|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » சிற்பியின் சிறை |
|
பக்தி கதைகள்
|
|
முன்னால் அமர்ந்திருந்த அழகான இளைஞனைப் பார்த்தேன். நல்ல உயரம். சிகப்பு. திட்டமான உடல். அடர்த்தியான கேசம். அழகான முகம். ஆழமாகப் பார்க்கும் கண்கள். “நான் சேது. ஊர், காஞ்சிபுரம். நாங்க பரம்பரையா சிற்ப வேலை பார்க்கறோம். நாங்க செய்யற சிற்பங்கள இந்த உலகமே கும்பிடுது. ஆனா நாங்க வறுமையிலதான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். சாப்பாட்டுக்குக் கஷ்டமில்ல. நாளெல்லாம் நான் சிற்ப வேலை செஞ்சிக்கிட்டேயிருக்கேன். ஆனா எப்பவாவதுதான் காசு வருது. இப்போ வறுமைங்கற ஜெயில்லருந்து தப்பிக்க ஒரு பெரிய வாய்ப்பு கெடைச்சிருக்கு” நான் புருவங்களை நெறித்தேன் “ஒரு பெரிய சினிமா டைரக்டர் சிற்பம் வாங்க வந்தாரு. என்னைப் பாத்து நடிக்க வரியான்னு கேக்கறாரு. ஐநுாறு கோடி ரூபாய் செலவுல பெரிய படம் எடுக்கப் போறாங்களாம். அதுல நான்தான் ஹீரோவாம். ஏதொ டெஸ்ட் எடுக்கணுமாம் வரச் சொல்லியிருக்காங்க. எனக்கு அஞ்சு கோடி தருவாங்களாம். இந்த வாய்ப்பு கெடைச்சா எங்க குடும்பமே வறுமைங்கற ஜெயில்லருந்து தப்பிச்சிரலம்யா. கொஞ்சம் பச்சைபுடவைக்காரிகிட்ட எனக்காகப் பிரார்த்தனன பண்ணுங்கய்யா” முன்னால் சுவரில் மாட்டியிருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தேன். மனதில் ஏதோ நெருடியது. “நான் பெரிய நடிகனாகணுங்கறதுதான் என் பிரார்த்தனை. அதுக்கான நேர்த்திக்கடன் இது” சேது கையில் இருந்த ஒரு பெரிய காகிதப் பொட்டலத்தை பிரித்த போது அதிர்ந்தேன். உள்ளே பச்சைப்புடவைக்காரியின் சிலை இருந்தது. மதுரை மீனாட்சியின் விக்ரகத்தைப் போலவே இருந்தது. இரண்டடி உயரத்தில் நேர்த்தியாக, மனதை உருக்குவதாக இருந்தது. “வாங்கிக்கங்கய்யா. உங்களுக்குத்தான் இது” “நேர்த்திக்கடன்னு சொன்னியேப்பா” “ஆமா. இத நீங்க பச்சைப்புடவைக்காரி சார்புல வாங்கிக்கங்க” “உன் பிரார்த்தனை நிறைவேறட்டும் சேது. நானே காஞ்சிபுரத்துக்கு வந்து இதை வாங்கிக்கறேன்” இரண்டு வாரம் கழித்து சேதுவிடமிருந்து அழைப்பு வந்தது. “என் கனவெல்லாம் காத்தோட போயிருச்சிய்யா. ரெண்டு மாசம் சோறு தண்ணிகூட சரியா சாப்பிட்டாம தவம் மாதிரி பச்சைப்புடவைக்காரியோட சிலையை செஞ்சேன்யா. அதுக்கு பதிலா என்ன நல்லா வச்சி செஞ்சிட்டாய்யா அவ” “என்ன சொல்றப்பா” “எனக்கு வாய்ப்பு தரேன்னு சொன்ன டைரக்டரை சென்னையில போய்ப் பாத்தேன். என்னமோ டெஸ்ட் எல்லாம் செஞ்சாங்க. எல்லாம் நல்லா வந்துச்சி எனக்கு ஒரு லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டாங்க. இப்போ.. இப்போ...’’ “என்னாச்சு” “அந்த டைரக்டர் ஒரு கேஸ்ல மாட்டிக்கிட்டாரு. கைது பண்ணிட்டாங்க. படம் நின்னு போச்சி. ராசியில்லாதவன்னு என்னத் துரத்திவிட்டாங்கய்யா’’ “படுபாவி பச்சைப்புடவைக்காரி ஏன்யா இப்படி சோதிக்கணும்? இதுதான் அவளுக்கு பொழுதுபோக்கா” “தெரியாதுப்பா. ஏன்னா நான் அவளோட பக்தன் இல்ல. கொத்தடிமை. என்னப் பொருத்தமட்டுல அவ என்ன கொடுத்தாலும் சரி, நல்லது கெட்டது, வலி வேதனை, புகழ், வறுமை, நோய் எல்லாம் எனக்கு மகா பிரசாதம்தான்” “எனக்கு ஏதாவது நல்ல வார்த்தைச் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தா...’’ “சொல்றேம்ப்பா. எது நடந்தாலும் பச்சைப்புடவைக்காரி ஒருத்திதாம்ப்பா நமக்கு துணை” இணைப்பைத் துண்டித்தான் சேது. அன்று மாலை அலுவலகத்தை விட்டுக் கிளம்பலாமா என்று யோசித்த சமயத்தில் ஒரு பெண் வேகமாக உள்ளே நுழைந்தாள். என் முன் அமர்ந்த தோரணையைப் பார்த்ததுமே அவள் யாரென புரிந்துவிட்டது. “சிற்பியை கைவிட்டுவிட்டேன் என்று கோபமா?” “கோபப்படும் உரிமை கொத்தடிமைகளுக்கு ஏது” “அந்தச் சிற்பியை நான் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறேன்” “புரியவில்லையே” “அங்கே தெரியும் காட்சியைப் பார்” ஒரு சிறிய நாடு. அங்கே கொடுங்கோலனின் ஆட்சி நடக்கிறது. நாட்டின் தலை நகரில் இருந்த சிறைச்சாலை நிரம்பி வழிந்தது. மேலும் மேலும் மக்கள் கைது செய்யப்பட்டுகொண்டிருந்தார்கள். சிறையில் ஒழுங்காக இருப்பவர்கள் அதன் தெற்குப் பகுதிக்கு மாற்றப்படுவார்கள். அங்கே காவல் கட்டுப்பாடுகள் மிக குறைவு. நடுவே இருந்த கண்ணாடிக் கதவின் வழியாக வெளியே பார்க்கலாம். வெளியே அழகான பரந்த புல் வெளி. ஆங்காங்கே பெரிய மரங்கள். சற்றுத் தள்ளி பெரிய மலைகள். ரம்மியமான சூழ்நிலை. எப்படியாவது தப்பித்து அந்தப் புல்வெளிக்கு செல்ல வேண்டும் என கைதிகள் நினைத்தார்கள். சிறையின் மதில்களில் ஒரு இடத்தில் ஓட்டை இருந்தது. வெளி வேலை செய்யும் நேரத்தில் மதில் அருகே சென்று அந்த ஓட்டை வழியாக வெளியே போய்விட்டால் அதன் பிறகு விடுதலை அடையலாம் எனக் கனவு கண்டார்கள். ஒருநாள் ஒரு கைதி காவலர்களின் கண்களில் மண்ணைத் துாவிவிட்டுத் தப்பித்தான். அவன் புல்வெளியில் நடந்து செல்வதை மற்றவர்கள் ஏக்கத்துடன் பார்த்தனர். மறுநாள் இன்னொருவன் தப்பினான். இப்படியே பலர் தப்பி விட்டார்கள் “இதைப்போல் தப்பிக்க வேண்டும் என்று திட்டம்போட்டான் அந்தச் சிற்பி” “நல்லதுதானே தாயே! நடப்பது கொடுங்கோலாட்சி. அநியாயமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தப்பித்தால் அந்தப் புல்வெளியில் ரம்மியமான