Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அகத்தியர் ஆசி
 
பக்தி கதைகள்
அகத்தியர் ஆசி


தண்டகாரண்யம் பெரும் பேறு பெற்றது என்றே சொல்ல வேண்டும். ஆமாம், இங்கே ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார்கள். இன்னும் நான்கே வருடங்கள்தான், அயோத்தி திரும்பி விடலாம்…
ராமன் என்ற சூரியப் பேரொளி  நிறைந்திருந்ததால் விராதனுக்குப் பிறகு அரக்க நிழல் அங்கே படரவே இல்லை. ராம மணம் கமழும் இடத்தில் பிற துர்வாசம் நுழைய முடியுமா என்ன?
முனிவர்களும், தவசீலர்களும் ராமனைப் போற்றி மகிழ்ந்தார்கள். எந்த இடையூறும் இல்லாமல் யாகமும், வேள்வியும் இயற்றி நிம்மதியாக பணியாற்றினார்கள்.  
கானகத்தின் மேலும் சில பகுதிகளுக்குச் செல்ல ராமன் எண்ணினான். அவனுடைய விருப்பத்தைப் புரிந்து கொண்ட ரிஷிகள், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது போல, பிறரும் ராம பார்வையைப் பெறுவது நியாயம் என்றே கருதினர். ஆகவே ராமனிடம், ‘‘நீங்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஓர் ஒப்பற்ற முனிவர், அகத்தியர். அவர் உங்களுடைய  வருங்காலம் மேன்மேலும் சிறக்க அருள்வார்’’ என்றுரைத்தார்கள்.
பத்து ஆண்டுகளாகத் தங்களுக்குப் புகலிடம் அளித்து, ஆதரித்தும் வந்த முனிவர்களுக்கு சீதை, லட்சுமணனுடன் சேர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றான் ராமன்.
வழியில் பல நதிகளில் நீராடி மகிழ்ந்தார்கள். ஆங்காங்கே ஆசிரமம் அமைத்துக் கொண்டு, தவம் இயற்றிய முனிவர்களை சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றார்கள். சுதீக்கணர் என்னும் முனிவரின் அன்பான வழிகாட்டுதலின்படி அகத்திய முனிவர் வாழும் பகுதிக்குச் சென்றார்கள்.
குறுமுனியே ஆனாலும், மேரு மலை போல ஆற்றல் கொண்டவர் அகத்தியர். கடலுக்குள் ஒளிந்து கொண்டு, அவ்வப்போது வெளிப்பட்டு அசுரர்கள், அப்பாவிகளுக்கு அநியாயம் செய்வது பொறுக்காமல், மொத்தக் கடலையும் அள்ளிப் பருகியவர். ஆனால் கடலின்றி அமையக்கூடாது உலகு என்ற தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, அசுரர்களை விழுங்கிவிட்டு கடலை மட்டும் உமிழ்ந்தவர். ஆணவம் கொண்டு வான்வெளியில் யாருக்கும் வழி கொடுக்காமல் நெடிதுயர்ந்து நின்ற விந்திய மலையின் உச்சியில் அடித்து அதைத் தரைமட்டமாக்கியவர். சிவபெருமான்–பார்வதி திருமணத்தைக் காண உலகோர் அனைவரும் வடதிசை செல்ல அதனால் தென்திசை தாழ்ந்தது. ஆகவே தெற்குப் பக்கம் சென்று பூமியை சமன்படுத்துமாறு மகேஸ்வரன் இட்ட கட்டளைப்படி தென் பகுதிக்கு வந்து நேர் செய்தவர்.  இல்வலன் - வாதாபி என்னும் அரக்க சகோதரர்களை அவர்களுடைய தந்திர வழியிலேயே சென்று வதைத்தவர். சிவபெருமான் அருளிச் செய்ய தமிழை அணு பிசகாமல் கற்றறிந்தவர். தம் ஞானத் திறத்தால் சமஸ்கிருத மொழியையும் தெள்ளென பயின்றவர். இவரே பின்னாளில் ராம-ராவண யுத்தத்தின்போது எதிர்பாராமல் சோர்வுற்ற ராமனுக்கு, யுத்தகளத்துக்கே வந்து ‘ஆதித்ய ஹ்ருதயம்‘ ஸ்லோகங்களை இயற்றி அளித்து புத்துணர்வு வழங்கினார். தன் கமண்டலத்தில் காவிரி நதியையே அடைத்து எடுத்துச் சென்றவர்.
இத்தகைய பராக்கிரமங்கள் மிக்க அகத்தியப் பெருமானின் மேன்மையான நற்பண்புகளை சீதைக்கும், லட்சுமணனுக்கும் விவரித்தபடி பயணித்தான் ராமன்.
மூவரையும் அகத்தியர் அகமும், முகமும் மலர வரவேற்றார், உபசரித்தார். அவருடைய ஞானம் கண்களில் பிரகாசித்தது. தன்னைச் சார்ந்தவர்களிடம் அவர் தமிழிலும், ராமனிடம் சமஸ்கிருதத்திலும் உரையாடி, தன் பன்மொழிப் புலமையை பறைசாற்றினார். சீதை அவருடைய தமிழைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்தாள். அதன் இனிமையில் நெகிழ்ந்தாள். லட்சுமணனோ, அகத்தியர் மற்றும் பிற முனிவர்கள் வசிக்கும் குடில்களின் அமைப்பை ஊன்றி கவனித்தான். அந்தக் குடில்களுக்குள் காணப்பட்ட வசதிகளையும் ஆராய்ந்தான்.  அரண்மனையில் தங்களுடைய ராஜபோக வாழ்வுக்கும், இங்கே குடிலில் வாழ்வதற்கும் அடிப்படையில் எந்த பெரிய வித்தியாசமும் இல்லாததையும் கவனித்தான்.
அகத்தியருடன் சில நாட்கள் தங்கிய பிறகு,  தங்கள் பயணத்தைத் தொடர விரும்பினான் ராமன். அகத்தியர் அவனிடம் பஞ்சவடிக்குச் சென்று வசிக்குமாறு அறிவுறுத்தினார். ‘‘கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் அமைதியான இடம் அது. சுவை மிகுந்த காய், கனிகள், கண்ணுக்கினிய காட்சிகள், என்று மனதுக்கு ரம்மியம் தரும் அம்சங்கள் நிறைந்தது. இன்னும் கொஞ்ச நாட்கள்தானே, அதுவரை அந்த இடம் உங்களுக்குப் பரிபூரண சந்தோஷத்தைத் தரும். சென்று வாருங்கள்’’ என்றார். கூடவே விஷ்ணு தனுசையும், சில அஸ்திரங்களையும், கத்தியையும் ராமனிடம் கொடுத்தார்.
விஷ்ணு தனுசா? கேள்விப்பட்டது போல இருக்கிறதா? ஆமாம், பரசுராமரின் கர்வத்தை அழிக்க அவருடையை விஷ்ணு தனுசை வளைத்து அம்பைத் தொடுத்தானே ராமன், அதேதான். பரசுராமர் தன்னிடமே கொடுத்துவிட்டுப் போன அந்த வில்லை ராமன் வருணனிடம் அளித்தான். வருணன் அதை இந்திரனுக்கு வழங்க, இந்திரனோ உலக நன்மையை முன்னிட்டு அதனை அகத்தியரிடம் கொடுத்து வைத்திருந்தான். அந்த விஷ்ணு தனுசுதான் இப்போது மீண்டும் ராமனிடமே வந்திருக்கிறது!
மூவரும் அகத்தியரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்கள். வழியில் மனிதரல்லாத ஒரு ஜீவனைத் தாங்கள் சந்திப்போம் என்று அவர்கள் கருதியிருக்க மாட்டார்கள். அந்த ஜீவன் – ஜடாயு என்ற கழுகு, பறவைகளின் அரசன்.
ஜடாயுவின் பிரமாண்ட உருவம் ராம லட்சுமணரை பிரமிக்க வைத்தது. அதேபோல முனித் தோற்றம் கொண்ட ஆனால் முனிவரல்லாத அவர்களை ஜடாயு வியப்புடன் பார்த்தான். இரு தரப்பாரும் பரஸ்பரம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். தசரதனின் மகன்கள் இவர்கள் என்றறிந்ததும் ஜடாயு பெரிதும் மகிழ்ந்தான். ‘‘சூரியனின் தேர்ப்பாகனான அருணனின் மகன் நான். சூரிய குலத் தோன்றலான உங்கள் தந்தையாருக்கு நெருங்கிய நண்பன். தசரதன் நலமாக இருக்கிறாரா’’ என்று ஆவலுடன் கேட்டான்.
தந்தையார் விண்ணுலகு எய்திவிட்ட சோகச் செய்தியை ராமன் சொல்லக் கேட்டு நிலை குலைந்தான் ஜடாயு. அதோடு, அவர்கள் கானகம் வர நேர்ந்த காரணத்தைத் தெரிந்து கொண்டு அதனாலும் பெரிதும் துன்பமுற்றான். இன்னும் நான்கு ஆண்டுகள் கானகத்திலேயே அவர்கள் வசிக்க வேண்டிய கட்டாயத்தை எண்ணி மனம் வெதும்பினான்.
ராமன், அகத்தியப் பெருமான் தங்களை பஞ்சவடி சென்று வசிக்குமாறு வழிகாட்டியிருக்கிறார் என்று சொன்ன போது, ‘‘அது மிகச் சிறந்த பகுதியாயிற்றே! நீங்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம்’’ என்று விவரம் சொன்னான் ஜடாயு. அதோடு, ‘‘வாருங்கள், உங்களுக்கு வழி காட்டுகிறேன்’’ என்று கூறியபடி அவர்களுக்குச் சற்று மேலாக, அவர்கள் மீது ஆதவன் கிரணங்கள் படாமல் தன் பரந்த சிறகுகளை விரித்து, நிழலால் போர்த்தியபடி பறந்தான்.
பின்னால் வரவிருக்கும் சம்பவங்களுக்கு ஆதாரமாகவோ, சாட்சியாகவோ, உறுதுணையாகவோ அமைய, முன்னேற்பாடுகளாய் அமையும் சந்தர்ப்பங்கள்தான் எத்தனை பயனுள்ளவை.
அத்திரி முனிவரின் பத்தினி சீதைக்குப் பூட்டி அழகு பார்த்த நகைகள், அகத்தியரின் தரிசனம், இதோ இப்போது ஜடாயுவின் சந்திப்பு எல்லாமே தங்களுக்கு பின்னாட்களில் உதவப் போகின்றன என்பதை அறியாமலேயே ராமன் தன் மனைவி, தம்பியுடன் நடையில் பயணித்துக் கொண்டிருந்தான்.
அதோ பஞ்சவடி. ஐந்து வகை மரங்கள் சூழ்ந்த குளிர் நிழல் தலம். அதைக் கண்டதும் மூவர் உள்ளமும் உவகை கொண்டது. இனி அயோத்தி திரும்பும் நாள் வரை இங்கேயே இனிதே தங்கி விடலாம் என தீர்மானித்துக் கொண்டனர்.
ஆகவே அங்கே தமக்கென ஒரு குடில் அமைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகி விட்டது. அண்ணனின் மனப்போக்கை அறிந்த லட்சுமணன், உடனே நல்ல நிலம் பார்த்து, மண்ணால் சுவர் எழுப்பினான். உறுதியான பருத்த மூங்கில்களால் துாண் நிறுத்தினான். விதானத்தில் மெலிதும், பெரிதுமான மூங்கில் கழிகளையும், பிளாச்சுகளையும் பொருத்தி அவற்றை மரவுரிகளால் ஆன கயிறுகள் கொண்டு இறுகப் பிணைத்தான். அதற்கு மேலே வன்னி மரக் கிளைகளைப் பரப்பினான். இதற்கும் மேல் நாணல், தர்ப்பை, கோரை புற்கள் மற்றும் இலைகளை நிரவினான். தரையை மேடு பள்ளம் இல்லாதபடி சீராக்கினான்.
லட்சுமணனின் இந்தக் கட்டுமான நேர்த்தி கண்டு பெரிதும் வியந்த ராமன் எங்கிருந்து இந்த வித்தையைக் கற்றான் என்று கேட்டான்.
‘‘இதுவரை நாம் பார்த்த முனிவர்களின் குடில்களை ஆராய்ந்து கவனித்து, தங்கள் அருளால் தெரிந்து கொண்டேன்’’ என்று பணிவுடன் பதிலளித்தான் இளவல்.
அதைக்கேட்டு மகிழ்ந்து தட்டிக் கொடுத்தான் ராமன். ‘இவனைப் போன்ற தம்பி உடையான் படைக்கஞ்சான்‘ என்று சீதையைப் பார்த்துச் சொன்னான்.
சீதையும் மைத்துனன் மீது பெருமதிப்பு கொண்டாள்.
இவர்கள் சந்தோஷத்தைக் கெடுக்கவென்றே அங்கே வந்து சேர்ந்தாள் சூர்ப்பனகை.

 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar