|
“ராமபிரானே! பிறந்து பிறந்து இறக்கும் இந்த நிலையற்ற வாழ்வு எனக்கு வேண்டாம். எனக்கு பிறவாநிலையான முக்தியை அளியுங்கள். இதுவே நான் வேண்டுவது” என்றாள் நீலி. “பெண்ணே! பூமியில் மனிதன் பிறப்பது புண்ணிய செயல்களைச் செய்வதற்காக. நீ இந்த பூலோகத்துக்கு செய்ய வேண்டிய சேவை இன்னும் நிறைய இருக்கிறது. உன்னை ஒரு நீருற்றாக மாற்றுகிறேன். அதில் பொங்கிப்பெருகும் நீர் அருவியாக விழுந்து நதியாக பெருகி ஓடும். இந்த பூலோகம் உள்ளளவும் நீ நதியாய் ஓடி மக்களின் பசியும், தாகமும் போக்குவாய். பூலோகம் என்றைக்கு அழிகிறதோ, அன்று நீ என் திருவடியை எய்துவாய். நீ நதியாய் பெருகி ஓடும் போது எழும் இந்தக் காடு முழுவதும் பம்பை ஒலி போல் கேட்கும். எனவே மக்கள் உனக்கு ‘பம்பை’ என செல்லப் பெயரிட்டு அழைப்பர். இங்கிருக்கும் தர்மசாஸ்தாவைக் காண வரும் எல்லா பக்தர்களும், உன்னிடத்தில் பிதுர்க்கடன் நிறைவேற்றி, தங்கள் முன்னோர்களை மகிழச் செய்வர். உன் ஒரு துளி அந்த பக்தன் மீது பட்டால் கூட, அவன் நினைத்தது நிறைவேறும்” என வரமளித்தார். இதுகேட்ட நீலி அளவிலா மகிழ்ச்சியடைந்தாள். அவளை ராமர், நீருற்றாக மாற்றினார். அது நதியாகப் பெருகியது. தான் உருவாக்கிய புண்ணிய நதியில் ராமன் நீராடி பிதுர்க்கடன் செய்தார். பிறகு இலங்கை சென்று சீதாபிராட்டியை மீட்டு வரும் போதும், பம்பையில் பிதுர்க்கடன் செலுத்தினார். பிதுர்க்கடன் செலுத்துவது ஒவ்வொருவரின் கடமை. தென்னகத்தில் ஆண்களே பிதுர்க்கடன் செய்யும் வழக்கம் இருக்கிறது. வடக்கே பெண்களும் பிதுர்க்கடன் செலுத்துவர். அந்தக் காலத்தில் பிதுர்க்கடன் செய்யும் போது, முன்னோர்கள் நேரில் வந்து தங்கள் பிள்ளைகள் தரும் பிண்டத்தைப் பெற்றுச் செல்லும் வழக்கம் இருந்தது. பம்பை நதிக்கரையில் ராமருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் தான், இந்த வழக்கத்தையே மாற்றியது. அதன்படி, முன்னோர்கள் நேரில் வராமல், அவர்கள் இருக்கும் இடத்துக்கே மறைமுகமாக பிண்டம் சென்று சேரும் பழக்கம் ஏற்பட்டது. பிண்டம் என்றால் அரிசிமாவு உருண்டை. இதை நதிகளில் கரைத்தால் அது முன்னோரின் பசி போக்கும் என்பது ஐதீகம். ராம லட்சுமணருடன் சீதையும் பம்பை நதிக்கரையில் பிதுர்க்கடன் செலுத்தினாள். அப்போது சீதை மாதவிலக்காக இருந்தாள். இருந்தாலும், பிதுர்க்கடன் செய்ய தடையில்லை என்ற நியதி அப்போது இருந்தது. ஆனால் அவர்கள் மற்றவர்களுடன் சேராமல் தனித்து பிதுர்க்கடன் செய்வர். ராமலட்சுமணர் ஒரு புறமும், சீதை மற்றொரு புறத்திலும் அமர்ந்து பிதுர்க்கடன் செய்தனர். அப்போது தசரதர் நேரில் வந்தார். தன் மருமகள் கொடுத்த பிண்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஆசிர்வதித்து மறைந்து விட்டார். ராமனுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. பெற்ற பிள்ளையிடம் பிண்டம் பெறாமல், மருமகளிடம் வந்து பெற்ற ரகசியம் என்ன என்று அறியும் ஆவலில், அனுமனை அனுப்பி, பிரம்ம லோகத்தில் இருந்த தன் தந்தையை அழைத்து வர உத்தரவிட்டார். தசரதரும் நேரில் வந்து, ராமனிடம் “எதற்காக என்னை அழைத்தாய்?” என்றார். ராமன் தன் சந்தேகத்தை அவரிடம் கேட்டார். “ராமா! மனிதன் பூமியில் வாழும் வரை தான் மனிதனுக்கு மனைவி, குழந்தை, உறவுகள் என்ற பாசமெல்லாம். அவன் மறைந்து விட்டால் பூரண ஞானம் பெற்று விடுகிறான். பணம், பொருள், பதவி ஆசையெல்லாம் அவனை விட்டு போய் விடுகிறது. இவை நிலையற்றவை என்பதை உணர்ந்து கொள்கிறான். நான் இறந்து பிரம்மலோகம் சென்றதும், எனக்கு தானாகவே இந்த ஞானம் வந்து விட்டது. எல்லாரும் சமம் என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. எனக்கு