|
பச்சைக்கிளி ஒன்றை கூண்டில் வைத்து வளர்த்தார் விவசாயி ஒருவர். வயலுக்கு செல்லும் போது கிளி சொல்லியது ‘‘என் ஜோடிக் கிளி அங்கிருக்கும். அதனிடம் நான் கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்’’ அவரும் ஜோடிக்கிளியைக் கண்டுபிடித்து விபரத்தை தெரிவித்தார். அதைக் கேட்டதும் கண்ணீர் சிந்தியபடி அது சுருண்டு விழுந்தது. ‘‘அடடா... இந்தக் கிளி இறப்பதற்கு காரணமாகி விட்டோமே’’ என வருந்தியபடியே வீட்டுக்கு வந்தார். நடந்ததை சொல்லி கூண்டுக்கிளியிடம் வருத்தப்பட்டார். அதுவும் கண்ணீர் விட்டபடி கூண்டுக்குள்ளேயே விழுந்து விட்டது. இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என கவலையுடன் கூண்டைத் திறந்தார். உடனே அந்தக் கிளி விர்ரென்று பறந்து ஒரு மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், ‘‘உன் ஜோடிக்கிளி இறந்தது தெரிந்தும் நீ நடித்து தப்பி விட்டாயே’’ எனக் கேட்டார். அதற்கு கிளியும், ‘‘என் ஜோடிக்கிளி இறக்கவில்லை. கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே சொல்லி அனுப்பியிருக்கிறது’’ என்று சொல்லி விட்டுப் பறந்தது. பறவைகளை கூண்டுக்குள் அடைக்காதீர்கள். சுதந்திரம் என்பது நமக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும்தான்...!
|
|
|
|