டிருந்தது. மனசுக்குள் வெறுப்பு மண்டியிருந்தது. ‘இவரை என் தந்தையார் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறேன். மனைவி சொன்னாள் என்பதற்காக மூத்த மகனை நாட்டை விட்டே வெளியேற்றிவிட்ட பாவி அல்லவா இவர். மூத்த தாரத்துப் பிள்ளையை அவ்வாறு காட்டுக்கு அனுப்பச் சொல்லி நிர்ப்பந்திக்கிறாள் என்றால் இந்த இளைய மனைவி எத்தனை கொடுமையானவளாக இருப்பாள் என்று அவரால் ஏன் எண்ண இயலாமல் போயிற்று? இப்படி இரக்கமற்ற ஓர் செயலுக்கு வித்திட்ட அவள் இன்னும் என்னவெல்லாம் செய்யத் துணிவாளோ? தாய்மைக்கும், பாச உணர்வுக்கும் களங்கமாக விளங்கும் அவளுடைய பேச்சைக் கேட்ட தசரதனும் இவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டுவிட்டாரே! இப்படி ஒரு தந்தைக்கு நான் ஈமக் கிரியைகள் செய்யத்தான் வேண்டுமா?‘ என்றெல்லாம் மனசுக்குள் கோபத்தால் கொந்தளித்தான் பரதன். அவனுடைய எண்ணத்திற்கு வலு சேர்ப்பது போல அமைச்சர் சுமந்திரன் அங்கே வந்தார். அங்கே குழுமியிருந்த வசிஷ்டரையும் மற்றும் பிறரையும் தயக்கத்துடன் பார்த்தார். பிறகு மிகவும் தாழ்ந்த குரலில், ‘‘நம் மன்னர் தன்னுயிர் நீங்கு முன் மிகுந்த விரக்தியில் ஆழ்ந்திருந்தார். தன்னிடமிருந்து ராமனைப் பிரித்த கைகேயி, இனி தனக்கு மனைவி என்ற தகுதியை இழக்கிறாள் என்று அரற்றினார். அதோடு அவருடைய கோபம் அப்போது அவருக்கு முன்னே இல்லாத பரதன் மீதும் பாய்ந்தது. ‘கைகேயி என் மனைவி இல்லை என்று நான் விலக்கியதால், அவளுக்குப் பிறந்த பரதன் என் மகனே ஆனாலும், அவனையும் மகன் அல்ல என்று நிராகரிக்கிறேன். ஆகவே ஒரு தந்தைக்கு ஆற்ற வேண்டிய எந்தக் கடமைக்கும் அவன் இப்போது முதல் தகுதியற்றவனாக ஆகிறான்,‘ என்று கூறி தன் இறுதி மூச்சை நீத்தார்…. ஆகவே…. ஆகவே….‘‘ என்று மிகவும் மன சஞ்சலமுற்றுப் பேசினார். ‘‘ஆஹா! என் எண்ணப்படியே ஆயிற்று. இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி பாபத்துக்குரியவனாக நான் ஆக வேண்டிய அவசியம் இல்லாமலேயே போயிற்று….‘‘ என்று வெறுப்பின் உச்சத்தில் பேசினான் பரதன். வேறு வழியில்லாமல் நான்காவது புத்திரனான சத்ருக்னன் அந்தக் கடமையை பூர்த்தி செய்ய வேண்டியதாயிற்று. இவனுக்கும் அரை மனசுதான். ஏனென்றால் இதற்குச் சற்று முன்னர்தான், ராமன் பிரிவுக்கு மூல காரணமானவள் மந்தரை என்ற உண்மையைத் தெரிந்து கொண்டு, ஒரு பெண் என்றும் பாராமல் அவளைக் கடுஞ்சொல் பேசித் தாக்கித் தன் கோபத்தை வெளிப்படுத்தினான் அவன். ஆனால் இப்போதும் தணியாத அந்த கோபத்தை தந்தையாரின் சிதையில் மூட்டப் போகும் அக்னியில் எரித்துவிட தயாரானான். சற்றுத் தொலைவிலிருந்தபடி சடங்கு நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்த தசரதனின் மூன்று மனைவியரும் விம்மி அழுது கொண்டிருந்ததை சுற்றியிருந்தவர்களைப் போல