|
விஷ்ணுவின் பக்தனான காஞ்சிபுரத்து மன்னர் ஒருவர் பெருமாளுக்கு கோயில் ஒன்றைக்கட்டினார். கும்பாபிேஷகத்தை நடத்திய பின்னர், அவருக்கு தானே சிறந்த பக்தர் என்கிற தலைக்கனம் ஏற்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களை மதிக்காமல் நடந்தார். பாதிக்கப்பட்டவர்கள் பெருமாளிடம் முறையிட்டனர். பெருமாளும் தன் திருவிளையாடலை தொடங்கினர். ஊரின் எல்லையில் விஷ்ணுதாசர் என்னும் ஏழை பக்தர் ஒருவர் வாழ்ந்தார். அவர் வீட்டில் பூஜை செய்யும் நேரத்தில் அந்த பக்கமாக நகர்வலம் வந்த மன்னர் ஏளனமாக அவரை பார்த்தார். மன்னரை பொருட்படுத்தாமல் வழிபாட்டை தொடர்ந்தார் விஷ்ணு தாசர். தன்னை பொருட்படுத்தாத விஷ்ணு தாசரைக் கண்டு கோபமடைந்தார் மன்னர். ‘‘நம்மில் யார் பெருமாளை நேரில் பார்க்கிறார்களோ அவரே சிறந்த பக்தர்’’ என சபதமிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அதன்பின் விஷ்ணுதாசர் அருகில் உள்ள பழமையான பெருமாள் கோயிலுக்கு சென்றார். அங்கு வழிபாட்டிற்கு தேவையான உணவுகளை (நைவேத்தியம்) தயாரிக்கும் தொண்டினை மேற்கொண்டார். ஒருநாள் அவர் செய்து வைத்திருந்த உணவு திருடு போனது. மறுபடியும் உணவை தயார் செய்து கொடுத்தார்.
இப்படியே தொடர்ந்து இரு நாட்கள் நடந்தன. திருடு போகும் சமைத்த உணவை கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்து மறைவில் நின்று கண்காணித்தார். அப்போது பசியில் வாடிய பிச்சைக்காரன் ஒருவன் உணவை திருடிச்செல்வதை பார்த்தார். உணவில் நெய் சேர்த்தால் நன்றாக இருக்குமே என எண்ணிய விஷ்ணுதாசர், அவன் பின்னால் நெய் பாத்திரத்துடன் ஓடினார், நம்மை பிடிக்கத் தான் வருகிறாரோ என பயந்த அவர் தடுக்கி விழ விஷ்ணுதாசர் அவரை தாங்கி பிடித்தார். அவர் வைத்திருந்த உணவில் நெய்யை விட்டார். அப்போது சங்கு, சக்கரத்துடன் பெருமாள் காட்சி கொடுத்தார். இந்தச் செய்தி மன்னரை எட்டியது. தான் செய்த தவறை உணர்ந்த மன்னர் பக்தர்களை மரியாதையாக நடத்த ஆரம்பித்தார்.
|
|
|
|