|
தன் முன்னோர் முக்தி (பிறப்பற்ற நிலை) அடைவதற்காக பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வர முயற்சித்தார். திருமாலின் திருவடிகளை பிரம்மா தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய அது ஒரு நதியாக மாறி கீழ் நோக்கி இறங்கியது. அது அப்படியே வந்தால் தேவலோகமும், பூலோகமும் அழிந்து போகும். அனைவரும் நடுங்கிய வேளையில், சிவன் தன் தலையில் அதை தாங்கினார். அதுவே கங்கை நதி. பின் அந்த நதி நீர் அளவாக வெளியேற அதை ஒரு கோடு போட்டு, பூலோகம் கொண்டு வந்தார் பகீரதன். ‘பகீரதன் மாபெரும் தபஸ்வி. அதனால் அவனுக்கு அது சாத்தியமாயிற்று. நான் சாதாரண மனிதன். என்னால் எப்படி கும்ப தீர்த்தத்தை தலையில் தாங்க முடியும்? அந்த அருவிக்கரையில் கால் வைத்தாலே வெள்ளம் இழுத்துச் சென்று விடுமாமே! என்ன செய்வது?’ விஜயனின் மனதில் ஓடிய எண்ண ஓட்டம் சபரி அன்னக்கு புரிந்தது. அவள் புன்முறுவல் பூத்தாள். “விஜயா! முடியாது என்ற சொல் இருப்பதால் தான்,. பூலோகத்தில் மனிதர்கள் எதையும் சாதிக்க முடியாத கோழைகளாக இருக்கிறார்கள். என்னால் முடியும்...என்னால் முடியும்...கடவுளின் அருள் இருந்தால் என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று சொல்லிக்கொண்டே இரு. கடவுள் எங்கே என்று மனிதர்கள் கேட்கிறார்கள். முயற்சி உள்ளவர்கள் அருகில் அவர் இருக்கிறார். அவர்கள் முயற்சிக்கும் போது, அவர் உந்து சக்தியாக இருந்து சாதிக்க வைக்கிறார். நீயும் முயற்சி செய்..சாதிக்கலாம்,” என்றாள். “தாயே! தங்கள் வார்த்தைகள் என் மனதுக்கு தெம்பைத் தருகின்றன. ஆனால்...” என்று இழுத்த விஜயனை, “மகனே...ஆனால் என்ற சொல் முயற்சியைத் தடுக்கும் இன்னொரு வார்த்தை. மனிதன் தனது விருப்பம் நிறைவேற எளிய வழியையே தேடுகிறான். கடினமான பாறையை உடைக்காமல் தெய்வ விக்ரகத்தை செய்ய முடியாது. என்ன செய்தால் கும்ப தீர்த்தத்தில் நீராடலாம் என என்னிடம் நீ கேள்வி கேட்டிருந்தால், அது நியாயமானது. பாதையை நான் காட்டுகிறேன். செயலில் நீ தான் இறங்க வேண்டும்,” என்றாள் சபரி. “சரி தாயே! தங்கள் ஆசியினாலும், சாஸ்தாவின் அருளாலும் கும்ப தீர்த்தத்தில் நீராடி வருகிறேன்,” என்று தைரியமாக கூறிய விஜயனை, சபரி அன்னை பெருமிதமாகப் பார்த்தாள். விஜயனிடம், ஒரு கும்பத்தைக் கொடுத்து நீ கும்ப தீர்த்தத்தின் அருகில் சென்று, இதில் தண்ணீர் பிடி. அருவியின் வேகம் தாளாமல் இது கீழே விழுந்து நொறுங்கும். அப்படி விழும் ஒரு துகளில் தேங்கும் நீர், ஒரு குளாக தேங்கும். அதில் நீராடு. அப்போது ஒரு அதிசயம் நடக்கும்,” என்றாள். விஜயனும் அவளிடம் விடைபெற்று கும்ப தீர்த்தம் சென்றார். அந்த தீர்த்தத்தை தேவகங்கை என்பர். விஜயன் கும்பத்தை தீர்த்தம் நோக்கி நீட்டினார். சபரி அன்னை சொன்னபடியே அது விழுந்து நொறுங்கியது. அந்தக் கும்பத்துண்டில் இருந்த நீர் குளமாகத் தேங்கியது. விஜயன் அதில் நீராடியதும், அவனது உடலில் இருந்து சில பறவைகள் பறந்தன. அந்த பறவைகள் வேறு ஏதுமல்ல. விஜயன் செய்த பாவங்களே! அப்போது ஒரு குழந்தை அவர் முன் வந்தது. பிரகாசமான முகம் கொண்ட அந்தக் குழந்தையின் தெய்வீக சிரிப்பே, அது மணிகண்ட சாஸ்தா என்பதை உணர்த்தி விட்டது. “பகவானே! தாங்களா! நான் என்ன பாக்கியம் செய்தேன்” என விஜயன் குழந்தையின் காலில் விழுந்தார். அந்தக் குழந்தை விஸ்வரூபம் எடுத்து, அந்த