Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வேதனை தரும் சோதனைகள்
 
பக்தி கதைகள்
வேதனை தரும் சோதனைகள்

தன்னை நோக்கி ஓடோடி வரும் லட்சுமணனைப் பார்த்து திகைத்தான் ராமன். உடனே தனிமையில் இருக்கும் சீதையின் பாதுகாப்பு பற்றி கவலையும் கொண்டான். தன்னருகே வந்து கண்களில் நீர் துளிர்க்க, தலை குனிந்து நின்ற தம்பியைப் பார்த்ததும், மாரீசனின் தந்திரம் பலித்து விட்டதும் புரிந்தது.
விளக்கம் கேட்டோ, பதிலளித்தோ காலம் தாழ்த்த விரும்பாத சகோதரர்கள் பர்ணசாலையை நோக்கி ஓடினார்கள். அங்கே பர்ணசாலையையே காணோம்! இருவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பர்ணசாலையோடு சீதை கடத்தப்பட்டிருக்கிறாள்! பூமியில் சற்றுத் தொலைவு வரை ஒரு தேரின் சக்கரத் தடம் பதிந்திருக்கிறது. அதாவது, கடத்தியவன் தன் பராக்கிரமத்தை வெளிப்படுத்தியிருக்கிறான். பூமியையே அகழ்ந்து தன்னால் பர்ணசாலையைத் தூக்கிச் செல்ல முடியுமானால் தான் எத்தகைய பலவான் என்பதை உணர்த்தியிருக்கிறான். இந்தச் செயலை மிகவும் வலிமை வாய்ந்த ஓர் அரக்கனாலன்றி பிற யாராலும் நிகழ்த்தியிருக்க முடியாது.
தம்பியின் சந்தேகத்துக்கு உரிய மதிப்பளிக்காத குற்ற உணர்வால் பெரிதும் குமைந்து போனான் ராமன். தான் வஞ்சமகமாக ஏமாற்றப்பட்ட வேதனையும் பெரிதும் அலைக்கழித்தது. ஆனால் அந்த ஏமாற்றத்தின் நஷ்டம் இத்தனை மதிப்பு வாய்ந்ததாகவா இருக்கும்!
லட்சுமணனும் மிகவும் குழம்பிப் போயிருந்தான். நடந்த சம்பவங்களுக்குத் தான் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்று சமாதானம் சொல்லவோ, அதனாலேயே இனி மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்ளவோ அவன் விரும்பவில்லை. இனிமேல்தான் அண்ணனுக்குத் தான் பெருந்துணையாக இருக்க வேண்டும்….
‘‘வா, லட்சுமணா, இந்தத் தேர்த் தடத்தைப் பின்பற்றி. இது சென்றடைந்திருக்கும் இடத்தை அடைவோம்..‘‘ என்று கூறிய ராமன் பெருங்கவலையுடன் வேகமாக முன்னேறினான். லட்சுமணனும் பதைபதைப்புடன் பின் தொடர்ந்தான்.
ஆனால் சற்றுத் தொலைவில் அந்தத் தடம் மறைந்து விட்டது. அந்த இடத்திலிருந்து வானோக்கித் தேர் ஏகியதை இறுதித் தடம் சறுக்கலாகத் தெரிவித்தது. எல்லையின்றி பரந்து விரிந்திருந்த விண்வெளியை குழப்பக் கவலையுடனும், ஏக்கத்துடனும் சகோதரர்கள் பார்த்தனர்.
சீதையைக் கண்டு பிடிக்க முடியுமா, கடத்தியவனிடமிருந்து அவளை மீட்க முடியுமா, அதற்கு எத்தனை காலம் ஆகும், பதின்மூன்று ஆண்டுகள் எளிதாகக் கடந்துவிட்ட வேகத்தில் மீதமிருக்கும் ஓராண்டும் கடந்து விடுமா, அதற்குள் சீதையை மீட்டு அயோத்தி திரும்பிவிட இயலுமா, அடடா, இப்போது சீதை மட்டுமல்லாமல், பரதன் உயிரும் என்னை நம்பித்தானே இருக்கிறது…. ராமன் வேதனை வலைப்பின்னலில் சிக்கித் தவித்தான்.
வேதனைக் கார்மேகம் மனதில் திரள, கண்கள் மழையாய் நீரைப் பொழிய, சகோதரர்கள் சீதையைத் தேடி நடந்தார்கள்.
