|
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பைத்தான் என்னும் கிராமத்தில் வாழ்ந்த சூரியநாராயணன்,ருக்மணி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஏகநாதர். சிறுவன் வடிவில் வந்து பகவான் கிருஷ்ணரே இவருக்கு தொண்டு செய்தார் என்றால் இவரின் பக்தி எவ்வளவு உயர்ந்தது என்பதை அறியலாம். சிறுவயது முதலே கல்வி, பக்தியில் சிறந்து விளங்கினார். கிரிஜா எனும் பெண்ணை மணந்த இவருக்கு மகனும்,இரு மகள்களும் உண்டு. அனைவருக்கும் நன்மை செய்தார். பல அற்புதங்களை நிகழ்த்தினார். கோபம் என்னும் சொல்லை அறியாத ஞானி இவர். பணக்காரர் ஒருவர் இவர் மீதுள்ள பொறாமையால் எப்படியாவது கோபப்படுத்த வேண்டும் என திட்டமிட்டார். கோதாவரி நதியில் நீராடி விட்டு இவர் வரும்போது முரடன் ஒருவன் மூலம் வெற்றிலை எச்சிலை துப்பச் செய்தார். துப்பியது யார் என்று கூட கவனிக்காமல் மீண்டும் நீராடச்சென்றார். மறுபடியும், மறுபடியும் எச்சிலை துப்பினான் முரடன். ஒரு கட்டத்தில் தவறை உணர்ந்த அவன் ஏகநாதரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். ‘‘ எதற்காகப்பா உன்னை மன்னிக்க வேண்டும்? தினந்தோறும் பாண்டுரங்கனின் நாமத்தைச் சொல்லி ஒருமுறை தான் கோதாவரியில் நீராடுவேன். ஆனால் இன்று உன் செயலால் நுாற்றி எட்டு முறை நீராடினேன் இதற்கு உதவியவன் நீ தானே’’ என பொறுமையுடன் கூறினார். முரடன் கண்ணீர் சிந்தியபடி தங்களை அவமானப்படுத்தி இருக்க மாட்டேன். தங்களுடைய கோபத்தை துாண்டினால் எனக்கு பணம் தருவதாக ஆசை காட்டினார் பணக்காரர். அதனால் தான் தீங்கு செய்தேன் என்றான். ‘‘இதை முதலிலேயே சொல்லி இருக்கக் கூடாதா! நீ ஒரு தடவை என் மீது துப்பியவுடனே நான் கோபப்பட்டிருப்பேனே. உனக்கும் பணம் கிடைத்திருக்குமே’’ என வருந்தினார் ஏகநாதர்.
|
|
|
|