|
விவசாயி ராமசாமி தன் தோட்டத்தில் விளைந்த முருங்கை காய்களுடன் மளிகை கடை ஒன்றில் விற்று அதற்கு ஈடாக பலசரக்கு வாங்குவார். பல ஆண்டாக பழகி வருவதால் கடைக்காரரின் நம்பிக்கைக்கு உரியவரானார். ராமசாமி சொல்லும் எடையை அப்படியே ஏற்பார் கடைக்காரர். ஒருமுறை பத்து கிலோ முருங்கைக்காய் கொடுத்து விட்டு அதற்கான பொருட்களை வாங்கிச் சென்றார். சற்று நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காயை வாங்க சமையல்காரர் ஒருவர் வந்தார். கடைக்காரரும் காய்களை தராசில் எடை பார்த்தார். ஒன்பது கிலோ தான் இருந்தது. ‘‘இத்தனை ஆண்டாக எடை குறைவான முருங்கைக்காயை கொடுத்து ஏமாற்றி விட்டாரே’’ என கோபம் கொண்டார். சில நாட்களுக்கு பிறகு கடைக்கு முருங்கைக்காயுடன் வந்தார் ராமசாமி. ‘எத்தனை கிலோ’ என கேட்க, ‘பத்து கிலோ’ என்றார் ராமசாமி. எடை பார்த்த போது ஒன்பது கிலோ தான் இருந்தது. ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார் கடைக்காரர். இத்தனை நாளா இப்படித்தான் ஏமாத்தினீங்களா... எனக் கத்தினார். ‘என்ன மன்னிச்சிடுங்க. ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடை பார்ப்பேன்’ என்றார். வாயடைத்துப் போனார் கடைக்காரர். இத்தனை நாளும் எடைக்குறைவாக பருப்பை தான் கொடுத்ததே காரணம் என்பதை உணர்ந்தார். எதை நாம் தருகிறோமோ அதுவே நம்மை வந்தடையும்.
|
|
|
|