Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பாடகரின் வேதனை
 
பக்தி கதைகள்
பாடகரின் வேதனை

“மறை நான்கினுக்கும் தானந்தமான சரணாரவிந்தம்…” உள்ளேயிருந்து வந்த அபிராமி அந்தாதி பாடல் வரிகள் என்னை உருக்க அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்த பெண்ணிற்கு ஐம்பத்தியைந்து வயது இருக்கும். அறையில் நடுவில் அமர்ந்திருந்த ஒரு அறுபது வயதுக்காரர் தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தார்.
“உங்க பச்சைப்புடவைக்காரி செஞ்ச அநியாயத்தப் பாத்தீங்களா?” – அதிர்ந்தேன்.
“பாடறது என் வீட்டுக்காரரு. எப்பவும் அம்பிகையப் பத்தியேதான் பாடிக்கிட்டு இருப்பாரு. கேக்கறவங்களுக்கு கண்ணீர் வராம இருக்காது.”
என் கண்களைத் துடைத்துக்கொண்டேன்.
“பெரிய பாடகரா வரவேண்டியவரு. அந்தக் காலத்துல இவரு பாடாத மேடையேயில்ல. சினிமாவுலகூடப் பாடக் கூப்பிட்டாங்க. ஆனா இப்போ பாருங்க… . “
“ஏன் என்னாச்சு?”
“அவர் கையப் பாருங்க.”
முடக்குவாதம் வந்ததுபோல் இருந்தன அவர் கைகள். விரல்கள் விரைப்பாக இருந்தன.
“ரெண்டு கையும் முடங்கிப் போச்சி. விரல்கள மடக்க முடியாது. யாராவது ஊட்டிவிட்டாத்தான் சாப்பிட முடியும். என்ன வியாதின்னே தெரியல. குஷ்ட ரோகம்னு நெனச்சிஊரும் உறவும் ஒதுக்கி வச்சிருச்சி. இருபது வருஷமா வீட்டுலயே முடங்கிக்கிடக்கறாரு. இந்த நிலைமையிலயும் தன் வாழ்க்கையையே பறிச்சிக்கிட்ட அந்த ராட்சசிய – அதான் உங்க பச்சைப்புடவைக்காரியப் - பத்தித்தான் எந்த நேரமும் பாடிக்கிட்டிருக்காரு. பச்சைப்புடவைக்காரி ஏன் இப்படி ஈவு இரக்கமில்லாத கொடுமைக்காரியா இருக்கணும்?”
கண்ணீரையும் கோபத்தையும் அடக்கிக்கொண்டேன். அன்னையை கால் மணிநேரம் விடாமல் சாடினாள் அந்தப் பெண். நான் எழுந்து நின்று கை கூப்பினேன்.
“இதுக்கு மேலயும் ஒரு வார்த்தை பச்சைப்புடவைக்காரியப் பத்தித் தப்பாப் பேசினீங்கன்னா நான் இங்கேயே செத்து விழுந்திருவேன். அப்புறம் உங்களுக்குத்தான் பிரச்சினை.”
அதிர்ச்சியில் அவள் வாயடைத்துக்கொண்டது.
“ஏதோ பெரிய பாவம் செஞ்சிருக்கேம்மா. அதனாலதான் பச்சைப்புடவைக்காரிய நீங்க திட்டறத நான் கேக்கவேண்டியதாப் போச்சு. எனக்கு ரெண்டு வரம் தருவீங்களா?”
அந்தப் பெண் என்னை வியப்புடன் பார்த்தாள். பாடகரும் பாட்டை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார்.
“உங்க வீட்டுக்காரர ‘ஆனந்தமாய் என் அறிவாய்;’ ன்னு தொடங்கற அபிராமி அந்தாதிப் பாட்ட இன்னொரு தரம் பாடச்சொல்லுங்க. எனக்காக… .”
பாடகர் ஒரு முறுவலுடன் பாடத் தொடங்கினார். இந்த முறை கேட்டபோது இன்னும் அதிகமாகக் கண்ணீர் வந்தது.
“இரண்டாவதா என்ன வேணும்?” பாடகரே கேட்டார்.