பரதனும் கவனித்தான். கோசலைக்குச் சமமாக சுமித்திரை துக்கம் கொள்வதில் நியாயம் இருக்கிறது. ஏனென்றால் இவள் ராமனுடன் தன் மகன் லட்சுமணனையும் பதினான்கு ஆண்டுகளுக்கு இழந்திருக்கிறாள். ஆனால் தன் அன்னை கைகேயியும் அவர்களுக்குச் சமமாக அழுவதன் காரணம்தான் அவனுக்குப் புரியவில்லை. குற்ற உணர்வா? தெரிந்தே செய்த தவற்றிற்கு மனசாட்சி கொடுக்கும் தண்டனையின் வேதனையா? ஆனால் அந்தப் பெண்மணிகள் மூவருமே ஒருவருக்கொருவர் தங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தின் தாக்கத்தால்தான் அப்படி சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை பரதனுக்குத் தெரியாதே! ஆகவே அவன் தன் தாயின் சோகத்தை பாசாங்கு, நடிப்பு என்றே மதிப்பிட்டான். அப்போதே, தன் தாய் எந்த பிரதான நோக்கத்திற்காக ராமனுக்கு துரோகம் செய்தாளோ, அந்த நோக்கம் நிறைவேறக்கூடாது என்று உறுதி பூண்டான். மூத்தவன் என்ற தகுதி இருந்தும், தனக்கு இளையவனான சத்ருக்னன் சம்பிரதாய சடங்குகளை மேற்கொள்வதை ஒரு மவுன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் பரதன். இது அவனைப் பொறுத்தவரை ஓர் ஒத்திகையாகவே இருந்தது. அதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டான். ஒத்திகை? ஆமாம், கானகம் சென்று ராமனின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரி மீண்டும் அயோத்திக்கு வரவழைத்து, சிம்மாசனத்தில் அமர்த்தி, அவன் ஆட்சி செய்யும் அழகையும் ஒரு மவுன சாட்சியாக, அவன் கண்டு களிக்கத் திட்டமிட்டிருக்கிறானே! எல்லாம் முடிந்துவிட்டது. தசரதனை கரையேற்றியாகி விட்டது. அது சார்ந்த சம்பிரதாயங்கள் எல்லாம் அடுத்தடுத்த நாட்களுக்கு வழக்கம்போல குறையின்றி நடந்தேறின. அடுத்தது என்ன? பரத பட்டாபிஷேகம்தானே? எல்லோருமே ஒருவகை மர்ம உணர்வுடனேயே சூழ்நிலையை கவனித்து வந்தார்கள். தசரதனின் மூன்று மனைவியரும் ஒன்றாகவே இருந்தது, தமக்குள்ளாகப் பேசிக் கொள்வது எல்லாம் பார்ப்பவர்களுக்கு விநோதமாக இருந்தது. இந்த துர்ப்பாக்கியமான சூழலுக்குக் காரணமானவள் கைகேயி. ஆனால் அவளுடன் சக களத்தியர் இருவரும் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்களே, எப்படி? ஆனாலும், பரதன் அரியணை ஏறப்போகும் நிகழ்ச்சி பாரபட்சமானதாயிற்றே! அது முற்றிலும் கைகேயியின் சுயநலமல்லவா? இருந்தும் அவளுடன் இவர்கள் சுமுகமாகப் பழகுகிறார்கள் என்றால், இனி, எதிர்காலத்தில் அவளுடைய ஆளுமைக்குக் கீழ் தாங்கள் வாழவேண்டிய கட்டாயம் இருப்பதாலா? பலரும் பலவிதமாக சிந்திக்க ஆரம்பித்தார்கள். பட்டாபிஷேக ஏற்பாடுகளைக் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு வசிஷ்டர் மேற்கொள்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க, அவரோ மிகுந்த தர்ம சங்கடத்துக்குள்ளானார். அந்த ராஜ வம்சத்தின் குலகுருவாகத் தான் பொறுப்பு வகித்திருந்தாலும், அந்த ராஜ பாரம்பரியப்படி மூத்தவன் அமர வேண்டிய அரியணையில் இளையவனை அமர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது. ஆனால், அப்படித்தான் ஒப்புதல் கொடுத்து, பின்னர் உயிர் நீத்தார் தசரதன் என்பதால் அதையே ராஜ கட்டளையாக ஏற்று அவர் ஆணையை நிறைவேற்ற வேண்டியதும் வசிஷ்டரின் கடமையாகி விட்டது! சூழலே சோகமயமாக, ஒருவருக்கொருவர் உற்சாகமாகப் பேசிக் கொள்வதும் குறைந்துபோக, வழக்கமான அரண்மனை நடவடிக்கைகள் எல்லாம் களையிழந்து போயின. ஆனால் திடீரென்று ஒரு திருப்பம். ராமன் காட்டிற்குப் போவதற்கும், தசரதன் மரணத்திற்கும் தானே காரணம் என்பதை அறிந்து தன்னைப் பார்க்கவும் விரும்பாத தன் மகன் பரதன், கைகேயிக்கு வித்தியாசமான கோலத்தில் காட்சியளித்தான். ஆமாம், அவன் மரவுரி அணிந்திருந்தான்! கைகேயிக்கு மட்டுமல்ல, பிற அனைவருக்குமே அவனுடைய தோற்றம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ராமனின் வனவாச கோலத்தையே தானும் மேற்கொண்டு, ராமனின் நினைவு யாரிடமிருந்தும் நீங்கிவிடாத வகையில், ராஜபீடத்தில் அமர்ந்து பரிபாலனம் செய்யப் போகிறானோ? பரதனுடன் இருந்த சத்ருக்னன்தான் அவர்களுக்கு விளக்கம் அளித்தான். ‘‘அண்ணா பரதன், கானகத்துக்குச் சென்று பெரியண்ணா ராமரை அயோத்திக்கு அழைத்து வரப் போகிறார். நானும் உடன் செல்கிறேன்,‘‘ என்று அவன் சொன்ன வாசகங்கள் அனைவருக்கும் காதில் தேனாகப் பாய்ந்தது. ‘‘நீங்களும் எங்களுடன் வருகிறீர்கள், அம்மா,‘‘ என்று கைகேயியைப் பார்த்து பரதன் சொன்னான். அதிர்ந்துபோன அவள் அவனைக் குழப்பத்துடன் பார்த்தாள். ‘‘ஆமாம், எந்த வாயால் ‘காட்டுக்குப் போ‘ என்று தீச்சொல் சொன்னீர்களோ, அதே வாயால், ‘திரும்ப வா‘ என்று சொல்ல வேண்டும். அதற்காகவே நீங்களும் வரவேண்டும்.‘‘ மனசுக்குள் உடனே ஒப்புக் கொண்டாலும், தயக்கத்துடன் சக ராணியரைப் பார்த்தாள் கைகேயி. அவர்களோ, ‘நாங்களும் வருகிறோம்,‘ என்று பளிச்சென்று கூறிவிட்டார்கள். ‘ராமன் திரும்ப வரப்போகிறான்,‘ என்ற செய்தி அயோத்தி நகரமெங்கும் சடுதியில் பரவி அனைவரையும் பரவசப்படுத்தியது. ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அதுவரை இயல்பான பேரெழில் கோலத்தை இழந்திருந்த அனைவரும் மீண்டும் உற்சாகம் கொண்டனர். ‘நாமும் போவோம். ராமனை மீட்டுக் கொண்டு வருவோம்,‘ என்று சொல்லி பெருந்திரளாக அரண்மனை முன் கூடிவிட்டார்கள். பரதனும், சத்ருக்னனும் அமர்ந்திருந்த தேர் முன்னே செல்ல, நாட்டின் படை சைனியங்களும், அவற்றைத் தொடர்ந்த மக்கள் கூட்டமும் உற்சாக நடை பயின்றதில், உருவான புழுதிப் படலம் வானத்தையே மறைத்தது – அவர்கள் மனதில் அதுவரை நிலவியிருந்த சோகப் புழுதி விடுதலை பெற்று மேல் நோக்கி உயர்ந்ததுபோல!
|
|
|
|