|
‘‘ கப்பலில் ஒரு தம்பதியர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கப்பல் கவிழும் அபாய நிலையில் இருந்தது. ஒரே ஒருவர் மட்டும் தப்பிக்க படகு ஒன்று கிடைத்தது.
மனைவியை பின்னே தள்ளிய கணவன் தான் மட்டும் பிழைக்க படகில் ஏறினார். கவிழும் நிலையில் தவிப்புடன் நின்ற அப்பெண், கணவரை நோக்கி சப்தமிட்டாள்.....
இந்த இடத்தில் அவள் என்ன சொல்லியிருப்பாள்?’’ என்று கதையை நிறுத்திய ஆசிரியர் வகுப்பில் இருந்த மாணவர்களிடம் கேட்டார். பலவிதமான பதில்களை அவர்கள் கூறினர். ஒருவன் மட்டும் அமைதியாக நின்றான். ‘‘ஏன் நீ மட்டும் அமைதியா இருக்க...’’ கேட்டார் ஆசிரியர் ‘‘நம்ம குழந்தையை பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா’’ என்றான். ‘‘எப்படி சரியாகச் சொல்ற...உனக்கு முன்னாடி இந்தக் கதை தெரியுமா?’’ ‘‘இல்ல சார்... எங்கம்மாவும் சாவதற்கு முன்னாடி அப்பா கிட்ட இதைத்தான் சொன்னாங்க...’’ வகுப்பே அமைதியாகி விட்டது. கதையை தொடர்ந்தார் ஆசிரியர்.
தனியாளாக பெண் குழந்தையை வளர்த்தார் அந்த மனிதர். தந்தையின் மரணத்தின் பின் பல ஆண்டுகள் கழித்து ஒருநாள் அவரின் டைரியை படித்தாள் மகள்.
உயிர்க்கொல்லி நோயால் தாய் அவதிப்பட்ட விஷயம் அப்போதுதான் தெரிந்து கொண்டாள்.
டைரியில் கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை விவரித்திருந்தார் அப்பா. ‘‘நானும் உன்னோடு கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும். இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்ய, குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்கும் நிலையில் நான் மட்டும் படகில் தப்பிக்க நேர்ந்ததே’’ இத்துடன்
கதையை முடித்த ஆசிரியர், ‘‘வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாம் நடக்கும். அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனால் சில நேரங்களில் நம்மால் இதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆழமாக யோசிக்காமலோ, சரியாக புரிந்து கொள்ளாமலோ யாரையும் தவறாக நினைக்க கூடாது. நாம் நண்பர்களாக ஓட்டலுக்கு சாப்பிடப் போகிறோம். அதில் யாராவது ஒருவர் காசு கொடுக்க முன்வந்தால் அவர் பணக்காரர் என்று அர்த்தமில்லை. பணத்தை விட நட்பை அவர் பெரிதாக மதிக்கலாம். ஒருவர் முதலில் மன்னிப்பு கேட்கிறார் என்றால் அவர் தப்பு பண்ணியதாக அர்த்தம் இல்லை. ஈகோவை விட உறவை அவர் மதிப்பதாகவே அர்த்தம். நாம் பொருட்படுத்தாவிட்டாலும் கூட, போன், மெஸேஜ் என அடிக்கடி ஒருவர் அனுப்புகிறார் என்றால் அவர் வேலையில்லாதவர் என நினைக்கத் தேவையில்லை. அவர்களின் மனசில் நமக்கு முக்கியத்துவம் தருகிறார் என்று அர்த்தம். வருங்காலத்தில் நம் பிள்ளைகள் நம்மிடம் கேட்கலாம்... ‘‘அந்த போட்டோவில இருக்கிறவங்க யாருப்பா...’’ என்று. கண்ணீர் கலந்த புன்னகையுடன் நீங்களும் அப்போது சொல்லலாம். இவர்கள் கூடத்தான் சில நல்ல தருணங்களில் நான் இருந்தேன் என்று....’’ வாழ்க்கை குறுகியது, ஆனால் மிக அழகானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
|
|
|
|