Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அரக்கியும் அழகியானாள்!
 
பக்தி கதைகள்
அரக்கியும் அழகியானாள்!


பஞ்சவடிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஓராண்டு இங்கேயே தங்கிவிட்டு, பதினான்காவது ஆண்டு பூர்த்தியாகும் தருணத்தில் அயோத்திக்குப் புறப்பட்டுவிடலாம்.
ஆனால், சோதனை எப்படி, எந்த உருவில் வரும் என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது என்பதற்கு, சூர்ப்பணகையின் வரவு ஓர் உதாரணம்.
தன் அரக்கத்தனத்துக்கு வன்முறை வடிகால் தேடி பஞ்சவடிக்கு வந்த அவள், எதிர்பாராமல் ராமனைப் பார்த்ததும் மயங்கினாள். தன் குடும்பம், சுற்றம், நட்பு எல்லாமே அரக்கமயமாக இருந்தாலும், ராமன் தோற்றம் அவளுக்கு மனசுக்குள் புது உணர்வைக் கொடுத்தது. வறியவர்களையும், வற்றிய உடல் கொண்ட முனிவர்களையும் மட்டுமே வதைத்து இன்புற்றிருந்த அவளுக்கு ராம தரிசனம் மென்மையான உணர்வுகளை மொட்டவிழ்த்தது. எளியோரை அழவிட்டு வேடிக்கை பார்க்கும் குரூர சந்தோஷம் இப்போது காணாமல் போய்விட்டது. இதுவும் ராம மகிமைதானோ!
வாய்க்கு வெளியே நீண்ட கோரைப் பற்கள், சடை, சடையாகத் தொங்கும் தலைமுடி, அகன்று சிவந்த விழிகள், மேல் தூக்கிய விடைத்த நாசி, பிரமாண்டமான கருத்த உடலிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் தூண் போன்ற கைகள், கால்கள் என்று அவலட்சண சொரூபியாகத் திகழ்ந்த தன்னை அவளே ஒருமுறை அருவெறுப்புடன் பார்த்துக் கொண்டாள்.
ராமனுடைய பேரெழிலான மானுட உருவைக் கண்ட அவள், அவனும் தன்னை மோகிக்க வேண்டுமென்றால், தான் பேரழகியாக மாறவேண்டும் என்று திட்டமிட்டாள். தந்திரங்களில் வல்லவளான அவள், அப்படியே உருமாறினாள்.
பர்ணசாலைக்குள் சீதை இருந்ததால் அவளை சூர்ப்பணகை பார்க்கவில்லை. வெளியே தன் தம்பியுடன் உரையாடிக் கொண்டிருந்தான் ராமன். தன் வேட்கையை உடனே தெரிவித்துவிடும் வேகத்தில் அவள் ராமனை நெருங்கினாள்.
அந்த வனச் சூழலில் வனப்பு மிகுந்த ஒரு இளம் பெண்ணைக் கண்டதும் சந்தேகமாக வியந்தான் ராமன். அவளுடைய பார்வை தன்னை மோக முள்ளாகக் குத்தியதை உணர்ந்தபோதுதான், அவனுக்கு விபரீதம் புரிந்தது. அதனால், அவளைத் தவிர்க்க நினைத்த அவன், ‘‘யாரம்மா நீ, எங்கிருந்து வருகிறாய்?‘‘ என்று சம்பிரதாயமாக விசாரித்தான்.
தோற்றம் என்னவோ மென்மையாக, யௌவனமாக இருந்தாலும், தன் குலப் பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அகங்காரத்தை மட்டும் சூர்ப்பணகையால் விட முடியவில்லை. ‘‘நான், இலங்கை வேந்தன் ராவணனுடைய சகோதரி. கும்பகர்ணன், விபீஷணன் என்று மேலும் இரு அண்ணன்மார்கள் உண்டு. அண்ணன் முறையிலான கரன், தூஷணன் இருவருக்கும் நான் செல்லத் தங்கை. துரதிருஷ்டவசமாக எங்கள் குலத்தில் பிறந்தும் விபீஷணன் மட்டும் தர்மம், நியாயம் என்று விதிவிலக்காகத் திகழ்கிறார். அவர்கள் இருக்கட்டும், உங்கள் வடிவழகில் என்னை நான் இழந்துவிட்டேன். என்னை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள், ‘‘ என்று தன் குல விவரம் சொல்லி மன்றாடினாள்.
