|
அரக்கனான ராவணன் கடுமையாகத் தவம் செய்து சிவபெருமானிடம் வரங்களைப் பெற்றான். அதை நல்ல முறையில் பயன்படுத்தாமல் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். தன்னை வெல்ல யாருமே இல்லை என்ற செருக்குடன் திரிந்தான். இந்நிலையில் இலங்கையில் இருந்து ஒருநாள் புஷ்பக விமானத்தில் ஏறி வடக்கு திசை நோக்கி புறப்பட்டான். ஓரிடத்தில் விமானம் மேலே செல்ல முடியாமல் நின்றது. திகைத்த ராவணன் விமானத்தை விட்டுக் கீழே இறங்கினான். அவனுக்கு எதிரில் நந்திதேவர் தோன்றி, ‘‘சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலை இது. தான் என்னும் அகந்தை கொண்ட உன்னால் இந்த மலையைத் தாண்டிச் செல்ல இயலாது. எனவே நீ மலையைச் சுற்றிக் கொண்டு பறந்து போ’’ என்றார். ஆணவம் கொண்ட ராவணன், ‘குரங்கு போல இருக்கும் நீயா என்னைத் தடுக்கிறாய்?’’ எனக் கேட்க ‘‘என்னைக் குரங்கு என கிண்டல் செய்த நீயும், உன் நாடும் குரங்கால் அழிய நேரிடும்’’ எனச் சாபமிட்டார் நந்திதேவர். உடனே ராவணன் கயிலை மலையை பெயர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். மலை அசைய ஆரம்பித்தது. ராவணனின் அகந்தையை அடக்க முடிவெடுத்தார் சிவபெருமான். தன் வலதுகால் பெருவிரலால் மலையை அழுத்த, அது சமநிலை அடைந்தது. அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் ராவணன் மலையின் அடியில் சிக்கினான். உடனே சிவபெருமானை சமாதானப்படுத்த இசைக்கத் தொடங்கினான். சிவபெருமானும் இரக்கப்பட்டு ராவணனை விடுவித்தார். அவனது இசை ஆற்றலை வியந்து ‘சந்திர ஹாசம்’ என்னும் வாளை பரிசளித்தார். ‘‘என் அகந்தையை அடக்கிய பரமேஸ்வரா! தங்களின் நடனத்தை தரிசிக்க விரும்புகிறேன்’’ என வேண்ட சிவபெருமானும் நடனமாடினார். மகிழ்ந்த அவன், ‘‘ஈஸ்வரா! உம் தலைவழியே சிந்தும் புனித கங்காநதி பூமியை புனிதமாக்குகிறாள். அந்த புனித பூமியில் ஆனந்தமாக நடனம் ஆடுபவரே! உமது கழுத்தில் மாலை போல ராஜநாகம் அசைந்தாடுகிறது. கையிலுள்ள உடுக்கை எழுப்பும் நாதத்திற்கு ஏற்ப தாண்டவம் ஆடுவதை நான் கண்டு மகிழ்கிறேன்’ என்னும் கருத்துடன் தொடங்கும் சிவதாண்டவ ஸ்தோத்திரம் என்னும் பாடலைப் பாடினான். இதை பாடினால் பாவங்கள் பறந்தோடும்.
|
|
|
|