அதோ, அங்கே யார்… ஜடாயு அல்லவா! குற்றுயிரும், குலையுயிருமாக வீழ்ந்து கிடக்கிறாரே, நிமிர்ந்து அடங்கும் மார்பைப் பார்த்தால் உயிர் பிரிந்துவிடாமல் அவர் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதுபோலத் தெரிகிறதே! ஓடோடிச் சென்று அவரை மடியில் கிடத்திக் கொண்டான் ராமன். அவருக்குத் தெம்பு அளிக்கக்கூடிய வகையில்  அருகிலிருந்த குளத்திலிருந்து நீர் முகந்து வந்து கொடுத்தான் லட்சுமணன்.
அவர்களைப் பார்த்து கலங்கினார் ஜடாயு. ‘‘ராமா… ராவணன் உன் மனைவியைத் தேரில் கடத்திச் சென்றான். தடுக்க முயன்ற என்னைத் தாக்கி, இப்படி வீழ்த்திவிட்டுப் போய்விட்டான். அவன் தென் திசையிலிருக்கும் இலங்கையின் மன்னன் என்பது உனக்குத் தெரிந்திருக்கும். உன் பராக்கிரமத்தால் அவனை அழித்து சீதையை மீட்டுக்கொள்,‘‘ என்று கூரிய அவர், தன் பொறுப்பை இயன்றவரை நிறைவேற்றிய திருப்தியோடு உயிர் நீத்தார்.
உடனே அவருக்கு உரிய நீத்தார் கடனை மேற்கொண்டான் ராமன். அந்த சடங்கின் ஓர் அம்சமான, ‘ஏஷாம் ந மாதா, ந பிதா, ந ப்ராதா, ந பந்து, நாந்ய கோத்ரிணா, தே ஸர்வே த்ருப்திமாயாந்து….‘ என்ற மந்திரம் சொல்லி, அதாவது, ‘என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர், என் கோத்திரக்காரர் என்று எந்தவகை பந்தத்திற்குள்ளும் வராத என் மனதுக்கினிய அன்பரே, உங்கள் ஆன்மா நற்கதி அடையட்டும்…‘ என்ற பொருளில் வரும் மந்திரத்தையும் சொல்லி அவருக்கு இறுதிக் கடன் செலுத்தினான். என்ன பெருந்தன்மை! மனித உயிர்க்கு மட்டுமல்லாது, ஒரு பறவைக்கும் அதே மரியாதையை செலுத்திய மனித நேயம்…
பிறகு கனத்த மனதுடன் சகோதரர்கள் சீதையைத் தேடத் தொடங்கினார்கள். செல்லும் வழியெல்லாம் பார்வையோடு கவனத்தையும் செலுத்தி, அவற்றுக்குள் சீதை தென்படுவாளா என்று நுணுகி ஆராய்ந்தபடி சென்றார்கள்.
ஓரிடத்தில் குடிநீர் தேவைப்பட, ராமனை சௌகரியமாக அமர்த்திவிட்டு லட்சுமணன் அந்த கானகப் பகுதிக்குள் சென்றான். அங்கே அவன் நீரைக் காணவில்லை ஆனால் நீச மனம் கொண்ட அரக்கியைக் கண்டான். ஆமாம், அயோமுகி என்ற அவள் அவன்மீது மோகம் கொண்டு முந்திவர, தன் பண்பிலிருந்து வழுவாத லட்சுமணன் சூர்ப்பணகைக்கு தந்த அதே தண்டனையைத் தந்தான். ‘காதுகளும், மூக்கும் இழந்த நீ, இவ்வாறு ஊனமடைந்த அனுபவத்தால் விருப்பமில்லாத ஆடவர் யாரையும் நெருங்காதிருக்க வேண்டும்,‘ என்று கூறி விரட்டி விட்டான்.
இந்த இடையூரை இருவருமே எதிர்பார்க்கவில்லை. சரி இதையும் கடந்துவிட்டோம் என்ற எண்ணத்தில் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
சற்றுத் தொலைவில், அவர்களை அணைத்தாற்போல பெரிய மலைபோன்ற இரண்டு கரங்கள் சுற்றி வளைத்தன. என்ன, ஏது என்று யோசிக்கு முன்னரே அந்தக் கரங்களுக்குரியவனின் ஆர்ப்பாட்டச் சிரிப்பிலிருந்து அவன் ஒரு அரக்கன் என்பதைப் புரிந்து கொண்டார்கள். சீதையை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க முயற்சித்தால், இதுபோன்ற தடைகள் பல அடிகள் பின்னோக்கித் தள்ளிவிடுகின்றனவே என்று அச்சத்துடன் வருந்தினார்கள் சகோதரர்கள்.
