|
இந்தியாவின் வடக்கு எல்லையில் கிழக்கும் மேற்குமாக விரிந்திருப்பது இமயமலை. இதன் தலைவன் ஹிமவான். தெய்வ வடிவம், மலை வடிவம் என இரண்டும் பெற்றவன் இவன். தெய்வ வடிவங்களான பித்ருக்களின் மனதாலேயே தோற்றுவிக்கப்பட்டவர்கள் மேனா, தாரிணி என்னும் இரு அழகிய பெண்கள். இவர்களில் மூத்தவளான மேனாவை மணந்து கொண்டான் ஹிமவான். இளையவளான தாரிணியை மேரு மலையின் தலைவன் மணந்தான். ஹிமவான், மேனா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. மைநாகன் என்று பெயரிட்டார்கள் தந்தையைப் போலவே இவனுக்கும் தெய்வ வடிவம், மலை வடிவம் இரண்டும் உண்டு. மலை வடிவான மைநாகன், தேவர்களின் தலைவனான இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு பயந்து சமுத்திர ராஜனிடம் அடைக்கலம் பெற்று கடலில் அமிழ்ந்து இருந்தான். தேவ வடிவான மைநாகன் நாக கன்னிகைகளை மணந்து நாகலோகத்திலேயே இருந்து விட்டான்.
பிரம்ம தேவரின் குமாரன் தட்சன். தட்சனின் மகள் தாட்சாயணி என்னும் சதி. இவள் சிவபெருமானை மணந்திருந்தாள். ஒரு சமயம் தட்சன் யாகம் ஒன்றைச் செய்தான். அந்த யாகத்திற்கு அவன் தேவர்கள் அனைவரையும் அழைத்திருந்தான், ஏதோ பழைய சம்பவம் ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு மருமகன் சிவபெருமானை அழைக்க மறுத்து விட்டான். தாட்சாயணிக்கு தன் கணவரை நேரில் அழைத்திருக்க வேண்டும் அவரை மாப்பிள்ளையாக கருதாவிட்டாலும் உலகையே கட்டிக் காக்கும் பரம்பொருளான சிவபெருமானை யாகத்திற்கு அழைத்து அவிர்பாகம் தருவது மரபு அல்லவா... இதை மீறிய தந்தையின் அலட்சியத்தைக் கண்டு பொங்கி எழுந்தாள் சதி. கணவரின் அனுமதியுடன் யாகசாலைக்கு சென்றாள். அந்தோ பரிதாபம்! அங்கு அவளை வா என்று சொல்லக்கூட ஆள் இல்லை. தட்சன் தன் மகளை கண்டு கொள்ளவில்லை. அவமானத்தால் துடித்த அவள், தன் யோகசக்தியால் தீ மூட்டி தன் உடம்பையே எரித்தாள். பார்வதியின் பிறப்பு: சரீரத்தை விட்ட சதி மீண்டும், சிவபெருமானையே கணவனாக அடைய விரும்பி, மேனாவின் கர்ப்பத்தை அடைந்தாள். ஒரு சுபயோக நாளில் மேனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த நாள் எல்லா உயிர்களுக்கும் ஆனந்தம் தரும் நாளாக அமைந்தது. எட்டு திசை எங்கும் ஒளி பரவியது. தென்றல் காற்று அனைவருக்கும் சுகம் அளித்தது. ஹிமவான் வீட்டில் சங்க நாதம் முழங்கியது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அந்த மலர்களின் மணம் எங்கும் பரவி பரவசமுறச் செய்தது. பிறப்பினாலேயே மேனா மிகவும் பொலிவுடன் திகழ்ந்தாள். பர்வதத்தின் வம்சத்தில் பிறந்ததால் ‘பார்வதி’ என அவளை அழைத்தனர். பார்வதி, குழந்தை பருவத்தில் தோழிகளுடன் விளையாடினாள். கங்கை மணலில் வீடு கட்டி மகிழ்ந்தாள். முற்பிறவியில் தட்சன் மகளாக இருந்த போது கற்ற விஷயங்கள் எல்லாம் அவள் ஆத்மாவில் நிலைபெற்று இருந்ததால், இந்த பிறவியில் படிக்கத் தொடங்கும் முன்பே எல்லா வித்தைகளும் அவளை வந்தடைந்தன. சூரிய கதிர்களால் மலரும் தாமரை போல அழகுடன் விளங்கினாள். செம்பஞ்சு ரசம் பூசியதைப் போல சிவந்த பாதங்கள், அன்னம் போல நடை, குறுகிய இடை, மிருதுவான கைகள், முத்து மாலை அணிந்த கழுத்து, பவழம் போன்ற சிவந்த உதடு, இனிய குரல். மருண்ட பார்வை, அழகிய கூந்தல் என எல்லாம் சேர்ந்து அழகு பதுமையாக காட்சியளித்தாள் பார்வதி. மகளுக்கு பொருத்தமாக யார் கணவராக வரப்போகிறாரோ எனக் கவலை கொண்டான் ஹிமவான். ஒருநாள் இமயமலைக்கு வந்த நாரத முனிவர் அங்கு பார்வதியைக் கண்டார். "இவள் சிவபெருமானின் மனைவியாவாள். இவளுக்கு போட்டியாக எவளும் வர மாட்டாள். தனது அன்பினால் சிவபெருமானின் உடலில் பாதியைத் தானமாகப் பெறுவாள்" என்று ஹிமவானிடம் தெரிவித்தார். மகளின் திருமணம் நடக்கப் போகிறது என்ற செய்தியே போதுமானது. அதைவிட மகிழ்ச்சி சிவபெருமானின் உடலில் பாதியைப் பெறுவாள் என்பது. இருந்தாலும் அவனது மனதில் ஒரு கவலை. எப்படி சிவபெருமான் தன் மகளை ஏற்கும்படி செய்வது? ஏனெனில் பார்வதியை தனக்கு மணம் செய்து தரும்படி சிவபெருமான் கேட்கவில்லை. உணவு, கல்வி, கன்னிப்பெண்ணைத் தரும்படி கேட்காதவர்களுக்கு கொடுப்பது கூடாது என்பது சாஸ்திரம். முற்காலத்தில் பெண்ணை கேட்ட பின்னரே திருமணம் முடிப்பது வழக்கம். தானே ஒருவரிடம் சென்று தன் பெண்ணை மணக்கும்படி கேட்பதற்கு துணிவில்லை. தன்மானப் பிரச்னையும் குறுக்கிட்டது. மறுத்துவிட்டால் அவமானம். ஒருபுறம் இப்படி இருக்கும் நிலையில், மறுபுறம் சிவபெருமான் தவத்தில் ஆழ்ந்தார். சிவபெருமானின் தவம்: தட்சன் மீது கொண்ட கோபத்தால் சதி தன்னை மாய்த்துக் கொண்ட பின், எதிலும் பற்று இல்லாமல் சிவபெருமான் இருந்தார். யானைத் தோலை உடுத்தி, புலன்களை அடக்கி, கஸ்துாரியின் நறுமணமும், தேவதாரு மரநிழலும் கொண்ட இமய மலையின் சிகரத்தில் தவம் செய்ய முடிவு செய்தார். தவம் செய்பவர்கள் அனைவரும் அடைய விரும்பும் இடம் சிவபெருமானின் பாதம். தவம் முழுவதற்கும் பலன் அளிப்பவரே அவரே. அவருக்கு கிடைக்காத பொருள் எது? அவர் எதற்கு யாரைக் குறித்து தவம் செய்ய வேண்டும்? எல்லா நன்மைகளையும் அவர் விரும்பினால் தானே பெற முடியும். தவம் செய்யும் முறையை உலகிற்கு எடுத்துக் காட்டவே சிவபெருமான் அதில் ஈடுபட்டார். சிவ கணங்கள் காவல் காத்தபடி அங்கிருந்த பாறைகளின் மீது அமர்ந்திருந்தனர். அவரது வாகனமான எருதும் இருந்தது. சிவபெருமான் தவம் செய்ய வந்துள்ளதை அறிந்த ஹிமவான், பூஜைப்பொருட்களுடன் வந்து வழிபட்டான். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்ய மகள் பார்வதியை பணித்தான். பார்வதி போன்ற அழகுள்ள பெண்களை அருகில் வைத்துக்கொண்டு தவம் செய்வது சஞ்சலத்திற்கு வழிவகுக்குமே என்றாலும் சிவபெருமான் அவளை பணிவிடை செய்ய அனுமதித்தார். தன் மனதை அவளால் குலைக்க இயலாது என்பதை அவர் அறிவார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் பூஜைக்கு வேண்டிய மலர்களை கொய்வது, அவர் அமரும் இடத்தை சுத்தம் செய்து, பாத்திரங்களில் தீர்த்தம், தர்ப்பை, சமித்து சேகரிப்பதை என சிவபெருமானுக்கு பணிவிடை செய்து வந்தாள். அந்த சமயம்,
|
|
|
|