|
சிவபக்தனான வியாபாரி ஒருவர் தினமும் சிவன் கோயிலுக்குச் சென்ற பின்னரே உணவு உண்பார். ஒருமுறை தன் மைத்துனருடன் காட்டு வழியாக வெளியூர் சென்றார். பயணக் களைப்பால் ஒரு மரத்தடியில் தங்கி உறங்கினர். மறுநாள் காலையில் வியாபாரிக்கு முன்பாகவே மைத்துனர் கண் விழித்தார். அருகில் இருந்த நீரோடையில் குளித்து விட்டு கையில் இருந்த கட்டுசாதத்தை சாப்பிட்டார். நீராடியதும் சிவதரிசனம் செய்யாமல் மாமா சாப்பிடமாட்டாரே.... இந்த காட்டுக்குள் சிவன் கோவிலுக்கு எங்கே போவது என்று யோசித்தார் மைத்துனர், தன்னிடம் இருந்த சாக்கு ஒன்றில் மண்ணை நிரப்பி, சிவலிங்கம் போல் வடிவமைத்தார். காட்டுப்பூக்களால் அலங்காரம் செய்து, ஓரிடத்தில் நட்டு வைத்தார். பார்ப்பதற்கு சிவலிங்கம் போலவே இருந்தது. வியாபாரி எழுந்ததும், ‛‛மாமா! நீங்கள் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டீர்கள் தானே... உங்கள் அதிர்ஷ்டம் பாருங்கள்... இந்தக் காட்டுக்குள்ளேயும் சிவலிங்கம் ஒன்று இருப்பதை காலையில் கண்டேன். அதை வணங்கிய பின்னர் நீங்கள் சாப்பிடலாம்’’ என்றார். எல்லாம் சிவனருள் என்று மகிழ்ந்த வியாபாரி காலைக்கடன்களை முடித்து விட்டு நீராடினார். மைத்துனர் காட்டிய இடத்தில் சிவலிங்கத்தை தரிசித்தார். அதன் பின்னரே கட்டுசாதத்தை சாப்பிடத் தொடங்கினார். அப்போது மைத்துனர், ‛‛மாமா! சிவதரிசனம் செய்யாமல் நீங்கள் சாப்பிட மாட்டீர்கள் அல்லவா... அதற்காக நான் செய்த ஏற்பாடு தான் அது. சாக்குப்பைக்குள் மண்ணை நிரப்பி சிவலிங்கமாக வைத்தேன். நீங்களும் நம்பிக்கையுடன் வழிபட்டீர்கள். உங்களின் நலன் கருதி செய்த தவறை மன்னியுங்கள்’’ என்றார். ‛‛பொய் சொல்லாதே.. அந்த பரமேஸ்வரனையே சிவலிங்க வடிவில் தரிசித்து மகிழ்ந்தேன்” என்றார் தீர்மானமாக. “இன்னும் நீங்கள் என்னை நம்பவில்லையா.....சாக்குப்பையை மண்ணில் நட்டு வைத்தது நான் தானே” என்றார் மைத்துனர். குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று சிவலிங்கத்தை நகர்த்த முயன்றார். அது அசையவில்லை. அங்கே நிஜமாகவே சிவலிங்கம் எழுந்தருளி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகிலுள்ள கூழைய கவுண்டன் புதுார். இங்கு மொக்கணீஸ்வரர் கோயில் உள்ளது. மொக்கணி என்பதற்கு சாக்குப்பை என்பது பொருள்.
|
|
|
|