காட்சியையும் விஜயனுக்கு அருளியது. ஏதும் தெரியாதது போல, “விஜயா! எதற்காக இந்த ஆபத்தான இடத்துக்கு வந்தாய்?” என்றதும், “பகவானே! எனக்கு புத்திர பாக்கியம் இல்லை. அதற்காகவே இத்தகைய கடும் முயற்சியை மேற்கொண்டேன். வந்த இடத்தில் தங்கள் தரிசனம் கிடைத்தது” என்றதும், “விஜயா! நீ செய்த பாவங்களே உனக்கு குழந்தை பாக்கியம் வர விடாமல் தடுத்தது. கும்ப தீர்த்த நீராடலால் அது நீங்கி விட்டது. இனி உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்” என்று ஐயன் உறுதியளிக்கவும், விஜயன் அடுத்த கோரிக்கையை வைத்தார். “சாஸ்தாவே! நான் தங்களை குழந்தை வடிவாக இங்கு கண்டேன். நீங்களே என் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று தன் பேராசையை தெரிவித்தார். எதையும் தரும் அந்த மகாசாஸ்தா, “அதுவும் நிறைவேறும் விஜயா! கலியுகத்தில் நீ பந்தள மன்னனாக பூமியில் பிறப்பாய். அப்போது உன் குழந்தையாக நான் வருவேன். அத்துடன் இன்னொரு மகனும் உனக்கு பிறப்பான்” என்று அருளினார். மகிழ்ந்த விஜயன்,“அப்படியானால் இப்பிறப்பில் எனக்கு குழந்தை இல்லையா?” எனக் கேட்க, “இப்போதும் உனக்கு ஒரு மகன் பிறப்பான்” என்றார். “பகவானே! ஒரு சந்தேகம். நான் பாவம் செய்தவன் என்றீர்கள். என் மனமறிந்து ஒரு பாவமும் நான் யாருக்கும் செய்ததில்லை. ஒரு அந்தணருக்குரிய கடமைகளை தவறாமல் செய்துள்ளேன். ஈ எறும்புக்கு கூட துன்பம் இழைத்ததாக நினைவில்லை” என்றவரை இடைமறித்த சாஸ்தா,“பாவங்கள் என்பது இப்பிறப்பில் செய்தது மட்டுமல்ல. முற்பிறவி பாவங்களும் மனிதனை எல்லா பிறப்பிலும் துரத்தும். உன் முற்பிறவி வரலாற்றை அறிந்தால் நீ எத்தகைய கொடிய பாவம் செய்தவன் என்பது புரியும்” என்றதும், “பகவானே! அதை சொல்லி அருளுங்கள். அந்தப் பாவம் நீங்கி விட்டாலும் கூட, இப்பிறப்பிலும் அதற்கு பரிகாரம் தேடிக் கொள்கிறேன்” என்றவரை புன்முறுவலுடன் பார்த்த குழந்தை சாஸ்தா அந்தணரின் முற்பிறப்பு வரலாற்றைச் சொன்னார். அந்த வரலாறு இதுதான். தேவர்களின் ராஜா இந்திரன் மமதை மிக்கவன். தன்னை விட பிறர் உயரக்கூடாது என நினைப்பவன். முனிவர்களும், அந்தணர்களும் யாகம் செய்து, தன்னை விட உயர்ந்த அந்தஸ்துக்கு சென்று விடுவார்களோ என பயந்தான். அவன் மழையை அடக்கியாள்பவன். அவன் பெய் என்றாலும் மழை பெய்யும், நில் என்றால் நிற்கும். பெருவெள்ளம் வர வேண்டுமென்றால், கொட்டித் தீர்த்து விடும். அவன் முனிவர்கள் யாகம் செய்யும் போது, பெருமழை பெய்யச் செய்து யாகத்தை அழித்து விடுவான். அவனது செயலை அறியாத முனிவர்கள், தங்கள் யாகத்துக்கு தடை ஏற்பட என்ன காரணம் என்பதை அறிய, மூத்த முனிவரான கவுதமரின் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். இவர் தெய்வப்பெண்மணியான அகலிகையின் கணவர். ராமனின் பாததுாசு பட்டு, கல்லாக இருந்த அகலிகை சுயவடிவம் பெற்றவள். இத்தகைய பெருமைக்குரிய கவுதமரைச் சந்தித்த முனிவர்கள் தங்கள் குறையை அவரிடம் கூறினர். “முனிவர்களே! கலக்கம் வேண்டாம். நீங்கள் இங்கே தங்கி உங்கள் யாகத்தை தொடருங்கள். இங்கே உங்களுக்கு எந்த பிரச்னையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றதும் முனிவர்கள் ஆனந்தமடைந்தனர். இதையறிந்த இந்திரன் கடும் கோபமடைந்தான். தவ முனிவரான கவுதமரை அவனால் ஏதும் செய்ய முடியாது. எனவே வஞ்சகத்தால் அவரது புகழை அழிக்க திட்டமிட்டான்.
|
|
|
|