|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » துன்பம் அனுபவிக்கவேண்டிய நேரம் |
|
பக்தி கதைகள்
|
|
இரவு மணி எட்டரை இருக்கும். அலைபேசி ஒலித்தது. எண்கள் எதுவும் தோன்றவில்லை. தயக்கத்துடன் எடுத்தேன். “நீ என் கொத்தடிமை என்று சொல்வதால் உனக்கு கர்மக்கணக்கில் இருந்து விதிவிலக்கு அளிப்பேன் என கனவு காணாதே! நீ துன்பம் அனுபவிக்கவேண்டிய நேரம் இது’’ “தாயே! நீங்களா?” இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடத்தில் அலைபேசி மறுபடியும் ஒலித்தது. என் நண்பரின் ஊழியர் ரவி. “உங்க வீட்டு வாசல்லதான் நிக்கறேன். உங்களத் தேடி போலீஸ் வந்திருக்கு” துன்பம் ஆரம்பித்துவிட்டதா? பதறிக்கொண்டே ஓடினேன். ரவியுடன் ஒரு போலீஸ்காரர் நின்றுகொண்டிருந்தார். “இவர்தான் சார் அது” என்று சொல்லிவிட்டு ரவி கழன்று கொண்டார். என் பெயர், முகவரி, தொழில், ஆதார் எண் விவரங்களைக் கேட்டார் போலீஸ்காரர். சொன்னேன். வீட்டிற்குள் வரச்சொன்னேன். உட்கார்ந்து பேசலாம் என்றேன். முரட்டுத்தனமாக மறுத்துவிட்டார். “நீங்கதானே பத்திரிகைகள்ல பச்சைப்புடவைக்காரியப் பத்தி எழுதறது?” “ஆமாம்” “ஏன் சார் அது தண்டிக்கப்படவேண்டிய குற்றமா என்ன?” “ஸ்... கேள்வி கேட்டுக்கிட்டிருக்கும்போது குறுக்க குறுக்க பேசாதீங்க.” நான் தலையாட்டினேன். அடுத்த சில நிமிடங்களில் அம்புகளைப் போல் கேள்விகள் பறந்து வந்தன. நானும் அதே வேகத்தில் பதில் சொன்னேன். “உங்க அலைபேசி எண் இதுதானா?” “ஆமாம்” “உங்ககூட ஒரு செல்பி எடுத்துக்கணும்” போட்டோவுக்காக சிரித்தேன். ஆனால் உயிரேயில்லை. “எதுனாச்சும் தேவைப்பட்டாக் கூப்பிடுவோம். வரணும்” “எங்க வரணும் எதுக்காக வரணும்” “கூப்பிடும்போது சொல்றேன்” தன் அலைபேசியில் யாரோ மேலதிகாரியை அழைத்தார். “அந்தாளு வீட்டக்கண்டுபிடிச்சிட்டேன் சார். நீங்க எப்போ சொல்றீங்களோ..’’ பேசியபடியே தள்ளிப் போய்விட்டார். அவர் பேசியது காதில் விழவில்லை. அடுத்த சில நிமிடத்தில் அவர் கிளம்பிச் சென்றார். கடைசிவரை அவர் வந்த காரணத்தை சொல்லவேயில்லை எனக்குக் கிலி பிடித்தது. வந்தவரை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. என்மேல் காவல் துறைக்கு சந்தேகம் வந்துவிட்டதோ? எனக்கு வேண்டாதவர் யாராவது புகார் கொடுத்திருக்கிறார்களோ? “போலீஸ்காரரு வந்தாரே, என்ன பிரச்னை?” என மனைவி கேட்டபோது “பக்கத்து வீட்டப்பத்திக் கேட்டாரு” என்று சொல்லி மழுப்பினேன். அன்று துாக்கம் வரவில்லை. மறுநாள் காலை அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. போலீஸ்காரரை அழைத்து வந்த ரவி பணிபுரியும், என் நண்பரின் அலுவலகத்திற்குச் சென்றேன். நண்பரிடம் நடந்ததைச் சொன்னேன். சரியாக