|
காஞ்சி மஹாபெரியவரின் பக்தரான விஸ்வநாதன் ஒருநாள் தேனம்பாக்கம் மடத்திற்கு வந்திருந்தார். அப்போது சிலர் தட்டில் பழங்கள், கத்தையாக பணத்தை வைத்து சுவாமிகளை வணங்கினர். அதைக் கண்ட பெரியவர், ‘யாரும் பணம் வைக்க வேண்டாம் என தொண்டர்களிடம் சொல்லியிருந்தேனே’’ எனத் தடுத்தார். ‘எங்கும் நிலையாக இல்லாமல் பல இடங்களுக்கும் சந்நியாசிகள் பயணம் செய்ய வேண்டும். பணத்தை அவர்கள் கையாலும் தொடக் கூடாது. இங்கு உள்ள சீடர்களும் பணப்பெட்டி வைத்திருப்பதில்லை. பணத்தை பத்திரப்படுத்தும் வசதி இங்கு கிடையாது. பணம் காணாமல் போக வாய்ப்பு இருப்பதால் தொண்டர்கள் மீது வீண் சந்தேகம் ஏற்படும். பணம் இருந்தால் இரவில் திருடன் வருவானோ என்ற பயத்தில் துாக்கம் வராது’ என அதற்கான காரணத்தை விளக்கினார். அதைக் கேட்ட விஸ்வநாதனுக்கு மெய் சிலிர்த்தது. ஒருமுறை வெளியூர் சென்ற நேரத்தில் விஸ்வநாதனின் வீட்டிற்குள் திருடன் ஒருவன் புகுந்தான். பணம், நகை என எதையும் அவன் திருடவில்லை. ஒரு வாரத்திற்குள் காவல் துறையினர் திருடனைக் கைது செய்தனர். ‘திருட வந்த இடத்தில் காவியுடையில் வயதான ஒருவரைக் கண்டதாகவும், கையில் குச்சி(தண்டம்) ஒன்றை வைத்தபடி ‘ஓடு ஓடு’ என தன்னை விரட்டியதாகவும், பூட்டிய வீட்டிற்குள் இவர் எப்படி நுழைந்தார் என்ற சந்தேகம் எழுந்ததால் தப்பித்து ஓடியதாகவும் தெரிவித்தான். காஞ்சி மஹாபெரியவரின் திருவிளையாடல்தான் என்பதை அறிந்த விஸ்வநாதன் பரவசத்தில் ஆழ்ந்தார். மடத்திற்குச் சென்று நடந்ததை அவர் தெரிவித்த போது, ‘பொருள் ஏதும் திருடாத அவனைப் போலீசார் தண்டிக்கவில்லையே’’ என தாயுள்ளத்துடன் பெரியவர் கேட்க நெகிழ்ச்சியில் ஆழ்ந்தார். இதைப் போல ஒருமுறை கிராமம் ஒன்றில் முகாமிட்டிருந்த மஹாபெரியவரை தரிசிக்க விஸ்வநாதன் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு தம்பதியர் ரூபாய் பத்தாயிரம் கொண்ட நாணய மூட்டை ஒன்றை சுவாமிகளுக்கு சமர்ப்பித்தனர். அத்தம்பதியை அருகிலுள்ள கோயிலுக்கு அனுப்பி விட்டு விஸ்வநாதனை அழைத்தார். ‘‘இந்த பணம் தவறான வழியில் வந்ததால் மடத்திற்கு வேண்டாம். அவர்களிடமே ஒப்படைத்து விடு’’ என உத்தரவிட்டார் மஹாபெரியவர். இப்படியும் ஒரு அபூர்வ துறவியா என ஆச்சரியத்துடன் அதை ஒப்படைத்தார் விஸ்வநாதன்.
|
|
|
|