|
பிறப்பற்ற நிலையடைந்து, தெய்வத்துடன் இரண்டறக் கலப்பதே உயிர்களின் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேற இல்லறத்தை மட்டுமே உதாரணமாகக் காட்ட முடியும். பெற்றவர்களுக்கு குழந்தை வளரும் வரை மட்டும் தான் அவர்களிடம் அதிகாரம் செலுத்த முடியும். திருமணமாகி விட்டால், கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் ஆயுள் காலம் வரை, அன்பும் அதிகாரமும் செலுத்தலாம். ஏனெனில் இருவரும் உடலாலும், உயிராலும் கட்டப்பட்டு விடுகிறார்கள். கண் முன் பெற்ற அன்னையை விட, முன்பின் பாராத எங்கிருந்தோ வந்த ஆணும், பெண்ணும் உள்ளன்புடன் இணைந்து விடுகிறார்கள். ஒரு தலைசிறந்த கணவனும், மனைவியும் ஆயுள் வரை பிரிவதில்லை என்று, நெருப்பின் முன் அமர்ந்து சத்தியம் செய்கிறார்கள். திருமணத்தின் போது, ஹோமகுண்டம் அமைப்பதின் நோக்கம் இதுவே. மனிதர்கள் மட்டுமல்ல, தெய்வங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மனிதர்கள் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற தத்துவத்தை கடைபிடிக்கிறார்கள். தெய்வங்கள் பல தாரங்களை மணப்பதாக புராணங்களில் எழுதப்படுகின்றன. மனித திருமணம் உடல் சார்ந்தது என்பதால், இங்கே ஒன்றும் ஒன்றுமாக உள்ளது. தெய்வத்திருமணங்கள் ஆன்மா சார்ந்தவை. அதாவது மனிதனுக்குரிய தாம்பத்யம் போல, தெய்வங்களுக்கு கிடையாது, அவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியை பக்தனாகவே பார்க்கிறார்கள். ஒவ்வொரு பக்தனும், பக்தையும் கடவுளின் திருவடியைச் சேர்கிறார்கள். அவர்களது பக்தியின் ஆழத்தைப் பொறுத்து கடவுள் அவர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார். இதைத்தான் தெய்வநிலை என்பர். ஆண்டாள், ராதை போன்றவர்கள் கண்ணனை அடைந்தது அவன் மீது கொண்ட தீவிர பக்தியால் தான். இதை பாமர மக்களுக்கு புரிய வைக்க இருவரும் காதலித்ததாக புராணங்கள் சொல்லும். பூமியில் பிறந்த லட்சுமி, சீனிவாசனை அடைந்தாள் என்கிறது திருப்பதி தல தலபுராணம். ஒரு மீனவரின் மகளாகப் பிறந்த பார்வதி, சிவனை தன் பக்தியால் அடைந்தாள். முருகன் வள்ளியை விரும்பி திருமணம் செய்ததும், தன்னோடு இணைத்துக் கொள்ளவே. இதைப் போல் தான், சாஸ்தா அவதார காலத்தில் பூபால பளிஞ்ஞன் என்ற மன்னனின் மகளாகப் பிறந்த புஷ்கலாவை திருமணம் செய்திருந்தார். அவள் கலியுகத்தில், மதுரையில் சவுராஷ்டிர குலத்தில் அவதாரம் செய்திருந்தாள். சவுராஷ்டிர மக்களின் தொழில் பட்டு நெசவு. இவர்கள் சேர அரச குலத்தினருக்கு பட்டாடை நெய்து, விற்பனைக்காக எடுத்துச் செல்வர். மதுரையில் இருந்து செங்கோட்டை வழியாக ஆரியங்காவு காட்டை இவர்கள் கடந்து செல்ல வேண்டும். அக்காலத்தில் கோயில்களிலும், சத்திரங்களிலும் மட்டுமே தங்க முடியும். புஷ்கலாவின் தந்தையும் பட்டு வியாபாரி. அவர் ஒவ்வொரு முறையும் சேர நாடு சென்று திரும்பும் போது, தான் தங்கிய இடங்களைப் பற்றி மகளிடம் கதை கதையாகச் சொல்வார். இளைஞர்களிடம் நாம் என்ன சொல்கிறோமோ, அது அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும். புஷ்கலாவின் தந்தை ஆரியங்காவு பற்றியும், அங்கே அருள்பாலிக்கும் ஐயப்ப சுவாமி பற்றியும் எடுத்துரைப்பார். ஐயப்பனின் அழகை வர்ணிப்பார். இதைக் கேட்டு கேட்டு, புஷ்கலாவின் மனதில் ஐயப்பன் மீது அபார பக்தி ஏற்பட்டது. அது காதலாகவும் மாறியது. மணந்தால், அந்த ஐயப்பனையே மணப்பது என, அவனது நினைவிலேயே இருந்தாள். ஐயப்பன் அவளது பக்தியை எண்ணி வியந்தார். தன் திருவிளையாடலை