|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அஸ்வத்தாமனாகிய நான்... |
|
பக்தி கதைகள்
|
|
‘சீரஞ்சீவி – அதாவது அழிவே இல்லாதவர்’. இப்படிப்பட்டவர்களை ஒரு சிறிய பட்டியலில் அடக்கி விடலாம்தான். சிரஞ்சீவி என்றவுடன் துருவன், பிரகலாதன், அனுமன், மார்க்கண்டேயன் ஆகியோரின் உருவங்கள் உங்கள் மனதில் தோன்றுவது இயற்கை. இவர்கள் பெயரைக் கூறும்போது உங்கள் கைகள் தானாகக் குவியும். அப்படி ஒரு நற்பெயர் பெற்றவர்கள் அவர்கள். அஸ்வத்தாமனாகிய நானும் சிரஞ்சீவித் தன்மை கொண்டவன். கலியுகம் முடியும் வரை எனக்கு அழிவு கிடையாது. நான் பெரும் புகழ் வாய்ந்த துரோணாச்சாரியாரின் அன்பு மகன். பரத்வாஜரின் பேரன். தெய்வத் தன்மை பெற்ற கிருபி என்பவரின் வயிற்றில் பிறந்தவன். சிவனின் அருள் பெற்றவன். மகாபாரதப் போரில் கவுரவர்கள் தரப்பில் உயிர்தப்பிய மிகச் சிலரில் நானும் ஒருவன். என்ன பயன்? தவறான நடவடிக்கைகளால் என் வாழ்க்கையை நான் பாழடித்து கொண்டு விட்டேன். கண்ணன் தன் தந்திரத்தால் போரில் பலரை வீழ்த்தினார். ஆனால் அவர் மூலம் நேரடியாக சபிக்கப்பட்டவனாக ஆகிவிட்டேன். தீயவர்களின் சேர்க்கை என்பது எந்தவிதமான அழிவுக்கெல்லாம் வழிவகுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறேன். பிறந்தவுடன் என் அழுகுரல் குதிரையின் சத்தத்தைப் போல இருந்ததாம். எனவே அஸ்வத்தாமன் என்று பெயரிட்டனர். அஸ்வம் என்றால் குதிரை. சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார் என் தந்தை துரோணாச்சாரியர். அதன் பலனாக பிறந்தவன் நான். என் நெற்றியில் ஒரு ரத்தினம் பதிக்கப்பட்டிருந்தது. இது அளித்த சக்தியின் காரணமாக எனக்கு யாரிடமும் தோல்வி கிடையாது. எந்த நோயும் என்னை அண்டாது. வில்வித்தையில் சிறந்து விளங்கியவன் நான். பாரதப்போரில் கவுரவர்கள் தரப்பில் தளபதியாகவும் பணிபுரிந்து இருக்கிறேன். கர்ணனை விட்டு விட்டால் துரியோதனனின் நெருங்கிய நண்பன் நான்தான். என் தந்தை துரோணர் கவுரவ படைக்குத் தலைமை ஏற்று எதிர்த் தரப்புக்கு கடும் சேதத்தை விளைவித்தார். கண்ணன் ஒரு தந்திரம் செய்தார். என் தந்தை என்மீது கொண்டிருந்த அளவில்லாத பாசத்தையே கருவியாக்கி அவர் முடிவுக்கு வழிவகுத்தார். போரில் நான் இறந்து விட்டேன் என்று அறிந்தால் என் தந்தை அதிர்ச்சியில் போர்க்களத்திலிருந்து நீங்கி விடுவார் என்பது கண்ணனுக்குத் தெரியும். அதேசமயம் நான் சிரஞ்சீவி என்பதால் என்னை யாரும் கொல்ல முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். எனவே நான் இறந்ததாக யார் கூறினாலும் அதை என் தந்தை துரோணர் நம்ப மாட்டார் என்பதையும் அவர் அறிந்து வைத்திருந்தார். ஆனால் பொய் பேசாதவர் தர்மர் என்பதில் துளியும் சந்தேகம் கொள்ளாதவர் என் தந்தை. இதைக் கண்ணன் பயன்படுத்திக் கொண்டார். அஸ்வத்தாமன் என்ற யானையைக் கொன்றுவிட்டு அஸ்வத்தாமன் இறந்தான் என்ற தகவலை போர்க்களத்தில் பரவச் செய்தார். அப்போது எதிர்ப்பட்ட தர்மரைப் பார்த்து அஸ்வத்தாமன் இறந்து விட்டானா? என்று என் தந்தை நம்பமுடியாத அதிர்ச்சியுடன் கேட்ட போது தர்மர் அசுவத்தாமன் இறந்தது உண்மை. ஆனால் அது ஒரு யானை’ என்றார். அவர் இரண்டாவது வாக்கியத்தைக் கூறும்போது யுத்த பேரிகைகளைப் பெரிதாக ஒலிக்க விட்டார் கண்ணன். முதல் வாக்கியத்தை மட்டும் காதில் வாங்கிக் கொண்ட என் தந்தை பேரதிர்ச்சி