|
ராமனைத் திரும்ப அழைத்துவர கானகத்துக்குப் புறப்பட்டு விட்டார்களே தவிர, கோசலைக்கும், சுமித்திரைக்கும் மனசுக்குள் லேசாக உறுத்தல் இருக்கத்தான் செய்தது. ‘‘நாம் அழைத்தால் ராமன் வருவானா?’’ என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆனால் சந்தேகத்துடன் கேட்டாள் கோசலை. ‘‘வரமாட்டான்’’ என்று உறுதியாகச் சொன்னாள் கைகேயி. மற்ற இருவரும் அவளைக் குழப்பத்துடன் பார்த்தார்கள். ‘‘ஆமாம், அவன் அந்தளவுக்கு தந்தை சொல்லை மதிப்பவன்’’ ‘‘இது உறுதியானால் நாம் போவதன் அர்த்தம்தான் என்ன’’ சுமித்திரை கேட்டாள். ‘‘இது பரதனுக்காக. அவனை திருப்திபடுத்துவதற்காக. எப்படியும் ராமனை அழைத்து வந்துவிட வேண்டும் என்ற அவனுடைய நம்பிக்கையை ஆரம்பத்திலேயே குலைக்க எனக்கு மனசில்லை. அவனும், தான் தனியே போய் ராமனிடம் முறையிடுவதை விட நாமும் உடன் சென்றால் அவனை எளிதாக இணங்க வைத்து விடலாம் என்றுதானே எதிர்பார்க்கிறான்’’ ‘‘உண்மைதான். அவன் எண்ணம் நிறைவேறுமானால் நமக்கும் மகிழ்ச்சிதான்’’ கோசலை, கைகேயியின் எண்ணத்தை ஆமோதிப்பது போல பேசினாள். சுமித்திரைக்கு சந்தேகம் தீர்வதாக இல்லை. ‘‘ஒருவேளை ராமன் வர மறுத்தால், அயோத்திக்குத் திரும்பி பரதன் அரியணை ஏறுவானா’’ ‘‘மாட்டான்…’’ இதையும் உறுதியாகச் சொன்னாள் கைகேயி. ‘‘ராமனை முழு முயற்சியுடன் வற்புறுத்துவான் பரதன். ஊர் கூடி தேர் இழுப்பது போல நாம் அனைவரும் ஒருசேர மன்றாடினால் ராமனின் மனம் மாறும் என்றும் அவன் ஆவலுடன் எதிர்பார்ப்பான். ஆனால் ஏமாற்றம்தான் அடைவான்’’ ‘‘அடடா, அது பேராபத்தாக முடிந்துவிடக் கூடாதே. என்னதான் ராமனின் பக்தனாகவே பரதன் திகழ்ந்தாலும், சட்டென்று உணர்ச்சிவசப் படக்கூடியவனாயிற்றே! ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று செய்து கொண்டானானால்…’’ ‘‘அந்தளவுக்கு ராமன் அவனைக் கைவிட்டு விடமாட்டான். பரதனுக்குப் பக்குவமாக அறிவுரை சொல்வான். அரசப் பொறுப்பை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவான். தந்தையின் சொல்லுக்கு அவ்வாறுதான் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துவான்’’ ‘‘ஆனால் பரதன் அதை ஏற்க வேண்டுமே! மூத்தவன் இருக்க தான் பதவி வகிப்பது உலகோரின் கேலிப் பேச்சுக்கு இடமாகி விடும் என்று உன்னிடமே பரதன் வாதிட்டிருக்கிறானே, கைகேயி? அப்படியிருக்க அவன் எப்படி ராமனின் சொல்லுக்கு செவி சாய்ப்பான்? ‘இப்படி ஊர்ப்பழி ஏற்க என்னை நிர்ப்பந்தப்படுத்துகிறீர்களே, இது நியாயமா’ என்று ராமனிடமே கேட்க மாட்டானா’’ ‘‘கேட்பான்தான். ஆனால் ராமன் பணித்தானென்றால் அதற்குப் பணிந்துபோக பரதன் தயாராகத்தான் இருப்பான்…’’ ‘‘ஆனால், இந்தப் பதினான்கு ஆண்டுகளில் சிம்மாசனத்தில் அமருபவருக்கு ஆயுள் ஆபத்து என்று சோதிடர்கள் சொன்னதாக…’’ ‘‘ஆமாம், விதி எப்படி அமைந்திருக்கிறதோ அப்படித்தானே எல்லாமும் நடக்கும்’’ என்று விரக்தியாகச் சொன்னாள் கைகேயி. அதற்கு