சீதையும், நீயும் ஒன்றாகவே தெரிந்தீர்கள். எனவே அவளிடம் பிண்டம் பெற்றுச் சென்றேன்” என்றார். ராமன் அவரிடம்,“தந்தையே! நியதி என்ற ஒன்றை வகுத்து விட்டால், அதற்கு எவ்வுலகத்தில் வாழ்பவரும் கட்டுப்பட்டே தீர வேண்டும். எனவே, இனி பிண்டம் பெற எந்த ஒரு முன்னோரும் நேரில் வரக்கூடாது. அது அவர்களையே வந்தடையும் என்ற நியதியை உண்டாக்குகிறேன்” என்றார். தசரதரும் அதற்கு சம்மதித்து மறைந்து விட்டார். ஐயப்பனும் மனிதனாக வாழ்ந்த காலத்தில் இங்கு பிதுர்க்கடன் செய்துள்ளார். பிதுர்க்கடன் என்பது நம்மைச் சார்ந்த உறவுகளுக்கு மட்டுமல்ல. நட்புகளுக்கும் நாம் பிதுர்க்கடன் செய்ய வேண்டும் என்பதை ஒரு சம்பவம் மூலம் நிரூபித்தார். உதயணன் என்ற கொள்ளைக்காரன் மீது ஐயப்பன் தன் படைகளுடன் தாக்குதல் நடத்தினார். அந்த தாக்குதலில் ஐயப்பனுடன் வந்த வீரர்கள் சிலரும் இறந்தனர். அவர்களின் ஆத்ம சாந்திக்காக, ஐயப்பன் பம்பை நதிக்கரையில் பிதுர்க்கடன் நிறைவேற்றினார். ராமனாலும், ஐயப்பனாலும் பிதுர்க்கடன் செய்யப்பட்ட புண்ணிய நதி பம்பை. அப்படிப்பட்ட புண்ணிய நதியை, பக்தர்கள் தாங்களே முன்வந்து பாதுகாக்க வேண்டும். சபரிமலை பயணத்தில் பம்பை நதி புண்ணிய நதியாக இருப்பது போல, எருமேலி என்ற இடமும் புண்ணிய பூமியாகத் திகழ்கிறது. மகிஷியை அழிக்க வந்த ஐயப்பன், நள்ளிரவு வேளையில் இவ்வூரில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஊரே உறங்கி விட்ட நிலையில், ஒரு வீட்டில் இருந்து சற்று வெளிச்சம் வெளிப்பட்டதை ஐயப்பன் கண்டார். அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது, ஒரு மூதாட்டி மட்டும் இருந்தார். “பாட்டி! நான் வெளியூர்க்காரன். உன் வீட்டு திண்ணையில் இரவில் தங்கி செல்லலாமா?” என கேட்டார். ஆனால் தான் யார் என்பதை அவளிடம் சொல்லவில்லை. ஐயப்பன் தங்கியதால், அந்த வீட்டுக்கு ‘புத்தன் வீடு’ என்று பெயர் ஏற்பட்டது. ‘புத்தன்’ என்ற சொல்லுக்கு ‘ஒளியைக் கண்டவன்’ என பொருள். ஐயப்பன் அந்த வீட்டில் விளக்கொளியைக் கண்டதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. ஐயப்பன் மகிஷியுடன் போராடி முடித்ததும், அவளது உடல் மீது நின்று நடனம் ஆடினார். அவர் ஆடுவதைக் கண்ட மகிழ்ச்சியில், சுற்றி நின்ற பக்தர்களும் ‘சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம்’ என்று கோஷமிட்டபடியே ஆடி மகிழ்ந்தனர். இதையே பேட்டை துள்ளல் என்ற பெயரில் பக்தர்கள் இன்றும் நடனமாடி வருகின்றனர். ‘பேட்டை’ என்ற சொல்லுக்கு புறநகர் அல்லது சந்தை கூடும் ஒதுக்குப்புறமான இடம். சபரிமலை பயணத்தில் புறநகராக விளங்குவது எருமேலி. புறநகரில் பக்தர்கள் துள்ளி துள்ளி ஆடி மகிழ்வதால், ‘பேட்டை துள்ளல்’ என பெயர் பெற்றது. பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருளை வாங்கும் சந்தையாகவும் எருமேலி விளங்குகிறது. ஐயப்ப சுவாமியை நைஷ்டிக பிரம்மச்சாரி என்பர். ‘நைஷ்டிகம்’ என்றால் ‘தினமும்’ என பொருள். ஆம்...அவர் என்றுமே பிரம்மச்சாரி தான். ஆனால், அவர் ஆரியங்காவில் புஷ்கலா தேவியுடன் அருள்பாலிக்கிறார். அப்படியானால், இதில் ஏதோ ஒரு தாத்பர்யம் இருக்க வேண்டும். அது என்ன! ஐயப்பன் தன் அவதார காலத்திலேயே பூர்ணா, புஷ்கலா ஆகியோரை மணந்தவர் தான். இவர்களில் புஷ்கலாதேவி, நமது தென்னகத்தின் ஆன்மிகத்தலைநகரான மதுரையில் சவுராஷ்டிரா குடும்பம் ஒன்றில் அவதரித்தாள். ஐயப்பன் மானிட அவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, இவளும் அவருடன் வந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. ... தொடரும் ...
|
|
|
|