துவக்கினார். ஒருசமயம், தன் தந்தை சேரநாடு கிளம்பிய போது, புஷ்கலாவும் உடன் வருவதாகச் சொன்னாள். “மகளே! அது காட்டு வழி. புலிகளும், யானைகளும் எப்போது வருமென்றே சொல்ல முடியாது. நாங்கள் பழக்கம் காரணமாக, அவற்றிடமிருந்து எப்படியோ தப்பி விடுகிறோம். நீ அனுபவமில்லாதவள். கல்லும் முள்ளும் காலில் குத்தும். வேண்டாம் அம்மா! நீ வீட்டிலேயே இரு” என்றார் தந்தை. மகளோ தன் நோக்கத்தில் பிடிவாதமாக இருந்தாள். அவளது ஆர்வத்தைக் கண்ட தந்தையும், ஒரு வழியாகச் சம்மதித்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் தலைவனைக் காண புறப்பட்டாள் புஷ்கலா. அவர்கள் ஆரியங்காவை அடைந்த போது இருட்டாகி விட்டது. கோயில் நடை திறந்திருந்தது. ஐயப்பனை கண் குளிரத் தரிசித்தாள் புஷ்கலா. மேல்சாந்தி (கேரள பூஜாரிகளை இப்படித்தான் அழைப்பர்) ஐயப்பனுக்கு பூஜை செய்தார். பிறகு அவர்கள் புறப்பட்டனர். இருளோ அதிகமாக இருந்தது. மகளுடன் அந்த இருட்டில் செல்வது சரியானதாக இருக்காது. அதே நேரம் மறுநாள் காலைக்குள் பட்டுத்துணிகளை உரியவர்களிடம் ஒப்படைத்தும் ஆக வேண்டும் என்ற சூழலில் புஷ்கலாவின் தந்தை மேல்சாந்தியை சந்தித்தார். “சுவாமி! எனது மகள் கோயிலிலேயே தங்கியிருக்கட்டும். நான் என் பணியை முடித்து விட்டு, வரும் வழியில் அழைத்துச் செல்கிறேன். இருளாகி விட்டதால், இவளை உடன் அழைத்துச் செல்வது பாதுகாப்பாக இருக்காது. தாங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று பணிவோடு கேட்டார். அன்பே வடிவான மேல்சாந்தியும், “அதற்கென்ன! தாராளமாக இங்கே தங்கட்டும், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். புஷ்கலாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தான் பக்தி செலுத்தும் தெய்வத்தின் இல்லத்திலேயே தனக்கும் தங்க வாய்ப்பா! ஆகா...நான் கொடுத்து வைத்தவள், என மகிழ்ந்தாள் புஷ்கலா. அவளது தந்தை சென்று விட்டார். இரவெல்லாம் புஷ்கலாவுக்கு துாக்கம் வரவில்லை. ஆரியங்காவு ஐயன் அவளது நினைவில் வந்து நின்றான். நினைக்கத் தெரிந்த மனதுக்கு அந்த அழகனை மறக்கத் தெரியவில்லை. கண்கள் மூடியிருந்தாலும், அதற்குள் ஐயன் வந்து நின்றான். இங்கே புஷ்கலா ஐயப்பனின் நினைவில் மூழ்கிக் கிடக்க, அவளது தந்தை காட்டு வழியே, திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது யானை ஒன்று பிளிறும் சப்தம் கேட்டது. இரவு வேளையில் யானையிடம் மாட்டிக் கொண்டால் நிலைமை என்னாகும்? ஐயோ மகளே புஷ்கலா! உன்னை வேறு ஆரியங்காவில் விட்டு வந்திருக்கிறேனே! எனக்கு ஏதாவது ஒன்றானால், நீ தவித்துப் போவாயே! உன்னை யார் மதுரைக்கு திரும்பவும் அழைத்துச் செல்வர்! ஆரியங்காவு ஐயனே! என்னையும், என் மகளையும் காப்பாற்று” என மனதுக்குள் கதறினார். இதற்குள் யானை அருகில் வந்து விட்டது. அவர் ஓட ஆரம்பித்தார். “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று ஓலமிட்டார். அப்போது ஒரு இளைஞன் வேகமாக ஓடி வந்து யானையை தைரியமாக வழி மறித்து நின்றான். யானை தன் தும்பிக்கையை நீட்டி அவனை இழுக்க முயன்றது. அவன் அசரவில்லை. தும்பிக்கையை பிடித்து வளைத்து அதனுடன் போரிட்டான். அவன் பார்ப்பதற்கு ஒரு வேடனைப் போல் இருந்தான். இந்த இளைஞனால் பலம் மிக்க யானையை அடக்க முடியுமா? என்ன நடக்கப் போகிறதோ...இன்று அவனுக்கும், எனக்கும் உயிர் தங்குமா? என் மகளை மீண்டும் நான் பார்ப்பேனா? புஷ்கலாவின் தந்தை திகிலுடன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். ...
|
|
|
|