மேல் ஒன்றும் பேசத் தோன்றாமல் மூன்று பெண்களும் அமைதியானார்கள். ராமனைத் தேடி அனைவரது பயணமும் தொடர்ந்தது. அமைச்சர் சுமந்திரன், தான் ராமன், சீதை, லட்சுமணனை எங்கே கொண்டு வந்து விட்டதாகச் சொன்னாரோ அந்த இடத்தை நோக்கிப் பெரும் படை நகர்ந்தது. வெகு தொலைவில் எழுந்த புழுதிப் படலத்தை கவனித்ததோடு, அந்தப் படைக்குத் தலைமை தாங்கி வருபவன் பரதன் என தன் பணியாளன் சொன்ன செய்தியையும் இணைத்து கோபம் மிகக் கொண்டான் குகன். தன் தெய்வத்துக்கு எதிராகப் போராட வந்திருக்கும் பரதனைத் தான் நேருக்கு நேர் நின்று எதிர்த்து தோற்றோடச் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டான். என்ன வேடிக்கை! பக்தனின் துயர் களைய, அவனுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய ஆபத்தை வேரறுக்கப் பரம்பொருள் வருவதுதானே வழக்கம்? இங்கே அந்தக் கடவுளைக் காக்க பக்தன் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறான்! தன் பணியாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் குகன் உத்தரவிட்டான். தங்களிடம் இருக்கும் எல்லா வகையான ஆயுதங்களையும் பிரயோகித்து பரதனையும் அவனுடன் வந்திருப்பவர்களையும் கொஞ்சமும் இரக்கமின்றி தாக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். ‘பரதன் ராமனுடைய சகோதரன்தான். இதோ, இப்போது நானும் ஒரு சகோதரனாக ஆகிவிட்டேன். ஆகவே பரதன் என்ற தம்பியின் வஞ்சகச் செயலை இன்னொரு தம்பியான நான் அவ்வளவு எளிதாக அனுமதித்து விடுவேனா? ஏற்கனவே ராமனுக்கு வஞ்சகமாக அரியணை மறுக்கப்பட்டதில் பெரும் கோபத்தில் இருக்கும் நான் இப்போது ராமனுக்கு எதிராகப் போர் புரியவே வந்திருக்கும் பரதனை மன்னிக்கவே மாட்டேன்’ திடீர்ப் பகை மனசுக்குள் பேரூழியாய்ப் பெருக்கெடுக்க, தன் படை புடை சூழ பரதனை நோக்கி விரைந்தான். பரதன் மட்டுமன்றி அவனுடைய தலைமையில் வருபவர்கள் எல்லோரும் ராமனுக்கு எதிரிகளே என்று தீர்மானித்துவிட்ட குகன் சற்று நெருக்கத்தில் பரதனைப் பார்த்ததும் தொடர்ந்து முன்னேற இயலாதவனாக திகைத்து நின்று விட்டான். அப்படியே ராமனின் சாயல்…. அதேபோன்ற மரவுரி. ஆனால் முகத்தில் சோகம், கண்களில் வற்றாமல் தளும்பி நின்றிருந்த கண்ணீர், உதடுகள் மெல்ல முணுமுணுத்தாலும், ‘ராமா, ராமா…‘ என்ற அவனுடைய ஜபம் கணீரென கேட்கத்தான் செய்தது. குகன் குழப்பமடைந்தான். இவனையா சந்தேகித்தோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். இல்லை, இவன் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவன். நிச்சயம் ராமனின் பகைவனல்ல, அவனை ஆத்மார்த்தமாக பூஜிப்பவன்….. சிறு காலாட்படை போல தங்களுக்கு எதிராக நின்றிருந்த குகனையும் அவனுடைய பணியாட்களையும் கண்டு பரதனும், உடன் வந்தவர்களும் தங்கள் வேகத்தைக் குறைத்தார்கள். தேரிலிருந்து இறங்கிய பரதன், தலைவன் போலத் தெரிந்த குகனை நோக்கிச் சென்றான். இரு கரம் கூப்பி வணங்கினான். ‘‘ஐயா, தாங்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவரா? என் அண்ணன் ஸ்ரீராமன் தன் மனைவியார் மற்றும் தம்பி லட்சுமணனுடன் இந்த இடம் வழியாகச் சென்றனரா? தாங்கள் கண்டீர்களா?