|
தொழிலில் ஏற்பட்ட தவறுகளால் வியாபாரி ஒருவர் நஷ்டம் அடைந்தார். மனச்சோர்வுடன் பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்தார். செல்வந்தரான பெரியவர் ஒருவர் அவரிடம், ‘‘ தம்பி... ஏன் சோகமாக இருக்கிறாய்’’ எனக் கேட்டார். ‘‘தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டேன்’’ என்றார். ‘‘எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது?’’ எனக் கேட்டார் பெரியவர். ‘‘ஐந்து லட்சம்’’ என்றார் வியாபாரி. ‘‘அப்படியா...நான் யார் தெரியுமா’’ எனக் கேட்டு, இந்த ஊரிலேயே பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன் நான் என்று சொல்லி சிரித்தார். அப்படியா...என ஆச்சரியப்பட்டார் வியாபாரி. ‘‘சரி... பணம் கொடுத்தால் உன் பிரச்னை தீருமா?’’ எனக் கேட்டார் பெரியவர். ‘நிச்சயமாக’ என்றார். செக் புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டு, ‘‘ உனக்கு நஷ்டம் ஆனதை விட இரண்டு மடங்கு இதில் உள்ளது. பயன்படுத்திக் கொள். விருப்பம் போல திருப்பிக் கொடு’’ என்று சொல்லி புறப்பட்டார். வியாபாரியும் வீட்டுக்கு வந்ததும் செக்கை பத்திரப்படுத்தினார். அதை பயன்படுத்த விரும்பவில்லை. தன் பணியாட்களை அழைத்து, இனி தவறு நேராமல் பொறுப்புடன் செயல்படுங்கள் என வேண்டிக் கொண்டார். தானும் வியாபாரத்தை மட்டுமே சிந்தித்தார். ஆறு மாதம் கடந்தது. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு களையப்பட்டன. வியாபாரம் சூடுபிடித்தது. வரவு செலவு கணக்கு பார்த்த போது நல்ல லாபம் கிடைத்திருந்தது. பத்திரப்படுத்திய செக்கை எடுத்துக் கொண்டு பெரியவரைக் காண பூங்காவிற்கு புறப்பட்டார். அதிகாலை நேரமாக இருந்ததால் பனிமூட்டமாக இருந்தது. துாரத்தில் பெரியவர் தன் மனைவியின் கையைப் பிடித்தபடி வருவது தெரிந்தது. ஓரிரு நிமிடத்தில் அவரது மனைவி மட்டும் வந்தார். ‘‘ அம்மா... உங்களுடன் வந்த பெரியவரைக் காணோமே’’ எனக் கேட்டார் வியாபாரி. பதட்டமுடன், ‘‘ அவரால் எதுவும் தொந்தரவா... உங்களுக்கு?’’ எனக் கேட்டார் அந்தப் பெண். ‘‘இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?’’ எனக் கேட்டார். ‘‘மனநிலை சரியில்லாதவர் அவர். வருவோர் போவோரிடம் எல்லாம் பணம் கொடுப்பதாகச் சொல்லி கையெழுத்திட்ட செக்கை கொடுப்பார். இப்போதும் அப்படி கொடுக்க அங்கே அமர்ந்திருக்கிறார் பாருங்கள்’’ என்றார். வியாபாரிக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. வாயடைத்துப் போனார். பிரச்னையில் இருந்து காப்பாற்றி தைரியப்படுத்தியது எது என்று யோசித்தார். தன்னம்பிக்கையே என்பது புரிந்தது. ‘உன்னால் முடியும் தம்பி’ என காதில் யாரோ சொல்வது போலிருந்தது. தன்னம்பிக்கை இருந்தால் தடைக்கல்லும் படிக்கல்லாக மாறும்.
|
|
|
|