|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » நேர்மைக்கு ஆபத்து |
|
பக்தி கதைகள்
|
|
முன்னால் அமர்ந்திருந்த டாக்டர் கிரிக்கு 45 வயது இருக்கும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். கார்ப்பரேட் மருத்துவமனையோடு இணைந்திருக்கிறார். பல கோடிகள் சம்பாதிப்பவர். “நான் ரொம்பவே பயந்து போயிருக்கேன், சார். என் பேஷண்ட் – பேரு சேகர் - அரசாங்கத்துல பெரிய பதவில இருக்காரு. நல்ல மனுஷன். தன்னைச் சுத்தி லஞ்ச லாவண்யங்கள் தலைவிரிச்சாடற சூழ்நிலையில தனியாளா நேர்மையா இருக்காரு. அதனால அவர பல தரம் டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. அதப் பத்தியெல்லாம் அவரு கவலப்படல. பச்சைப்புடவைக்காரியோட பக்தர்” அவருக்கு என்ன? “போன மாசம் தலைவலி தாங்க முடியலன்னு என்கிட்ட வந்தாரு. எக்ஸ் ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பாத்தோம். அவர் மூளையில பெரிய ட்யூமர் இருக்கு. அது மோசமான கேன்சராத்தான் இருக்கும்னு எனக்குத் தெரியும். அதிகபட்சம் இன்னும் ஆறுமாசம்தான் இருப்பாரு. பொண்ணு இப்போதான் எம் பி பி எஸ் சேர்ந்திருக்கு. பையன் பளஸ் டூ படிச்சிக்கிட்டிருக்கான். மனைவிக்கும் ஏதோ பிரச்னைங்கறாங்க. நேர்மையான அதிகாரிங்கறதுனால பெரிசா ஒண்ணும் சேமிப்பு கெடையாது. சொத்து பத்தும் இல்ல.” சொல்லும் போதே கண்கலங்கி விட்டார் டாக்டர் கிரி. “எனக்குன்னு பச்சப்புடவைக்காரி என்ன ஆயுசு கணக்கு வச்சிருக்காளோ அதஅவருக்குக் கொடுக்கச் சொல்லுங்க. சேகர எப்படியாவது காப்பாத்தச் சொல்லுங்க. நல்லவங்க கஷ்டப்படறது நாட்டுக்கு நல்லதில்ல” பல நிமிடங்கள் புலம்பிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பிவிட்டார் கிரி. நானும் சேகரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நல்லவருக்காக நான் நோன்பிருந்தேன். பச்சைப்புடவைக்காரியின் கால்களை இறுகப் பற்றிக்கொண்டேன். எனக்கு விதிக்கப்பட்ட ஆயுளையும் சேகருக்குக் கொடுத்துவிடுங்கள் என பிரார்த்தித்தேன். ஒன்றும் நடக்கவில்லை. டாக்டர் கிரியிடமிருந்து எந்த தகவலும் இல்லை, அவரைப் போனில் அழைக்கவும் பயமாக இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலையிலிருந்து உண்ணா நோன்பிருந்து மாலை கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். சொக்கநாதர் கோயில் வாசலில் நின்றிருந்த ஒரு பெண் என்னிடம் எதையோ நீட்டினாள். சுக்கு வெல்லம். அதை வாயில் போட்டவுடன் என்னைப் பார்த்து புன்னகைத்தாள் அந்தப் பெண். “அரசாங்க அதிகாரி புற்று நோய் வந்து சாகவேண்டும் என்பது கர்மக்கணக்கு. அந்த மருத்துவனோ நீயோ உங்கள் ஆயுளைக் கொடுப்பதால் அவன் விதியை மாற்றமுடியாது.” “என்றாலும் அவனை ஆபத்திலிருந்து காப்பாற்ற முடிவு செய்துவிட்டேன். அதற்கு ஒரு பரிகாரம் தேவைபப்படுகிறது” பெருத்த விம்மலுடன் அவள் காலில் விழுந்தேன். “நான் என்ன பரிகாரம் சொல்வேன் என நினைக்கிறாய்?” அன்னையின் குறும்பு என்னையும் தொற்றிக்கொண்டது. “புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறீர்கள்? அவன் மனதில் அன்பு குறைந்துவிட்டது. அதனால்தான் பிரச்னை. மனதிலிருக்கும் அன்பைக் கூட்டிக்கொண்டால் பிரச்னை தன்னால் ஓடிவிடும் என்பீர்கள்” “அவன் மனதிலாவது அன்பு குறைவதாவது? அவன் மனதில் வானமளவு அன்பு இருக்கிறது. அந்த அன்பு இதைப் போல் இன்னும் நுாறு கட்டிகள் வந்தாலும் அவனைக் காப்பாற்றிவிடும்.” “என்ன சொல்கிறீர்கள் தாயே?” “அவன் கடந்த காலத்தைக் காட்டுகிறேன் பார்” சேகரும் குமாரும் இணைபிரியா நண்பர்கள். இருவரும் அரசாங்க வேலையில் இருந்தார்கள். இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டது. சேகருக்குப் பெண் கொடுக்க அவன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நான் நீ என போட்டியிட்டனர். குமாருக்கோ திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. “ஏண்டா கல்யாணத்த தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்க?” ஒருநாள் குமாரிடம் கேட்டான் சேகர். “உனக்குத் தெரியாததா? என் தங்கச்சிக்குக் கல்யாணம் ஆகாம நான் எப்படிக் கல்யாணம் செஞ்சிக்க முடியும்? அவளுக்கு சின்ன வயசுல போலியோ வந்து கால் மடங்கிப்போச்சி. விந்தி விந்தித்தான் நடப்பாள். அவள கட்டிக்கற அளவுக்கு யாருக்குமே பெரிய மனசு இல்லடா. அப்படியே கல்யாணம் பண்ணிக்கறேன்னு வந்தாலும் காரக் கொண்டா, 200 பவுன் நகையக் கொண்டான்னு அநியாயமாக் கேக்கறாங்கடா. என்னால யோசிச்சிக்கூடப் பாக்கமுடியாதுடா. மனசொடிஞ்சிப் போயிட்டேன். இதனாலயே அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சி” சேகரின் திருமணம் நிச்சயமாகும் நிலையில் இருந்தது. துாத்துக்குடியைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் தன் ஒரே பெண்ணை சேகருக்குக் கொடுக்கத் தயாராக இருந்தார். தேதி குறிப்பதுதான் பாக்கி. பல நிமிடங்கள் மவுனமாக இருந்த சேகர் திடீரென தன் உயிர் நண்பன் கையை இறுகப் பற்றியபடி “டேய் குமார்! நான் கீழ்ஜாதிதாண்டா. அது பரவாயில்லன்னா நானே உன் தங்கச்சியக் கட்டிக்கறேண்டா. அவள வாழ்க்கை முழுவதும் கண்கலங்காமக் காப்பாத்துவேண்டா. எங்க குலதெய்வம் பச்சைப்புடவைக்காரிமேல ஆணைடா” குமாரால் தன் காதுகளை நம்பமுடியவில்லை. தன் நண்பனை இறுகத் தழுவிக்கொண்டான். முதலில் சேகரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சேகரின் உறுதியைப் பார்த்ததும் அவர்கள் சம்மதித்தனர். கோடீஸ்வரனுக்கு ஒரே மாப்பிள்ளையாக வேண்டிய சேகர் நண்பனுக்காக மாற்றுத் திறனாளியான அவனது தங்கையைத் திருமணம் செய்ய தயாரானான். சேகரின் அன்பு குமாரின் தங்கை உயிரையே காப்பாற்றியது. தன் திருமணம் தடைபட்டு தன்னால் தன் சகோதரனும் திருமணம் செய்ய முடியவில்லையே என்று மனம் வெதும்பி அவள் துாக்கில் தொங்குவதாக இருந்தாள். சேகர் தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்பதைக் கேட்டு அவள் மனதை மாற்றிக்கொண்டாள். விரைவிலேயே குமாருக்கும் திருமணம் நிச்சயமானது. “அவ்வளவு அன்பு இருப்பவனை நான் கைவிட்டு விடுவேனா என்ன?” அன்னையை வணங்கினேன். அலைபேசி ஒலித்தது. “எடுத்துப் பேசு. எல்லாம் நல்ல செய்திதான்” எடுத்தேன். “டாக்டர் கிரி பேசறேன் சார். சேகருக்கு இருக்கற ட்யூமர் கேன்சர் இல்லன்னு முடிவு வந்திருச்சி. இது பெரிய அற்புதம். நான் முப்பது வருஷமா தொழில்ல இருக்கேன். இந்த சைஸ்ல கட்டியப் பார்த்ததுமே கேன்சர்னு சொல்லிரலாம். ஆனாஅபூர்வமா இது கேன்சர் இல்லன்னு பயாப்சில சொல்லிட்டாங்க. திங்கட்கிழமை ஆப்பரேஷனுக்கு நாள் குறிச்சிருக்கோம். சேகர் நுாறு வயசு நல்லபடியா வாழ்வாரு சார். நேர்மையோட தலைக்கு வந்த ஆபத்து தலப்பாவோட போயிருச்சி. பச்சைப்புடவைக்காரி கருணையப் பத்தி நெனச்சா...” பெரிய விம்மல் சத்தத்துடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முன்னால் நின்றிருந்த பச்சைப்புடவைக்காரியை நோக்கிக் கண்ணீர் மல்கக் கைகூப்பினேன். “அவனைக் காப்பாற்றிவிட்டேன். உனக்கு என்ன வேண்டும் சொல்” நான் மவுனம் சாதித்தேன். “நீ என்ன கேட்கப்போகிறாய் என்று எனக்குத் தெரியும். சேகர் அளவுக்கு என் மனதிலும் அன்பு இருக்க வேண்டும் என்று கேட்பாய் சரிதானே!” “அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். அன்பு தவத்தால் வரவேண்டும். அதை வரமாகக் கொடுக்க முடியாது என்பீர்கள். எனக்கு வேறு ஒரு வரம் வேண்டும் தாயே!” “கேள்.” “அடுத்த நுாறு பிறவிகளுக்கு சேகர் அளவு அன்புடையவர்கள் வீட்டில் சாதாரண வேலைக்காரனாக, குப்பை கூட்டுபவனாக, கழிப்பறை சுத்தம் செய்பவனாக இருக்கும் வரம் வேண்டும். அப்படி வேலை செய்வதைவிடச் சிறந்த தவம் வேறு இல்லை என்பதை நான் அறிவேன். நுாறு பிறவிகளாகத் தொடர்ந்து செய்யும் அந்தத் தவம் நிறைவுறும்போது அதன் பயனாக என்மனதை நீங்கள் அன்பால் நிரப்ப வேண்டும்” கலகலவென சிரித்தபடி காற்றோடு கலந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.
|
|
|
|
|