‘‘ என்று அடக்கமுடன் கேட்டான். பரதனின் பணிவு குகனை வெட்கமுறச் செய்தது. ‘அதுதானே! ராமனின் தம்பி, அவனின்று மாறுபட்டவனாகவா இருக்க முடியும்? ராமனைப் போலவே பரதன் எவ்வாறு தோற்றம் கொண்டிருக்கிறானோ, அதே மாதிரி லட்சுமணனைப் போலவே பரதன் உடனிருக்கும் சத்ருக்னனும் காட்சி அளிக்கிறானே! இந்த சகோதர பந்தத்திற்குள் பங்கம் வர முடியுமா என்ன? பேதமையால் நான் கொண்ட தவறான கருத்துதான் எவ்வளவு கேவலமானது’ தன்னைத் தானே நொந்து கொண்ட குகன் தானும் கைகூப்பி பரதனை வணங்கினான். ‘‘ஐயனே, சோகம் போர்த்தி வந்திருக்கும் தங்களை இந்த என்னுடைய பகுதிக்கு வரவேற்கிறேன். தாங்களும், தங்கள் உடன் வந்தவர்களும் இங்கே தங்கி இளைப்பாறலாம்’’ என்றான். ‘‘மன்னிக்கவும். நாங்கள் இளைப்பாற வரவில்லை.எங்கள் அண்ணன் ஸ்ரீராமனை சமாதானப்படுத்தி மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்று ராஜாராமனாக அரியணையில் அமர்த்தி வைக்கும் பேராவலுடன் வந்திருக்கிறோம்’’ என்றான் பரதன். அதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தான் குகன். ‘‘ராமன் கானகம் ஏகியதன் பின்னணியை நான் அறிவேன் ஐயனே. அது ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி, வஞ்சகம் என்ற வகையில்தான் நான் கணித்திருந்தேன். ஆனால் அது எந்தச் சூழலில், எதனால், எப்படி ஏற்பட்டிருந்தாலும், ராமனுடைய இந்த நிலைக்கு மூல காரணமான தாங்களே ஸ்ரீராமனை மீண்டும் அழைத்துச் செல்ல வந்திருப்பது கண்டு பெரிதும் உவகை அடைகிறேன். தங்களது இந்த முயற்சிக்கு என்னால் ஆன எல்லா உதவிகளையும் நான் அளிக்கிறேன். பதினான்கு ஆண்டு கால ராமனின் வனவாசம், பதினான்கு நாட்களாகக் குறையுமென்றால், அதைவிட பேரானந்தம் வேறு என்ன இருக்க முடியும்?‘‘ என்று நெகிழ்ச்சியுடன் சொன்னான் குகன். பரதனின் பொலிவிழந்த கண்கள் இப்போது பளிச்சென்று மின்னின. இந்த குகனும் நம்மோடு சேர்ந்து கொள்ளும்போது ராமன் அயோத்திக்குத் திரும்புவது எளிதாகவே இருக்கும் என்று கருதினான் அவன். நெஞ்சு விம்ம பரதனைப் பாராட்டினான் குகன்: ‘‘பரதப் பெருந்தகையே, உன் மாண்பைப் போற்றுவதற்கு என்னிடம் வார்த்தை இல்லை. ஆனால் ஒன்று சொல்வேன் – ஆயிரம் ராமர் வந்தாலும் உன் ஒருவர்க்கு ஈடாக மாட்டார்’’ பிறகு, தான் ராமனை கங்கையின் அக்கரைக்குக் கொண்டு சேர்த்ததாகவும், அவர்கள் அங்கே சித்திரகூடத்தில்தான் தங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்த குகன், பரதன் மற்றும் அவனைச் சார்ந்த அனைவரையும் தான் ஸ்ரீராமனிடம் கொண்டு சேர்ப்பிப்பதாகவும் உற்சாகமாகக் கூறினான். அதேபோல பெரிய அளவிலான ஐநுாறு படகுகள் அவர்கள் அனைவரையும் கங்கையின் மறுகரைக்குக் கொண்டு சேர்த்தன.
|
|
|
|