|
“மணிகண்ட பிரபுவே! நீங்கள் உதயணன் மீது போர் தொடுக்க சென்றாலும், சபரிமலையிலுள்ள பொன்னம்பல மேட்டில் தர்மசாஸ்தா கோயிலை புதுப்பிப்பதையே உயரிய நோக்கமாகக் கொண்டுள்ளீர்கள். நானும் சாஸ்தாவை வழிபடுவதன் மூலம் பிறந்த பயனை அடைவேன். தாங்கள் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்’’ என்றாள். இத்தனை ஆண்கள் மத்தியில் ஒரு பெண்ணா...இதற்கு மணிகண்டன் என்ன பதில் சொல்லப் போகிறான் என அனைவரும் ஆவலுடன் அவனை நோக்கினர். மணிகண்டன் அவளிடம்,“குரு மகளே! சபரிமலை பயணம் என்பது கடுமையானது. பெண்களின் உடல் தகுதிக்கு அது ஏற்றதல்ல. அது மட்டுமல்ல! பொன்னம்பல மேட்டில் தர்மசாஸ்தா பிரம்மச்சாரியாக அருள்பாலிக்கிறார். பெண்கள் அங்கு வருவதை அவர் விரும்பவில்லை. நீ அவரது வரலாற்றை அறிந்தவள் தானே! லீலாவதி என்ற பெண், அவரை விரும்பினாள். அவர் பிரம்மச்சரியம் மேற்கொண்டு பூமியில் பிறப்பெடுத்ததால் அதை ஏற்கவில்லை. இதனால் கோபமடைந்த அவள், மகிஷி என்னும் அரக்கியாகப் பிறந்து அவரால் வதம் செய்யப்பட்டாள். அப்போதும் சாஸ்தாவிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவள் வற்புறுத்தினாள். அதையும் சாஸ்தா ஏற்கவில்லை. மாறாக சபரிமலையில் தனக்கு உருவாகும் கோயிலில் தங்க மட்டும் அனுமதி அளித்தார். இதனால் அங்கே பெண்களுக்கு அனுமதி இல்லை. நாங்கள் புறப்படும் வேளையில் நீ தடை செய்யாதே!” என்றான். அவளும் அதை ஒப்புக்கொண்டு சென்று விட்டாள். இதையடுத்து மணிகண்டன் தன் படையினரிடம்,“நாம் பொன்னம்பல மேட்டிற்கு சாஸ்தாவின் திருக்கோயில் புனரமைப்புக்கு புறப்படுகிறோம். உதயணனை அழிப்பது என்பது அதனோடு இணைந்த பணி. இதில் ஆன்மிகப்பணிக்கே நாம் முக்கியத்துவம் தர வேண்டும். இப்போது மூன்று பிரிவுகளாக நமது படை உள்ளது. இவர்களில் ஒரு பிரிவினர் நீலம், ஒரு பிரிவினர் கருப்பு, மற்றொரு பிரிவினர் காவி உடை அணிந்து வர வேண்டும். செல்லும் வழியில் சாஸ்தாவின் பூஜை பொருட்களை ஒரு பொட்டலமாகவும், நம் பசி தீர்ப்பதற்குரிய பொருட்களும், இன்னொரு பொட்டலமாகவும் துணியில் இரு முடியாக முடிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்புக்காக சிறிய கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதை சரங்குத்தி என்ற இடத்தில் வைத்து விட வேண்டும். அழுதை நதியில் நீராடி ஒரு கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மகிஷியை புதைத்த கல்லிடுங்குன்று என்ற இடத்தில் போட்டு விட வேண்டும்’’என்று சொன்னான். அனைவரும் ‘தர்மசாஸ்தாவே சரணம்’ என கோஷமிட்டு புறப்பட்டனர். முப்படைகளும் உதயணன் இருந்த இடத்தை முற்றுகையிட்டன. எங்கு சென்றாலும் அவனால் தப்ப முடியாத நிலை. மணிகண்டனின் அம்பு உதயணனைப் பதம் பார்த்தது. அவன் மடிந்தான். வெற்றி மகிழ்ச்சியில் படைகள் பொன்னம்பல மேட்டை அடைந்தனர். அங்கே தர்மசாஸ்தாவுக்கு கோயில் எழுப்பப்பட்டது. மணிகண்டன் சாஸ்தாவின் விக்ரகத்துடன் கருவறைக்குள் நுழைந்தான். சாஸ்தாவை பிரதிஷ்டை செய்யவும், உள்ளே ஒரு ஜோதிப்பிழம்பு தெரிந்தது. ஆம்...மணிகண்டன் அந்த பிழம்புடன் கலந்து விட்டான். அனைவரும் இந்தக் காட்சி கண்டு பரவசமடைந்தனர். “ஆகா...