அந்தச் சமயம் பார்த்து ரவி உள்ளே வந்தார். நண்பர் அவரைக் கடிந்துகொண்டார். “நேற்று நடந்தத நீங்க ஏன் என்கிட்ட சொல்லல? இப்போ சார் சொல்லித்தான் தெரிஞ்சது. இவ்வளவு நடந்திருக்கு நீங்களா சொல்ல வேண்டாமா?” ஊழியர் மென்று முழுங்கினார். என் பயம் இன்னும் அதிகமானது. நான் ஏன் அப்படி முட்டாள்த்தனமாக நடந்து கொண்டேன்? யாரோ ஒருவர் போலீஸ் உடையில் வந்தால் ஏன் என்னவென்று கேட்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிடுவதா? “வாரண்ட் இருக்கிறதா? என்ன குற்றம் செய்தேன்” என்று கேட்டிருக்கலாமே! மிகக் குறைந்த பட்சம் அவருடைய அடையாள அட்டையைக் காட்டச் சொல்லியிருக்கலாமே! அவரது அலைபேசி எண்ணை வாங்கியிருக்கலாம். எனக்குத் தெரிந்த காவல் துறை அதிகாரிகளிடம் விசாரித்திருக்கலாமே... இந்தச் சித்திரவதை மூன்று நாட்கள் நீடித்தது. அதன்பின் ஒரு நாள் இரவு துாங்கச் செல்லும்முன் தெளிவு பிறந்தது. என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவளின் அனுமதி இல்லாமல் என்னை யாரும் துன்புறுத்த முடியாது. நான் துன்பப்பட்டால் அது அவளுடைய சம்மதம், ஆசியுடன் நடக்கிறது என்று தான் பொருள். துன்பத்தின் மூலம் ஆன்மிக வளர்ச்சி கொடுப்பதுதானே பச்சைப்புடவைக்காரியின் தொழில்? அப்படி என்றால் அந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொள்வதுதானே உத்தமமான வழிபாடு? இந்தப் புரிதல் வந்தபின் மனம் சமனப்பட்டது. ஒரு வாரம் ஒன்றும் நடக்கவில்லை. அன்று இரவு நான் கோயிலுக்குச் சென்றேன். பண்டிகைக் காலமாக இருந்தாலும் கோயிலில் கூட்டம் இல்லை. பச்சைப்புடவைக்காரி அன்று மஞ்சள் நிறப் பட்டில் மனதை மயக்கும் அழகுடன் காட்சியளித்தாள். கண்கள் கண்ணீர் சிந்தின. நான் அனுபவிக்கும் துன்பத்தையும் வேதனையையும் உங்களுக்கு நிவேதனம் செய்கிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள் என பிரார்த்தித்தேன். சுவாமி சன்னதியிலிருந்து வெளியே வரும்போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். சாதாரண நுால்புடவையில் இவ்வளவு கம்பீரமாகக் காட்சி தரமுடியுமா? என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். விழுந்து வணங்கினேன். “உன் மனவேதனையைத் தீர்த்து வைக்கிறேன். எனக்கு என்ன தருவாய்?” “கொடுக்க இங்கே என்ன இருக்கிறது? எல்லாம் அங்கேதானே இருக்கிறது” “தத்துவம் பேசாதே. பிரசாதக் கடையில் அதிரசமும் முறுக்கும் வாங்கித் தருவாயா” “உங்களுக்கு இல்லாததா?” வாங்கிக்கொண்டு திரும்பி வருவதற்குள் அவள் மறைந்தாள். அது சரி, அவளுக்குக் கொடுக்கும் அளவிற்கு