|
புனிதமான காசி தலத்தில் உள்ளது அன்னபூரணி, விஸ்வநாதர் கோயில். இங்கு வாழும் மக்கள் அன்னதானம் செய்வதை குறிக்கோளாக கொண்டவர்கள். இவர்களை காசியாத்திரை சென்று வருபவர்கள் புகழ்ந்து பேசுவது வியாசருக்கும் வியப்பாக இருந்தது. காசி பெருமைகளை நேரில் பார்க்க விரும்பிய அவர், தனது சீடர்களிடம் தெரிவித்தார். சீடர்களும் அங்கு சென்றால் சுவையான உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சம்மதம் தெரிவித்தனர். அனைவரும் காசிக்கு சென்று சத்திரம் ஒன்றில் இரவு தங்கினர். மறுநாள் காலையில் கங்கையில் நீராடி அனைவரும் ஊரில் பல இடங்களில் பிச்சை எடுக்கச் சென்றார்கள். மாலையில் அனைவரும் சத்திரத்தில் சந்தித்தபோது பிச்சை கிடைக்கவில்லை என்பதை அறிந்தனர். மறு நாளும் பிச்சை எதுவும் கிடைக்காமல் திரும்பினர். இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நடந்தன. இதனால் வியாசரும், சீடர்களும் ஏமாற்றம், அடைந்தனர். மறுநாள் வியாசர் ஒரு வீட்டிற்கு சென்று பிச்சை கேட்டார். அங்கு யாரும் இல்லாததால் வியாசர் பொறுமை இழந்து காசி மக்களுக்கே சாபம் கொடுக்க நினைத்தார். அப்போது அந்த வீட்டில் இருந்து வந்த பெண்மணி காரணம் ஒன்றும் இல்லாமல் சாபம் கொடுப்பது சரியா என கேட்டாள். வியாசரும் காசியில் இத்தனை பேர் இருந்தும் எங்களுக்கு ஒருவர் கூட பிச்சையிட வில்லையே எனச் சொன்னார். வாக்கு வாதம் வேண்டாம், நாளை சீடர்களுடன் சாப்பிட வாருங்கள் என அழைத்தார் பெண்மணி. அதன்படியே சாப்பிட வந்தார்கள். அங்கு அனைவருக்கும் இலை, தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அப்பெண்மணி அவர்களை வரவேற்று சாப்பிடுங்கள் என்றார். இலையில் ஒன்றும் இல்லை எப்படி சாப்பிடுவது எனக் கேட்டார் வியாசர். அப்போது இலையில் அனைவருக்கும் உணவு இருந்தது. சாப்பிட்ட பிறகு அவரிடம் அனைவரும் நன்றி தெரிவித்த போது அன்னபூரணியும் விஸ்வநாதரும் காட்சி கொடுத்தனர். தங்கள் ஆசியிருந்தும் எங்களுக்கு ஏன் இந்தச்சோதனை என கேட்டார் வியாசர். மனபூர்வமான பக்தியால் இங்கு வராமல் ஆராய வேண்டும் என்ற ஆவலில் வந்தீர்கள் எனச்சொன்னார். தவறை உணர்ந்த வியாசர் தன் சீடர்களுடன் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டு விட்டு ஊருக்கு புறப்பட்டார்
|
|
|
|