இத்தனை நாளும் தெய்வமே நம்மோடு மனித உருவில் நடமாடியிருக்கிறது. இவனே ஐயன், இவனே ஐயப்பன்” என்று புகழாரம் சூட்டினர். ஐயன் என்றால் முதல்வன். ஐயப்பன் என்றால் முதல்வனுக்கெல்லாம் முதல்வன். ஒரு குடும்பத்தில் முதல்வர் அப்பா. ‘ஐ’ என்பது முதலுக்கும் முதலானது. முதலுக்கும் முதலான தந்தை என்று ஐயப்பனை படையினர் வாழ்த்தினர். “சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷம் அங்கு எதிரொலித்தது. இந்த சமயத்தில் பந்தள மன்னர் ராஜசேகரன் தனது மகன் உதயணனை அழித்த செய்தி கேட்டு மகிழ்ந்தார். அதே நேரம் சாஸ்தாவுக்கு கோயில் கட்டிய தனது மகன், ஜோதிப்பிழம்பானது குறித்து மகிழ்ச்சியும், கவலையும் அடைந்தார். வளர்த்த பிள்ளை இல்லாமல் போனது அவருக்கு கண்ணீரை வரவழைத்தது. புலிப்பால் கொண்டு வரச்சொல்லி அவனை ஏமாற்றி விட்டோமோ என்ற குற்ற உணர்வு ராணி லட்சுமிக்கும் தீரவே இல்லை. இந்த நேரத்தில் அகத்திய மாமுனிவர் பொதிகை மலைக்கு வந்ததும், சிவபார்வதி திருமணக்காட்சியைக் கண்டதும், அவர் சாஸ்தாவை தரிசித்து விட்டு, பந்தளம் வருகிறார் என்ற செய்தியும் ராஜசேகரனுக்கு கிடைத்தது. அகத்தியரை வரவேற்க ஏற்பாடு செய்தார் மன்னர். அகத்தியர் பந்தளம் வந்தார். அவரை வரவேற்ற ராஜசேகரன், மணிகண்டனை தான் பிரிந்தது பற்றி கவலையுடன் தெரிவித்தார். மணிகண்டன் என்பவன் யார், அவன் ஏன் தன் வாழ்க்கையில் குறுக்கிட்டான், எங்களுக்கு ஏன் சேவை செய்தான், பெறாத தாய்க்கு புலிப்பால் கூட கொண்டு வந்தானே! இதெல்லாம் ஏன் நடந்தது என்று மன்னர் தன் சந்தேகங்களை அகத்தியரிடம் கேட்டார். “ராஜசேகரா! காரணம் இல்லாமல் பூமியில் எதுவும் நடப்பதில்லை. அவரவர் செய்த பாவ, புண்ணியங்களின் விளைவையே பூமியில் பிறந்து அனுபவிக்கிறார்கள். உன் முற்பிறவி வரலாற்றை அறிந்தால், நீ பாசத்துக்கு கட்டுப்பட்டு அழுது கொண்டிருக்க மாட்டாய். அதைச் சொல்கிறேன் கேள்” என்று வரலாற்றை சொன்னார். அந்த வரலாறு இது தான். பாண்டியநாட்டில் விஜயன் என்ற அந்தணர் வாழ்ந்தார். அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதற்காக பல தீர்த்தங்களுக்கும் சென்று நீராடி வழிபட்டார்...பலனில்லை. ஒருமுறை முனிவர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு விஜயனுக்கு கிடைத்தது. அவர்,“விஜயா! நீ ஆயிரம் தீர்த்தங்களில் நீராடி இருக்கலாம். ஆனால் பம்பை என்ற தீர்த்தம் பற்றி அறிந்திருக்கிறாயா? அது சபரிமலை காட்டுக்குள் இருக்கிறது. இந்த நதியில் நீராடி அருகிலுள்ள மலையில் ஏறு. சபரிபீடம் என்ற இடம் வரும். அந்த இடத்தில் சபரி என்ற மூதாட்டி, ஐயப்ப சுவாமிக்கு சேவை செய்து வருகிறாள். அவளது தரிசனம் மட்டும் உனக்கு கிடைத்து விட்டால், உனக்கு குழந்தை செல்வம் உறுதி, நீ முயற்சித்துப் பார்” என்று ஆலோசனை வழங்கினார். விஜயன் புறப்பட்டு விட்டார். பல சிரமங்களையும் கடந்து பம்பையில் நீராடினார். மலைப்பாதையில் மிருகங்களின் தாக்குதல்களில் இருந்தெல்லாம் தப்பித்து, ஒரு வழியாக சபரி பீடத்தை அடைந்து விட்டார். மூதாட்டி சபரி தியானத்தில் இருந்தாள். அவளது தியானம் கலையும் வரை காத்திருந்த விஜயன், அவள் விழித்ததும் அவளது திருவடிகளில் விழுந்து வணங்கினார். “மகனே! நீ யார்? இந்த அடர்ந்த காட்டிற்கு ஏன் வந்தாய்?” எனக் கேட்டாள். விஜயன் எல்லா விபரத்தையும் சொன்னார். சபரி அன்னை அதற்கு பரிகாரம் சொன்னாள். அதைக் கேட்ட விஜயன் ஆடித்தான் போனார். “மகனே! நீ கும்ப தீர்த்தத்தில் குளித்தாக வேண்டும்” என்றாள். ‘கும்ப தீர்த்தமா! அது மாபெரும் அருவியாயிற்றே! அதில் மனிதர்கள் நீராட முடியாதே! முடியாத ஒரு விஷயத்தை அம்மையார் சொல்கிறாரே! என்ன சோதனை...’ விஜயன் கலக்கத்துடன் சபரி அன்னையின் முகத்தைப் பார்த்தார்.
|
|
|
|