நான் புண்ணியம் செய்யவில்லையென்றால் அவள் என்ன செய்வாள்? தொய்வான நடையுடன் பத்ரகாளியைத் தரிசிக்கச் சென்றேன். என்னை யாரோ அழைத்தார்கள். அன்று என் வீட்டுக்கு வந்த போலீஸ்காரர். என்னைப் பார்த்துக் கைகூப்பினார். “சார், இவர் சிபிஐ.,யில பெரிய ஆபிசர்” என்று சொல்லிவிட்டு “ இவர்தான் பச்சைப்புடவைக்காரி பத்தி எழுதறவரு” என்று அந்த அதிகாரிக்கு என்னை அறிமுகப்படுத்தினார். அவரைச் சற்றுத் தள்ளி அழைத்துக்கொண்டு போனேன். “உங்களுக்கே நியாயமா இருக்கா? அன்னிக்கு ராத்திரி திடுதிப்புன்னு வந்தீங்க. கேள்வியா கேட்டீங்க. என்ன விவரம்னு சொல்லவேயில்லையே” “பயந்துட்டீங்களா? உங்களத் தொட்டா பச்சைப்புடவைக்காரி எங்களத் தொலச்சிருவா சார்” “யாருக்கோ என் நம்பர் வேணும்னு கேட்டு வாங்கிட்டுப் போனீங்களே” “சென்னையில இருக்கற ரிட்டயர்ட் எஸ்.பி., சொல்லித்தான் உங்க வீட்டத் தேடி வந்தேன். உங்க நம்பரயும் அவர்கிட்ட கொடுத்தேன். என்கிட்ட போன் பண்ணி சார் குறி சொல்வாரா, ஜோசியம் பார்ப்பாரான்னு கேட்டாரு. நிச்சயமா அதெல்லாம் பண்ணமாட்டார்னு சொல்லிட்டேன். அவரு பச்சைப்புடவைக்காரியோட பக்தர் அவருகிட்ட ஜோசியம் எல்லாம் கேக்காதீங்கன்னு கண்டிப்பாச் சொல்லிட்டேன் சார்” “தப்பு. நான் பச்சைப்புடவைக்காரியோட கொத்தடிமை. அவ என்னை அடிச்சாலும் உதைச்சாலும் அவ காலடில விழுந்து கெடக்கற ஒரு புழு” கண்ணீர் ததும்ப என்னை சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பிவிட்டார் போலீஸ்காரர். கோயிலை விட்டு வெளியே வந்தபோது கையில் அதிரசமும் முறுக்கும் இருப்பது நினைவிற்கு வந்தது. செருப்பை எடுத்துத் தந்த பெண்ணிடம் கொடுத்தேன். “அம்மா இதச் சாப்பிட்டுட்டு தெம்பா வேல பாருங்கம்மா” அவள் என்னைப் பார்த்துக் கைகூப்பினாள். நான் அழுதுகொண்டே நடக்க ஆரம்பித்தேன். வழியில் நுால் புடவையில் ஜொலித்தபடி நின்றிருந்தாள் பச்சைப்புடவைக்காரி. “நான் பாவி என்பதை உணர்ந்து விட்டேன், தாயே! என்கையால் தின்பண்டம் வாங்கிச் சாப்பிட உங்களுக்கு மனமில்லை. அதனால்தான் நான் வருவதற்குள் மறைந்துவிட்டீர்கள்” “முட்டாள்! அதை நான் ஆசையுடன் வாங்கிக்கொண்டதை நீ பார்க்கவில்லையா? செருப்பு எடுக்கும் இடத்தில் இருந்தவள் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. உன்மூலம் அவளுக்கு உணவு கொடுத்தேன். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனை உனக்குக் கொடுத்தேன். வேறு என்ன வேண்டும் சொல். கொடுத்துவிட்டுப் போகிறேன்” “நீங்கள்தான் வேண்டும். பச்சைப்புடவைக்காரியே துணை என்பதை எந்தக் காலத்திலும் மறக்காத மனம் வேண்டும்” அன்னை கலகலவென சிரித்தபடி காற்றோடு கலந்தாள்.
|
|
|
|
|