|
பகவான் கிருஷ்ணரை மனதில் நினைத்தபடி படுத்திருந்தான் அர்ஜுனன். அப்போது காட்சியளித்த கிருஷ்ணர், “என்ன அர்ஜுனா துாக்கத்தில் மூழ்கி விட்டாயா?” “தாங்களைத் தான் மனதில் நினைத்திருந்தேன்” “அர்ஜுனா... இந்த உலகில் சிறந்த பக்தன் யார்?” “தாங்களே சொல்லுங்களேன்” என்றான். தன்னையே சிறந்த பக்தன் எனச் சொல்வார் எனக் காத்திருந்தான். ஆனால் பக்கத்து ஊரில் இருக்கும் மன்னர் ஒருவரைக் குறிப்பிட்டு, அவரே சிறந்த பக்தர் என்றார் கிருஷ்ணர். திடுக்கிட்ட அர்ஜுனன், “அந்த மன்னர் என்ன... அவ்வளவு பெரிய பக்தரா..” எனக் கேட்டான். “சரி... என்னுடன் வா. நேரில் பார்த்தால் உனக்கு உண்மை புரியும்” என்றார். இருவரும் மன்னரைத் தேடிச் சென்றனர். அவர்களைக் கண்டதும் மன்னர் வரவேற்றார். இருவரையும் ஆசனத்தில் அமரச் செய்தார். அங்கு வந்த ராணியும், மன்னரின் மகனான ஐந்து வயது சிறுவனும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். அப்போது, ‘‘மன்னா... நான் உன்னிடம் ஒன்று கேட்பதற்காகவே வந்தேன்” என்றார் கிருஷ்ணர். “சுவாமி...தங்களின் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்” என்றார் மன்னர். “உங்களின் ஒரே மகனை எனக்குத் தர முடியுமா” என கேட்டார் கிருஷ்ணர். “ தங்களின் விருப்பம் எங்களின் பாக்கியம்” என்றார் மன்னர். “மிக்க மகிழ்ச்சி... முதலில் சிறுவனை இருகூறாக வெட்டுங்கள். அப்போது ராணி அவனது கையைப் பிடித்துக் கொள்ள, வாளால் நீயே வெட்ட வேண்டும். சிறுவனின் வலது பாகம் மட்டும் எனக்கு வேண்டும். அப்போது அவன் கண்ணீர் சிந்தக் கூடாது” என நிபந்தனையிட்டார். மன்னரும் சம்மதித்தார். சபையே ஸ்தம்பித்து விட்டது. “கடைசியாக எதுவும் சொல்ல விரும்புகிறாயா?” என சிறுவனிடம் கேட்டார் கிருஷ்ணர். “ பிறந்தது முதல் ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்றே என் இதயம் துடிக்கிறது. என் உடலை தங்களுக்கு அர்ப்பணிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன்’’ என்று கிருஷ்ண நாமத்தை ஜபிக்கத் தொடங்கினான். வாளுடன் மன்னர் நெருங்க, ராணி சிறுவனை பிடித்துக் கொண்டாள். அப்போது அவனது இடக்கண்ணில் கண்ணீர் பெருகியது. உடனே கிருஷ்ணர் “ நான் தான் கண்ணீர் சிந்தக்கூடாது என்றேனே... அதுவும் ஒரு கண்ணில் மட்டும்...ஏன்” எனக் கேட்டார். ‘‘உடம்பின் வலது பாகத்தை மட்டும் கேட்கிறீர்கள். அதனால் ‘நான் என்ன பாவம் செய்தேன்?’ என என் இடது பாகம் கண்ணீ்ர் சிந்துகிறது” என்றான் சிறுவன். இதைக் கேட்ட அனைவரும் கண்ணீர் சிந்தினர். ‘இவன் அல்லவா கிருஷ்ண பக்தன். இவர்களுடன் ஒப்பிடும் தகுதி எனக்கு ஏது’ என்பதை உணர்ந்த அர்ஜுனன் தலைகுனிந்தான். அவனைப் பார்த்த கிருஷ்ணர் புன்னகைத்தார்.
|
|
|
|