சூழலில் நிம்மதியாக வாழலாமே” “அந்தப் புல்வெளி துாரத்திலிருந்து பார்க்கும்போது சொர்க்கமாக தெரியும். ஆனால் அதில் ஆபத்துக்கள் இருக்கின்றன. விஷப்பாம்புகள், பயங்கர மிருகங்கள் நிறைய இருக்கின்றன. சிறையிலிருந்து கைதிகளை வேண்டுமென்றே தப்ப வைத்து அவர்கள் பாம்பிற்கும், புலிக்கும் இரையாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான் அந்தக் கொடுங்கோலன்” “சரி, அதற்கும் சேதுவின் திரைப்பட வாய்ப்புக்கும்...’’ “நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சேது அழகாக இருக்கிறான். விரைவில் நாடே போற்றும் நடிகனாவான். பெண்கள் அவனை மொய்ப்பார்க்ள். கோடிக்கணக்கில் பணம் வரும். பெரிய புகழ் கிடைக்கும். ஆனால் அந்தச் சிறை வறுமைச் சிறையைவிடக் கொடியது. அவனுடைய குடும்பத்தினரே அவனுக்கு துரோகம் செய்வார்கள். அவனுடைய மனைவி குழந்தைகளால்தான் அவனுக்கு அதிக பிரச்னைகள் வரும். தீய பழக்கங்களால் உடல் நலம் கெட்டு நாற்பத்தி நான்கு வயதில் தனியாளாக அவதிப்பட்டுச் சாகவேண்டும் என்பதுதான் அவன் கர்மக்கணக்கு. “சிற்பி நல்லவன். என் சிலையைச் செய்யும்போது அவன் மனம் என்னிடம் ஒன்றியிருந்தது. அதையே ஒரு தவநிலையாகக் கருதி அவன் வாழ்க்கை சீரழிந்து போகாமல் பார்த்துக்கொண்டேன்” “சேதுவிற்கு இனி என்ன ஆகும்?” “சில நாட்கள் வெறுப்பில் இருப்பான். பின் மீண்டும் சிற்பவேலை செய்யத் தொடங்குவான். பெயரும் புகழுடன் செல்வமும் கிடைக்கும். அதற்கு முன்னால் அவனிடம் ஒரு பக்குவம் வந்திருக்கும். எல்லாவற்றையும் அளவோடு அனுபவிக்கும் மனநிலை உருவாகும். காஞ்சிபுரம் அருகே மதுரை மீனாட்சிக்கு ஒரு கோயில் கட்டுவார்கள். என் சிலையை சேதுதான் வடிவமைப்பான். அது பார்ப்பவர் உள்ளங்களை உருக்கும். மனைவி, மக்களோடு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து இறுதியில் என்னுடன் ஒன்றிவிடுவான்.” “இருந்தாலும் வறுமைச் சிறை...’’ “வறுமை சிறைதான். ஆனால் மனம் பக்குவப்படாத நிலையில் கிடைக்கும் செல்வம் இன்னும் பெரிய சிறை. நிறைவு தரும் வாழ்க்கைதான் உண்மையான விடுதலை. உனக்கு என்ன வேண்டும் சொல்” “விடுதலையே இல்லாத சிறை வேண்டும். அதிலிருந்து தப்பிவிடமுடியாதபடி கண்கொத்திப் பாம்பாக நீங்கள் காவல் காக்கவேண்டும்.” “என்ன உளறுகிறாய்?” “தாயே கொத்தடிமையாக உங்கள் அன்பென்னும் சிறையில் காலகாலத்திற்கும் அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்ற வரத்தை கொடுங்கள் போதும்.” அன்னையின் அழகான சிரிப்பில் நான் மயங்கி நின்ற போது மாயமாக மறைந்துவிட்டாள்.
|
|
|
|
|