அதைக் கேட்ட ராமன் சிந்தனை வயப்பட்டான். அசுரர் குலத்தில் பிறந்த ஒரு பெண் எப்படி இத்தகைய பேரழகியாகத் திகழ முடியும்? ஆக, இது அரக்க தந்திரம்தான். எதற்காகவோ இவள் வலை விரிக்கிறாள்…
ஆனாலும் அவளை சமாதானப்படுத்தும் நோக்கில், ‘‘உனக்கு ஓர் உண்மை தெரியாததால்தான் நீ இவ்வாறு பேசுகிறாய் அம்மா. ஆமாம், நான் திருமணமானவன். வேறு யாராவது பிரம்மசாரி இளைஞனைத் தேர்ந்தெடுத்து மணந்துகொள்..‘‘ என்றான்.
ஆனால் அவளோ விடாப்பிடியாக, ‘‘என் சௌந்தர்யத்துக்கு உன்னைவிட வேறு அழகன் எனக்குக் கிடைப்பானா என்ன? உன்னைப் பார்த்த கண்கள் வேறு ஆடவரைப் பார்க்குமோ?‘‘ என்று பிதற்ற ஆரம்பித்தாள்.
அப்போது சீதை பர்ணசாலையை விட்டு வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் திடுக்கிடலாய் பிரமித்தாள் சூர்ப்பணகை. ‘இப்படியும் ஓர் அழகியா!‘ என்ற வியப்பு அவள் உள்ளத்தில் பொறாமைத் தீயை வளர்த்தது. கூடவே ஒரு சந்தேகமும் எழுந்தது. இவளும் அரக்கியாக இருப்பாளோ? தன்னை மாதிரி அழகியாக உருமாறியிருக்கிறாளோ? அப்படித்தான் இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் இவளைப் போன்ற அழகி இருப்பதற்கு வாய்ப்பே இல்லையே…
சீதையைப் பார்த்த ராமன், ‘‘வா சீதே,‘‘ என்று அவளை அழைத்தான். பிறகு சூர்ப்பணகையிடம் திரும்பி, ‘‘இவள்தான் என் மனைவி. இவளிருக்க நான் இன்னொரு பெண்ணை மனதாலும் நினையேன்,‘‘ என்றான்.
அவ்வளவுதான் சூர்ப்பணகையின் அரக்க மனம் விழித்துக் கொண்டது. ‘‘இவளும் என்னைப் போல உருமாறி வந்திருக்கும் அரக்கிதான். இவளைவிட நான் பேரழகி, இவளை துரத்திவிடு, என்னை ஏற்றுக் கொள்,‘‘ என்று தன் உரத்தக் குரலில் உக்கிரத்தைக் காட்ட ஆரம்பித்தாள்.
அவளைக் கண்டு பயந்தாலும், அவளுடைய அழகைக் கண்டு முகபாவனையால் பாராட்டவும் செய்தாள் சீதை. ஆனால் சீதைதான் தனக்குத் தடை என்பதை உணர்ந்த சூர்ப்பணகை அவளைப் பற்றி இழுத்து வதைத்துவிடும் நோக்கத்தில் நெருங்கினாள்.
சீதைமீது அரக்கி பொறாமை கொண்டிருப்பதை அறிந்த ராமன், அப்போதைய சூழலில் அவளைத் தனித்து விடுவதுதான் சிறந்தது என்று கருதி, மருட்சியால் தன்னைப் பற்றிக் கொண்ட சீதையை அணைத்தபடி பர்ணசாலைக்குள் சென்றான்.
சூர்ப்பணகையின் கோபமும், பொறாமையும் அதிகரித்தன. வேறு வழியின்றி அங்கிருந்து அகன்ற அவள் இரவு முழுவதும் மிகக் குரூரமாக சிந்தனை வயப்பட்டாள். அதாவது சீதையை ராமனிடமிருந்து பிரித்து விட்டால், அவன் தன்னை அடைய தடை இருக்காது என்று நம்பினாள்.
மறுநாள் மீண்டும் பர்ணசாலைக்கு வந்த அவள், ராமன் கோதாவரி ஆற்றங்கரையில் தன் காலை நியமங்களை அனுஷ்டிப்பதையும், சீதை பக்கத்திலுள்ள சோலையில் மலர் கொய்வதையும் கண்டாள். இதுதான் சரியான தருணம். சீதையைக் கடத்தி எங்காவது ஒளித்து வைத்து விடலாம். பிறகு எளிதாக ராமனை மடக்கி விடலாம்…
ஆனால் அதே சோலையில் லட்சுமணன் சீதைக்குக் காவலாகச் சற்று தொலைவில், மரத்தடியில் நின்றிருப்பதை சூர்ப்பணகை கவனிக்கவில்லை. ஆகவே பாய்ந்து சென்று சீதையைப் பற்றினாள். அதை கவனித்துவிட்ட லட்சுமணன் ஓடோடி வந்தான். ஏற்கெனவே அண்ணனிடம் வம்பு செய்தவள் என்ற கோபம் சூர்ப்பணகை மீது அவனுக்கு இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் வந்து அண்ணியாருக்குத் தொல்லை தருகிறாள் என்பதைப் பார்த்துப் பெரிதும் வெகுண்டான். வெகு வேகமாகத் தன் வாளை உருவி அவளுடைய மூக்கு, காதுகளைக் கொய்தான்.
வலி தாங்காமல் துடித்த சூர்ப்பணகை பெரிதாக ஓலமிட்டாள். அந்தக் கூக்குரலைக் கேட்ட ராமன் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்தான். குருதி சொட்டச் சொட்ட சூர்ப்பணகையம், வாளுடன் தம்பியும் நின்றிருப்பதைப் பார்த்தான்.
உடனே அவனிடம் நியாயம் கேட்டாள் சூர்ப்பணகை. ‘‘உன்னை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன். அதற்குத் தடையாக இருக்கும் இந்தப் பெண்ணைக் கடத்திச் செல்ல நினைத்தேன். உடனே இவன் என்னைத் தாக்கி சேதப்படுத்திவிட்டான்,‘‘ என்று லட்சுமணனைச் சுட்டிக்காட்டி புகார் செய்தாள்.
‘‘உன்னுடைய விருப்பமே தவறு. அதோடு எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று தெரிந்தும் நீ அத்து மீறியிருக்கிறாய். உன்னை என் தம்பி லட்சுமணன் தண்டித்தது சரிதான். இனிமேலும் இங்கே நிற்காதே, ஓடிப்போய்விடு,‘‘ என்று சற்றே கோபத்துடன் சொன்னான்.
அப்போதே கறுவிக் கொண்டாள் சூர்ப்பணகை. ‘‘என்னை நீ மணக்க விரும்பாததற்குக் காரணம், இதோ பெண்ணாய்த் தோன்றும் இந்த அரக்கிதான். இவளை உன்னிடமிருந்து பிரித்து விட்டேனானால், உனக்கு என்னைத் தவிர வேறு பெண் கிடைக்க மாட்டாள். ஆகவே என் அண்ணன்மார்களிடம் சொல்லி, இவளைக் கடத்திப் போகச் செய்து விடுகிறேன். அப்போது நீ என்ன செய்வாய் என்று பார்க்கிறேன்…‘‘ என்று சூளுரைத்தாள்.
கடுங்கோபம் கொண்டு அவளை மீண்டும் தாக்கத் துணிந்த லட்சுமணனை, ராமன் சமாதானப்படுத்தினான். முற்றிலும் ஏமாற்றமடைந்த சூர்ப்பணகை விருட்டென்று அந்த இடத்தை விட்டகன்றாள்.
சீதையின் உடல் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னும் ஒரே வருடம்தான், அயோத்தி சென்று உற்றார், உறவினருடன் களிப்புடன் வாழலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இப்படியெல்லாமா இடர்ப்பாடுகள் வரும் என்று சற்றே மனமொடிந்து போனாள். ஆனால் கூடவே ராமன் இருக்கும் தைரியத்தில் மீண்டும் மனதில் உற்சாகம் கொண்டாள்.
லட்சுமணன், வரப்போகும் பகையை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தான். அண்ணனுக்கு எந்த கட்டத்திலும், எந்த சூழ்நிலையிலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.  
(தொடரும்)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar