|
கண்ணன் காதலுக்கு குருநாதர் பாரதியார். காளி காதலுக்கு குருநாதர் பரமஹம்சர். அதுபோல சிவன் மீது எனக்கிருந்த காதலுக்கு குருநாதர் ரமணர். அவர் பாடிய பாடல் தான் அக்ஷர மணமாலை. ஞாயிறுதோறும் அதைப் பாட கோயிலுக்குச் செல்வேன். அப்போது மனதிற்குள், ‘‘மகனே... என் கோயிலுக்கு வரும் பக்தையிடம் பேசிப் பார். கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.’’ என்றார் சிவபெருமான். அந்த பெண்ணின் பெயர் பூமதி. ‘எனக்கு இந்த விநாயகர் தான் எல்லாம்’ என்று சொல்லும் போதே அவளது கண்களில் கண்ணீர். ‘‘என் மகன் மத்திய அரசு பணிக்கு தேர்வு எழுதினான். ஆனால் தேர்வு ரத்தாகி விட்டது. அதுவும் நன்மைக்கே. விநாயகர் நல்வழி காட்டுவார்’’ என்றாள். ‘‘அம்மா...உங்கள் பையனின் கல்வித் தகுதியை கொடுங்கள். என் மூலம் தீர்வு கிடைக்கலாம்’’ என்று என் முகவரி அட்டையை கொடுத்தேன். அதை வாங்கி தன் காதல் தெய்வத்தின்(விநாயகர்) கையில் கொடுத்தாள். முதல் முறையாக என் முகவரி அட்டை கடவுளின் கையில்... கண்டு பிரமித்தேன். பூமதி தொடர்ந்தாள். ‘‘கடந்த ஒன்றரை வருடமாக எங்கு சென்றாலும் இரவோடு இரவாக கோயிலுக்கு வந்து விடுவேன். எனக்கு விநாயகர் தான் எல்லாம். எனக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போறான்?’’ என்றாள். மேலும்‘‘ இந்த கோயில் அர்ச்சகர் விநாயகருக்கு வெள்ளி கவசம் பண்ணப் போறதாக சமீபத்தில் என்னிடம் சொன்னார்’’ என்றாள் ‘‘அம்மா... வெள்ளி கவசம் பண்ண ரொம்ப செலவாகுமே’’ என்று நான் கேட்டேன். ‘‘7 லட்சம் வரைக்கும் ஆகும். என் மகனுக்கு வேலை கிடைத்ததும் பி.எப்., பணத்தில் லோன் போடலாமான்னு நினைச்சிருக்கேன்’’ என்றாள். என் கையில் 7 லட்சம் இருந்தாலும் கொடுக்கத் துணிய மாட்டேன். அப்படியே விரும்பினாலும் என்னிடம் இருப்பதை தருவேனே தவிர கடன் வாங்க மாட்டேன். என்னிடத்தில் உள்ள பக்தியின் ஆழமின்மை கண்டு எனக்கு நானே வெட்கப்பட்டேன். அந்த தாயிடம் பேச வைத்த சிவபெருமானுக்கு மானசீகமாக அபிஷேகம் செய்தபடி வீட்டை நோக்கி நடந்தேன்.
|
|
|
|