|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » கண்ணனாகிய நான்... |
|
பக்தி கதைகள்
|
|
மகாபாரதப் போர் முடிவடைந்த பிறகு தேரிலிருந்து அர்ஜுனனை முதலில் இறங்கச் சொன்னேன். பின்னர் தேரில் இருந்து நான் இறங்கினேன். அந்தத் தேரில் கட்டியிருந்த அனுமனின் உருவம் தாங்கிய கொடியும் பறந்து சென்றது. அடுத்த நொடியே அந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியுடன் நின்ற அர்ஜுனனுக்கு விளக்கினேன். துரோணரும் கர்ணனும் செலுத்திய பல தெய்விக அஸ்திரங்களால் அந்த தேர் முழுக்க சிதிலமடையும் நிலைக்கு வந்தது என்பதையும் என் காரணமாகவும் அனுமனின் உருவம் காரணமாகவும் அந்த தேர் நிலைத்து நின்றது என்பதையும் விளக்கினேன். இதன் காரணமாகத்தான் அர்ஜுனனை முதலில் தேரிலிருந்து இறங்கச் சொன்னேன். மகாபாரதக் கதையை அறியும்போது உங்களில் சிலருக்கு ஒரு நெருடல் இருக்கக்கூடும். சிகண்டியை முன் நிறுத்தி பீஷ்மரின் வீழ்ச்சிக்குக் கண்ணன் காரணமானார். அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற பொய்யை யுதிஷ்டிரனை கூறச் செய்து துரோணரை செயலிழக்கச் செய்து திருஷ்டத்யும்னன் அவரைக் கொல்வதற்கும் கண்ணன் வழிவகுத்தார். கர்ணன் சேறில் சிக்கிய தனது தேரை மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருந்தபோது அவனிடம் சென்று அவனது தர்மங்களை தானமாகப் பெற்று அவனை பலவீனம் ஆக்கினார். துரியோதனனின் பலவீனமான பகுதி தொடை என்பதை பீமனுக்கு சுட்டிக்காட்டி துரியோதனனை வீழ்த்தச் செய்தார். ஆக இவ்வளவு தந்திரங்களையும் சதிச் செயல்களையும் கண்ணன் கடைப்பிடித்தது சரியா? ஆக நான் தந்திரங்களினால் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்தது சரியா என்ற கேள்வி எழுகிறது இல்லையா? முதலில் இதற்கு பதில் கூறுங்கள். துரியோதனனும் அர்ஜுனனும்என் உதவியை நாடிய போது என்னுடைய கடல் போன்ற சேனையை ஒருவருக்கும், என்னை மற்றொருவருக்கும் அளிப்பதாக இருக்கிறேன். இந்தப் போரில் நான் ஆயுதம் தாங்கிப் போரிடப் போவதில்லை. யாருக்கு என் சைனியம் வேண்டும்? யாருக்கு நான் வேண்டும்?’ என்று கேட்ட போது நீதான் கண்ணா எனக்கு வேண்டும் என்று தயங்காமல் கூறினான் அர்ஜுனன். உன் சேனைதான் வேண்டும் என்று துரியோதனன் கூறினான். ஆக நான் பாண்டவர் தரப்பு என்றாகி விட்டது. அப்போது என் மதியூகமும் அவர்களின் தரப்பில் செயல்பட்டுதானே ஆக வேண்டும்? குருக்ஷேத்ர யுத்தத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கூட அந்தப் போரைத் தவிர்க்க முயற்சித்தேன். போரைத் தவிர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் போர்தான் தங்கள் இலக்கு என்பதில் துரியோதனன் தெளிவாக இருந்தான். ஆக என்னைத் தவிர்த்து என் படையைத் தேர்வு செய்தான் துரியோதனன். போரைத் தவிர்க்குமாறு நான் கூறிய ஆலோசனையையும் நிராகரித்தான். எனவே கவுரவர்கள் தங்கள் அழிவைத் தாங்களாகவே தேடிக் கொண்டார்கள் என்பது தானே உண்மை? கவுரவர் தரப்பு சதி திட்டங்களும் தந்திரங்களும் மகாபாரதப் போருக்கு வெகுகாலம் முன்பாகவே துவங்கிவிட்டன. அதன் பலனாக எனது தந்திரங்களை அவர்கள் எதிர் கொண்டார்கள் என்றும் கூறலாம். கவுரவர்களின் சதித் திட்டங்கள் ஒன்றா, இரண்டா? சிறுவன் பீமனுக்கு உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவனைக் கொல்ல முயன்ற போதே கவுரவர் தரப்பு சதி திட்டம் தொடங்கிவிட்டது. அரக்கு மாளிகை ஒன்றில் பாண்டவர்களை தங்க வைத்து அதற்குத் தீ வைக்குமாறு ஏற்பாடு செய்தவன் துரியோதனன். பகடை விளையாட்டில் சகுனி வென்றதால்தான் பாண்டவர்கள் அளவற்ற துன்பத்தை சந்திக்க நேர்ந்தது. அந்தப் போட்டியில் சகுனி பயன்படுத்தியது மாயை பொருந்திய தாயக்கட்டை. சபையோர் முன்னிலையில் திரவுபதியின் ஆடையைக் களைய முற்பட்டு அருவருப்பாக நடந்து கொண்டான் துச்சாதனன். அவளைத் தன் மடியில் அமருமாறு கட்டளையிட்டான் துரியோதனன். திரவுபதியை ‘ஐவரை மணந்த வேசிதானே? அவள் ஆடைகளை தாராளமாக கலையலாம்’ எனக் கொக்கரித்தான் கர்ணன். தங்களுக்கு சாதகமாக யுத்தத்தின் முடிவு இருக்க வேண்டும் என்பதற்காக சகாதேவனிடம் யுத்தம் துவங்குவதற்கான நாளை குறித்து தருமாறு கேட்டுக் கொண்டான் துரியோதனன். ‘நீ சரியாக நாளை குறித்து தந்தால் எங்கள் தரப்பு வெற்றியடைந்து விடும். போருக்குப் பிறகு நான் உன்னையோ நகுலனையோ மன்னன் ஆகிவிடுகிறேன்’ என்று வஞ்சக வலை விரித்தான். ஆனால் சகாதேவன் அந்த வலையில் சிக்கிக் கொள்ளவில்லை என்பது வேறு விஷயம். அபிமன்யு என்ற பாலகனை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து யுத்த தர்மத்திற்கு எதிராக ஒரே சமயத்தில் பல வீரர்களை கொண்டு அவனைக் கொன்றான் துரியோதனன். இவர்களை அழித்து உலகில் நன்மை பிறக்க, தர்மம் தழைக்க நான் சில உபாயங்களைக் கடைப்பிடிக்க வேண்டி இருந்தது. மேலும் என் செயல்களுக்கான விளக்கம் அர்ஜுனனுக்கு நான் உபதேசித்த பகவத்கீதையிலும் அடங்கியிருக்கிறது. வியாசன் தான் எழுதிய மகாபாரதத்தின் முதலாம் பர்வத்தில், "இதில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். இதில் காணப்படாதவை வேறெங்கும் காணப்படாது" என்கிறான். மகாபாரத மாந்தர்கள் அவரவரும் தங்களைப் பற்றி இத்தொடரில் கூறிய போது அவற்றைக் கதையாக மட்டுமே ரசித்தீர்களா? அல்லது அந்தப் பாத்திரங்களின் உணர்வுகளும் அணுகுமுறையும் நமக்கு அளிக்கும் படிப்பினைகளையும் உணர்ந்தீர்களா? புரிந்து கொள்ளுங்கள். பேரின்பம் கிட்டும். |
|
|
|
|