“உங்க கால்ல விழுந்து கும்பிடற பாக்கியத்தக் கொடுங்கய்யா. அம்பிகையோட அபரிமிதமான அருள் இல்லாம சத்தியமா உங்களால இப்படிப் பாட முடியாது.”
அவர் பதில் சொல்வதற்குள் நான் அவரை விழுந்து வணங்கினேன். அவர் கண்களின் ஓரத்திலும் கண்ணீர் துளிர்த்திருந்தது.
விடைபெறாமலேயே கிளம்பினேன்.
“இவருக்கு எப்போ சரியாகும்?”
“எனக்குத் தெரியாதும்மா. பச்சைப்புடவைக்காரி சொன்னா நேர வந்து சொல்லிட்டுப் போறேன்.”
அடுத்த இரண்டு வாரங்கள் அந்தப் பாடகர் நினைப்பாகவே இருந்தேன். வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அந்தப் பாடகர் குணமாக வேண்டும் என்று மனமுருகப் பிரார்த்தித்துக்கொண்டேன்.
அன்று பகல் 11 மணியிருக்கும். ஒரு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையிலிருந்து என்னை அழைத்தார்கள்.
“உடனே இங்க வரமுடியுமா?”
“எதுக்கு?”
“மரணப்படுக்கையில இருக்கற ஒருத்தர் உங்களோட பேசணும்னு சொல்றாரு. இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள எல்லாமே முடிஞ்சிரும். அதுக்குள்ள…“
“யாரு?”
பாடகர் பெயரைச் சொன்னார் அழைத்தவர். மருத்துவமனையை நோக்கி விரைந்தேன்.
கார் நிறுத்துமிடத்தில் காத்துக்கொண்டிருந்த நர்ஸ் என்னைக்கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக்கொண்டு ஓடினாள்.
பாடகரைச் சுற்றி அவர் மனைவி, மகள், மருமகன் என்று பலர் நின்றுகொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் மற்றவர்களைச் சிறிது நேரம் வெளியே இருக்கச் சொன்னார் பாடகர்.
அவர் அருகில் அமர்ந்தபடி அவர் கையைப் பிடித்துக்கொண்டேன்
“பச்சைப்புடவைக்காரிமேல எந்தத் தப்பும் இல்ல. அவ கருணையின் மொத்த வடிவம். நான் செஞ்ச பாவத்துக்கு அவ கொடுத்த தண்டனை ரொம்பக் குறைச்சல்.”
என்ன சொல்கிறார் இவர்?
“இருபது வருஷத்துக்கு முன்னால எனக்கு ஒரு தப்பான பொண்ணோட தொடர்பு இருந்தது. அது என் பொண்டாட்டிக்குத் தெரியாது. அந்தப் பொண்ணோட தம்பி எனக்குத் தெரிஞ்சவர்கிட்ட ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கினான். எனக்கு முன்னாலதான் பணப்பட்டுவாடா நடந்தது. நான் இருக்கற தைரியத்துல பணம் கொடுத்தவரு புரோ-நோட்டோ ரசீதோ எதுவும் எழுதி வாங்கிக்கல. திடீர்னு பணத்தத் திருப்பித் தர மாட்டேன், வட்டியும் கட்டமாட்டேன்னு அவளோட தம்பி அடம் பிடிச்சான். பணம் கொடுத்தவர் எங்க ஊர் பஞ்சாயத்துல பிராது கொடுத்தாரு. நான் பணம் வாங்கவேயில்லன்னு சாதிச்சான் அவ தம்பி
‘”அம்மன் சன்னிதில பாடகர் கற்பூரத்த அணைச்சி இவன் பணம் வாங்கலேன்னு சத்தியம் செஞ்சா எனக்குப் பணமே வேண்டாம்” - பணம் கொடுத்தவரு சொன்னாரு. சதா அம்மனைப்பத்தியே பாடிக்கிட்டிருக்கற நான் பொய் சத்தியம் பண்ணமாட்டேன்னு அவரு நம்பினாரு.
அந்த நம்பிக்கையில மண்ணப் போட்டுட்டேன். சார். பொய் சத்தியம் செய்யலேன்னா தொடர்ப அறுத்துருவேன்னு அந்தப் பொண்ணு மிரட்டினா. பெண்ணாசையில மயங்கிக்கிடந்த நான்.. நான்…  இதோ இந்த ரெண்டு கையாலயும் அம்மனுக்கு முன்னால  கற்பூர தீபத்த அணச்சிப் பொய் சத்தியம் செஞ்சேன்.
பணம்கொடுத்தவரு ஆடிப்போய்ட்டாரு. பத்தே நாள்ல ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாரு. மறுநாளே என் கை முடங்கிருச்சி. அந்தப் பொண்ணும் என்னை விட்டுட்டுப் போயிட்டா. என் வாழ்க்கையே நாசமாப் போயிருச்சி.
ஆனாப் பச்சைப்புடவைக்காரியக்  கருணைக்கடல்னுதான் சொல்லணும். என் கைய மட்டும்தானே முடக்கினா. வாய முடக்கலியே. இருபது வருஷமா அவ புகழப் பாடற பாக்கியத்தக்கொடுத்தாளே! நான் சீக்கிரம் செத்துருவேன். எனக்கு நிச்சயமா நரகம்தான்னு தெரியும்.  உங்ககிட்ட எதையும் மறைக்க விரும்பல.”
அறையைவிட்டு வேகமாக வெளியேறினேன். அறை வாசலில் ஒரு நர்ஸ் என்னைத் தடுத்தாள்.
“எங்கே  போகிறாய்?”  அவள் யாரென்று தெரிந்தது.
“உங்களைஅன்று ராட்சசி என்று கரித்துக் கொட்டினவள் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும் வகையில் கேள்வி கேட்கப் போகிறேன்.  அவள் கணவனின் வண்டவாளங்களைச் சொல்லப்போகிறேன்.”
“வேண்டாம். அவளைப் பொருத்தமட்டில் நான் கொடுமைக்காரியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். அவள் கணவன் நல்லவனாகவே இருக்கட்டும்.”
தனை நிந்தித்தவளையும் நேசிக்கும் இந்தக் கருணைக்கடலையா அவள் ராட்சசி என்று சொன்னாள்?
“விரைவில் பாடகன் இறந்துவிடுவான். அவன் செய்த துரோகம்தான் அவன் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டது. இத்தனை காலம் அவன் அனுபவித்த சித்திரவதை அவன் கர்மக்கணக்கை நேர் செய்துவிட்டது. அடுத்த பிறவியில் சிறந்த பாடகனாகப் பிறப்பான். உரிய காலத்தில் என்னுடன் ஒன்றிவிடுவான். அவனை விடு. உனக்கு என்ன வேண்டும்சொல்.”
கண்ணில் நீர்மல்க அவளைப் பார்த்துக் கைகூப்பினேன்.
“தாயே, இன்று நீங்கள் போட்ட பிச்சையால் ஏதோ நல்லவனாக இருக்கிறேன். நான் உத்தமன் இல்லை. உங்களையே நினைத்து உருகி உருகிப் பாடிய அந்தப் பாடகரே பாதை தவறும்போது.. .. நான் எம்மாத்திரம்… குலை நடுங்குகிறது தாயே.
“புலன்களால் கட்டுண்டு சூழ்நிலைக் கைதியாய் நான் கொடிய பாவங்களைச் செய்ய நேரிடலாம். அப்போது என்னிடம் கருணை காட்டாதீர்கள்.கடுமையான தண்டனையைக் கொடுங்கள். நரகத்தீயில் என்னை எரிய விடுங்கள். தாங்கொணா துன்பத்தைக் கொடுங்கள். ஆனால் எந்தச்  சமயத்திலும் உங்கள் திருவடிகள் என் மனதைவிட்டு அகலாதிருக்கும் பேற்றினைக் கொடுங்கள். உங்கள் திருநாமம் என் நாவினைவிட்டு அகாலாதிருக்கும் அரிய வரத்தைக் கொடுங்கள் தாயே! அது போதும்!”
மருத்துவமனையில் என்னைத் தனியாக அழவிட்டுவிட்டு மறைந்தாள் அந்த  மகா மருத்துவச்சி.



 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar