|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » நீயே பரிகாரம் சொல் |
|
பக்தி கதைகள்
|
|
“என் பேரு ராஜன். சாப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்கறேன். மாசம் ஆறு லட்சம் சம்பளம். சென்னையில பிளாட் வாங்கிட்டேன். வசதியா வாழ்றேன்.” ராஜன் பார்க்கத் தெளிவாக இருந்தான். கொஞ்சம் கருப்புதான். பெண்களை வசீகரிக்கும் அழகு என சொல்ல முடியாது. அதற்காக அழகில்லாதவன் என்று ஒதுக்கவும் முடியாது. “அப்பா இறந்துட்டாங்க. அம்மா கிராமத்துல தனியா இருக்காங்க. எனக்குக் கல்யாணம் செஞ்சிக்கணும்னு ஆசை. ஆனா பொண்ணே கெடைக்கமாட்டேங்குது, சார். பணம், அந்தஸ்து எதுவும் வேண்டாம். நல்ல அழகா, ஸ்டைலா இருக்கற பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழணும்னு ஆசைப்படறேன். இதுவரைக்கும் ஐம்பது பொண்ணுங்கள பாத்துட்டேன், சார். நிறையப் பொண்ணுங்களப் பிடிச்சிருந்தது. ஆனா அவங்க யாருக்கும் என்னப் பிடிக்கல. எனக்குக் கல்யாணம் ஆகாமயே போயிருமா சார்?” மவுனம் சாதித்தேன். “ஆகஸ்ட் வந்தா 31 வயசு முடிஞ்சிரும். 32க்குள்ளயாவது கல்யாணம் ஆகுமா? என்ன பரிகாரம்...’’ அறைக்கதவு சட்டென திறந்தது. முகத்தில் பதட்டத்துடன் உதவியாளர். “போலீஸ் வந்திருக்கு...” வெளியே ஓடினேன். கம்பீரமாக நின்றிருந்த அந்த பெண் போலீஸ் அதிகாரியைப் பார்த்ததும் யாரென தெரிந்து விட்டது, அவளது பூட்ஸ் காலைத் தொட்டு வணங்கினேன். “ராஜனுக்கு நீயே பரிகாரம் சொல்” “தாயே…’’ “நீ என்ன பரிகாரம் சொன்னாலும் அது பலிக்கும். அவனது துன்பங்கள் தீரும்” அன்னையை மீண்டும் வணங்கி விட்டு என் அறைக்கு ஓடினேன். “என்ன சார் பரிகாரம் செய்யலாம்?” “உங்களுக்கு 32 வயசுக்குள்ள கல்யாணம் ஆகணும். அதனால 32 ஏழைப்பெண் குழந்தைங்களுடைய படிப்பு செலவ ஏத்துக்கங்க. 32 குடும்பங்களுக்கு விளக்கேத்தி வைக்கப்போறீங்க. பல தலைமுறைகள் உங்கள வாழ்த்தும். அதனால உங்க வாழ்க்கை பிரகாசமா இருக்கும்” “எப்படி 32 பேரக் கண்டுபிடிக்கறது...’’ “அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்” எனக்குத் தெரிந்த மாநகராட்சி பெண்கள் பள்ளிகளில் விசாரித்து 32 ஏழைப்பெண்களைத் தேர்ந்தெடுத்தேன். கல்விச் செலவுகளை ஏற்றுக்கொண்டான் ராஜன். அந்தப் பெண்களின் பெற்றோர் கண்ணீர் மல்க ராஜனுக்கு நன்றி சொன்ன காட்சி என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒரு மாதம் கழித்து ராஜனின் அழைப்பை ஏற்று அவனை சென்னையில் ஒரு உணவகத்தில் சந்தித்தேன். “உங்க பரிகாரத்துக்கு கைமேல பலன் கிடைச்சிருச்சி. ஒரு அழகான பொண்ணு எனக்கு மனைவியாகப்போறா. அவ இப்போ இங்க வருவா, பாருங்களேன்” மானசா நல்ல சிகப்பு. சினிமா நடிகை போல பளபளப்பாக இருந்தாள். அறிமுகங்கள் முடிந்தவுடன் மகிழ்ச்சியுடன் சொன்னான் ராஜன். “அடுத்த மாசம் நிச்சயதார்த்தம். தையில கல்யாணம் சார்.” சில நிமிடம் பேசிவிட்டு விடைபெற்றேன். பத்து நாள் கழித்து ராஜன் பதட்டத்துடன் அழைத்தான். “தயவு செஞ்சி இனி பச்சைப்புடவைக்காரி அன்பே வடிவானவள்ன்னு பொய் எழுதிதாதீங்க. அவ கல்மனசுக்காரி. கொடுமைக்காரி” “என்னாச்சு’’ ஒரு நாள் ராஜன் அவனது அலுவலகத்தில் வேகமாகப் படியிறங்கும்போது தவறி விழுந்துவிட்டான். இடுப்பு எலும்பும் முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சை செய்தார்கள். இயல்பாக நடக்க ஓராண்டு கூட ஆகலாம், அப்போதுகூட நூறு சதவிகிதம் இயல்பாக நடக்க முடியாது என மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். மானசாவோடு நிச்சயித்த கல்யாணம் நின்றுவிட்டது. “நான் தற்கொலை செஞ்சிக்கப்போறேன்.” இணைப்பு துண்டிக்கப்பட்டது. எப்படியாவது உடனே சென்னை செல்லவேண்டியதுதான் என தீர்மானித்து பெட்டி படுக்கையுடன் வீட்டைவிட்டு வெளியேறியபோது வாசலில் நின்றிருந்த ஒரு பிச்சைக்காரி வழிமறித்தாள். “இப்போது போகாதே. பத்து நாள் கழித்துப் போ.” உலகத்திற்கே பிச்சை போடுபவள் பிச்சைக்காரியாக வந்திருந்தாள். “நிச்சயமாக நடக்காது என தெரிந்துதானே என்னைப் பரிகாரம் சொல்லச் சொன்னீர்கள்?” “உன்னால்தான் ராஜன் பிழைத்தான்” “தாயே” “அந்த மானசா ஒரு தீயவனைக் காதலிக்கிறாள். அவர்கள் வீட்டைவிட்டு ஓடத் தீர்மானித்துவிட்டனர். வாழ்வதற்குப் பணம் வேண்டுமே. அதனால் ஒரு பணக்காரனைத் திருமணம் செய்துகொண்டு அவனைக் கொலை செய்துவிட்டு அவன் பணத்தில் காதலனுடன் வாழலாம் என்பது அவள் திட்டம். 32 வயதில் கொலையுண்டு சாகவேண்டும் என்பது ராஜனின் விதி. அவன் மனதில் இருந்த அன்பு – நீ சொன்னதுபோல் 32 ஏழைப் பெண்களின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டது - அவனை வாழ வைத்துவிட்டது. சாகவேண்டும் என்ற விதியை எலும்பு முறிவாக குறைத்துவிட்டது.” “ராஜன் விபரீதமாக ஏதாவது… “ “செய்து கொள்ள முயற்சிப்பான். ஆனால் அது நன்மையில் முடியும். மானசாவைப் பற்றி நான் சொன்னதை அவனிடம் சொல்லாதே“ பத்து நாள் கழித்து உள்ளபடியே சென்னை செல்ல வேண்டியிருந்தது. ராஜன் இன்னும் மருத்துவமனையில்தான் இருந்தான். என்னைப் பார்த்ததும் பெரிதாகக் கத்தப் போகிறான் என்ற பயத்துடன் போனேன்.. “பச்சைப்புடவைக்காரி பெத்த தாய்க்கும்மேல சார். அவ செய்யறது எல்லாம் நல்லதுக்குத்தான். நான் கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடஞ்சது, அதனால என் கல்யாணம் நின்னுபோனதும் நல்லதுக்குத்தான். இதனால மனசொடிஞ்சி தற்கொலை பண்ண முடிவு செஞ்சதும் நல்லதுக்குத்தான்” என்னாயிற்று ராஜனுக்கு? அதிர்ச்சியின் காரணமாக மூளை குழம்பிவிட்டதா? என் கேள்விக்கு விடை ஒரு அழகான நர்ஸ் வடிவத்தில் கிடைத்தது. வந்தவள் ராஜனின் நெற்றியில் பரிவுடன் கைவைத்துப் பார்த்தாள். “பச்சைப்புடவைக்காரியோட கருணையில்லேன்னா இந்தத் தேவதை பாரதி எனக்குக் கெடைச்சிருப்பாளா சார்? கால் உடைஞ்சி மனசொடிஞ்சி தற்கொலைக்கு முயற்சி செஞ்சி சாகாம செத்துக்கிட்டிருந்த எனக்கு பாரதிதான் ஒரு தாயா, தோழியா, குருவா கூடவே இருந்து எல்லா விஷயங்களையும் புரியவச்சா சார். வாழ வழி காட்டினா. வாழ்க்கைத் துணையாகவும் வரேன்னு சொன்னா. நீங்க சொன்ன பரிகாரம் சூப்பர் சார். எங்க கல்யாணத்த எளிமையா நடத்தி அதுல மிச்சமாகற பணத்துல இன்னும் நிறையப் பெண் குழந்தைங்களப் படிக்க வைக்கப் போறோம் சார்.” சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தேன். “நீ சொன்ன பரிகாரம் பிரமாதமாக வேலை செய்துவிட்டதே!” நர்ஸ் வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரியின் காலில் விழுந்தேன். “அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்னப்பா வேண்டும்” கண்கள் கண்ணீரைப் பெருக்க விம்மல்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு தட்டுத் தடுமாறிப் பேச ஆரம்பித்தேன். “அதுதான் அற்புதமான ஞானத்தைக் கொடுத்து விட்டீர்களே, தாயே! வேறு என்ன வேண்டும்?” “அப்படி என்ன ஞானத்தைக் கொடுத்துவிட்டேன்?” “நாங்கள் துன்பம் அனுபவிக்கும்போது உங்களைத் திட்டுகிறோம். ஆனால் அதை விடப் பெரிய துன்பத்திலிருந்து எங்களைக் காப்பாற்றியிருக்கிறீர்கள் என புரியாமல் உங்களை ராட்சசி என்கிறோம். ராஜனுக்கு வந்தது துன்பம்தான் – எலும்பு முறிவு, திருமணம் நின்றுபோனது. ஆனால் அவனை இழிவான மரணத்திலிருந்து காப்பாற்றி விட்டீர்களே! கூடவே நல்ல வாழ்க்கைத் துணையையும் கொடுத்துவிட்டீர்களே! தாய்க்கும் மேலாக எங்களை நேசிக்கும் உங்கள் அன்பைப் புரிந்துகொள்வதுதான் உச்சக்கட்ட ஞானம். அதைக் கொடுத்து விட்டீர்களே...தாயே!” “சரி நான் வருகிறேன்” “ஒரே ஒரு வரம்...’’ “என்ன வரம்” “என்னால் நல்லது நடந்தால் அது எனக்கும் தெரியக் கூடாது. என் மூலம் நன்மை பெற்றவர்களுக்கும் தெரியக் கூடாது.” “ஏனப்பா?” “அகந்தையின் காரணமாக உங்கள் அன்பென்னும் சாம்ராஜ்ஜியத்தை இழக்க எனக்கு மனமில்லை, தாயே” கலகலவென சிரித்தபடி காற்றோடு கலந்தாள் கனகவல்லி.
|
|
|
|
|