|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கண்ணீர் சிந்திய கடைக்காரர் |
|
பக்தி கதைகள்
|
|
உத்தர பிரதேசம் மதுராவுக்கு அருகிலுள்ள பிருந்தாவனத்தில் ‘பாங்கி பிஹாரி’ என்னும் கிருஷ்ணர் கோயில் உள்ளது. இருநுாறு ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்ட இக்கோயிலில் கிருஷ்ணர் பல லீலைகளை நடத்தியிருக்கிறார். இங்கு நடை சாத்தும் முன்பு கிருஷ்ணருக்கு பிரசாதமாக லட்டுகள் வைப்பது வழக்கம். கோயில் அருகிலுள்ள குறிப்பிட்ட பலகார கடையிலிருந்து லட்டுகளை வாங்குவர். மறுநாள் காலையில் கோயிலின் நடை திறக்கும் போது லட்டுகள் பூந்தியாக மாறி இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு வயதான பக்தர் ஒருவர் இங்கு பூஜை செய்து வந்தார். முதுமையின் காரணமாக அடிக்கடி மறதிக்கு ஆளானார். ஒருநாள் லட்டுகளை வைக்காமலேயே நடையை சாத்தினார். அன்றிரவு அந்த பலகாரக் கடைக்கு சிறுவன் ஒருவன் வந்தான். அப்போது கடையின் உரிமையாளர் கடையை பூட்டிக் கொண்டிருந்தார். ‘‘எனக்கு பசிக்கிறது. லட்டு தாருங்கள்’’ எனக் கேட்டான். ‘‘லட்டு தீர்ந்து விட்டது. நாளை வா’’ என்றார் கடைக்காரர். சிறுவன் விடுவதாக இல்லை. ‘‘கதவைத் திறங்கள். உள்ளே நான்கு லட்டு இருக்கும்’’ எனச் சொல்லி சிரித்தான். வேறு வழியின்றி கதவைத் திறந்த கடைக்காரர் நான்கு லட்டுகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். சிறுவனிடம் அதைக் கொடுக்க, “என்னிடம் காசு இல்லை” என்று சொல்லி கையில் அணிந்திருந்த தங்க வளையலை கழற்றிக் கொடுத்து விட்டு கோயிலை நோக்கி ஓடினான். மறுநாள் பூஜாரி நடையைத் திறந்த போது, கிருஷ்ணரின் கையில் வளையல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்தவர்களிடம் முறையிட்டார். இதைக் கேள்விப்பட்ட கடைக்காரர் தன்னிடம் இருந்த வளையலை எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றார். நடந்த சம்பவத்தை பூஜாரியிடம் தெரிவித்தார். அப்போதுதான் சுவாமிக்கு லட்டு வைக்க மறந்தது பூஜாரிக்கு ஞாபகம் வந்தது. கடைக்காரர் கொடுத்த வளையலை கிருஷ்ணருக்கு கையில் அணிவித்தார். “இவ்வளவு நாளாக சுவாமிக்கு லட்டு கொடுத்த பலனை அடைந்தேன். ‘பாங்கி பிஹாரி’ என்னோடு பேசி லட்டு வாங்கியதே போதும். பாக்கியசாலி நானே. புண்ணியம் செய்தவனும் நானே” எனக் கண்ணீர் சிந்தினார் கடைக்காரர்.
|
|
|
|
|