அடைந்தார். நான் இறந்ததாக எண்ணி போரை நிறுத்தி விட்டு போர்க்களத்திலேயே கீழே அமர்ந்து கொண்டார். அப்போது துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன் அவரைக் கொன்றான். உண்மையை அறிந்ததும் முதலில் சோகவயப்பட்டேன். பிறகு அளவில்லாத கோபம் கொண்டு பழி வாங்கத் தீர்மானித்தேன். போரின்போது ஒருநாள் ஒரு காட்சியைக் கண்டேன். ஆந்தை ஒன்றை காக்கைகள் பகல் பொழுதில் தாக்கிக் கொண்டிருந்தன. அந்த ஆந்தை இரவில் காக்கைகளை பதிலுக்குத் தாக்கியது. இது எனக்கு புதிய சிந்தனையை விதைத்தது. போர்க்களத்தில் பாண்டவர்களை அழிப்பது என்பது இயலாத காரியம் என்பதால் அவர்கள் துாங்கும் போது அவர்களை அழிக்கலாம் என தீர்மானித்தேன். இதை உணர்ந்து கொண்ட குலகுரு கிருபாச்சாரியார் என்னைத் தடுத்தார். ‘போரின் விதிமுறைகளுக்கு எதிராக நீ செயல்படக்கூடாது’ என்றார். இந்த உபதேசம் எனக்கு சமாதானம் அளிக்கவில்லை. என் தந்தையை அவர்களை கொன்ற விதம் போர் விதிக்கு உட்பட்டதா? ஆயுதங்கள் அனைத்தையும் துறந்து என் தந்தை அமர்ந்திருந்தபோது அவரைக் கொன்றானே திருஷ்டத்யும்னன்? பாண்டவர்கள் தங்கியிருந்த கூடாரத்தை அடைந்தேன். உள்ளே ஐவரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். கூடாரத்துக்குத் தீ வைத்தேன். பின்னர்தான் தெரிந்தது, பாண்டவர்களைக் கண்ணன் ஆலோசனைக்காக அழைத்து சென்றுவிட்டார் என்பதும், அவர்களது மகன்கள்தான் நான் வைத்த தீயில் எரிந்து சாம்பலாயினர் என்பதும். பாண்டவர்கள் எனது செயலுக்காக என்மீது உக்கிரம் அடைந்தார்கள். அர்ஜுனனுக்கும் எனக்கும் இடையே கடும்போர் நடைபெற்றது. சக்தி மிகுந்த பிரம்மாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஏவினேன். பதிலுக்கு தன்னிடமிருந்த பிரம்மாஸ்திரத்தை அர்ஜுனனும் என் மீது ஏவினான். இந்த இரண்டு சக்தி மிகுந்த ஆயுதங்களும் மோதிக்கொண்டால் உலகமே அழிந்துவிடும் என்பதால் இருவரையும் அவரவர் அஸ்திரத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு முனிவர்கள் வலியுறுத்தினர். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அர்ஜுனன் தனது பிரம்மாஸ்திரத்தை மீண்டும் தன்னிடமே வரவழைத்துக் கொண்டான். ஆனால் பழி உணர்ச்சி குறையாத நான் எனது பிரம்மாஸ்திரத்தை உத்தரையின் வயிற்றின்மீது தாக்க வைத்தேன். அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரை அப்போது கர்ப்பிணியாக இருந்தாள். ஏற்கனவே பாண்டவர்களின் ஐந்து மகன்களை நான் அழித்து விட்டேன். இந்த நிலையில் உத்தரையின் கருவிலுள்ள குழந்தையையும் அழித்துவிட்டால் பாண்டவ வம்சத்துக்கு வாரிசு இல்லாமல் போகும் என்று முடிவெடுத்துதான் இப்படிச் செய்தேன். பெரும் சக்திவாய்ந்த என் பிரம்மாஸ்திரம் உத்தரையின் கருவில் உள்ள சிசுவைக் கலைத்தது. ஆனால் கண்ணன் தனது சக்தியால் அந்தக் கருவை உயிர்ப்பித்தார். கண்ணன் எனக்கு இப்படி ஒரு சாபம் கொடுத்தான். ‘இனி கலியுகம் முடியும் வரை நீ தனியாகவே இந்த உலகில் அலைவாய். யாருடைய பரிதாபமும் கருணையும் உனக்கு கிடைக்காது. எந்த சமூகத்திலும் நீ இணைந்திருக்க முடியாமல் போகும். தீர்க்க முடியாத கடும் நோய்களால் பாதிக்கப்படுவாய். உன் நெற்றியில் உள்ள மாணிக்கக்கல் உன்னை விட்டு நீங்கும். நீ தொழுநோயால் அவதிப்படுவாய்’ ஆக ஆயிரம் வலிகளோடும் அச்சங்களோடும் கலியுகம் முடிய நான் காத்திருக்கிறேன்.
|
|
|
|
|