‘‘நான் கவந்தன். இன்றைய என் பசிக்கு நீங்கள் இருவரும் இரையானீர்கள்,‘‘ என்று கொக்கரித்தான் அரக்கன்.
அதைக்கேட்டு அலுத்துக் கொண்டான் ராமன். ‘‘இன்னும் ஒரு வதைக்கு நம்மைத் தூண்டுகிறானே இந்த அசுரன்… நம் இருவராலேயே அனைத்து அசுர குலமும் அழிந்து விடுமோ!‘‘ என்று தம்பியிடம் கேட்ட அவன், அதே வேகத்தில் தன் வாளால் கவந்தனின் நெடிய தோளினை வெட்டி எறிந்தான். லட்சுமணனும் தன் பங்குக்கு அசுரனின் இன்னொரு தோளைத் துண்டாடினான்.
இப்படி ஒரு தாக்குதலை அதுவரை சந்தித்திராத கவந்தன் அதிர்ச்சியால் நிலைக்குலைந்து போனான். அப்படியே கீழே சாய்ந்த அவன் திடீரென கந்தர்வனாக மாறினான். ‘‘தனு என்ற பெயருடைய எனக்கு என் நிகழ் ஜன்மத்தை மீட்டுத் தந்த அன்பர்களே, உங்களுக்கு வந்தனம். ஸ்தூலசிரஸ் என்ற முனிவரது சாபத்தால் நான் இந்த இழிநிலையை அடைந்தேன். இப்போது சுய ரூபம் பெற்றேன். தங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?‘‘ என்று பணிவுடன் கேட்டான்.
ராமன் தன் சோகக் கதையை விவரிக்க அதுகேட்டுப் பெரிதும் துக்கமுற்றான் தனு. உடனே, ‘‘நீங்கள் வானரத் தலைவனான சுக்ரீவனை சந்திப்பது நன்மை பயக்கும். அவனும், அவனது படையினரும் சீதையை மீட்டுத் தரும் பணியில் உங்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள்… சென்று, வென்று வாருங்கள்…‘‘ என்று வாழ்த்தி விட்டு தான் விண்ணேகி மறைந்தான்.
மீண்டும் தொடர்ந்தது பயணம். ஒரு நாளைக்கூட வீணாக்கக் கூடாத மிகப் பொன்னான காலம் அது. தனுவின் சொற்களால் உற்சாகமடைந்த ராம, லட்சுமணர் மதங்க முனிவர் வாழ்ந்திருந்த சோலைப் பகுதிக்கு வந்தார்கள்.
அங்கே அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு வரவேற்பு – சபரி என்ற மூதாட்டி அவர்களை பெருமகிழ்வுடன் எதிர்கொண்டாள். ‘‘என் கலி தீர்க்க வந்த ராமா, உன்னை நினைத்தே நான் பன்னெடுங்காலம், நெடுந்தவம் மேற்கொண்டிருந்தேன். உன்னைக் காணாது உயிர் நீங்கேன் என்று விரதம் பூண்டிருந்தேன். என் விருப்பம் நிறைவேறியது,‘‘ என்று ஆனந்தப் பெருக்குடன் சொன்ன சபரி, தான் சேகரித்து வைத்திருந்த கனி, காய்களை அவர்கள் புசிக்கக் கொடுத்தாள்.
பிறகு அவர்களுடைய தற்போதைய வேதனையைத் தெரிந்து கொண்டு, இவளும் சுக்ரீவன் நட்பே அவர்களுக்கு உறுதுணையாகும் என்று கூறினாள்.  சுக்ரீவன் தங்கியிருக்கும் ருசிய மலைக்குச் செல்லும் வழியை விளக்கிச் சொன்னாள். பிறகு தன் இந்தப் பிறவியின் கடமை முடிந்த மன நிறைவில் அவள் மோட்ச உலகில் பிரவேசித்தாள்.
ராம, லட்சுமணர் இருவரும் அவள் காட்டிய வழியில் சென்று பம்பா நதிக்கரையை அடைந்தார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar