|
தவத்தில் சிறந்த துறவி ஒருவரைக் கண்ட சுண்டெலி தயங்கி நின்றது. ‘‘உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’’ என்றார் துறவி. ‘‘பூனையை கண்டால் பயமாக இருக்கிறது. என்னை பூனையாக மாற்றினால் உதவியாக இருக்கும்’’ என்றது. துறவியும் மாற்றினார். இரண்டு நாள் கழித்து மீண்டும் அப்பூனை துறவியிடம் வந்தது. ‘‘இப்போது உனக்கு என்ன பிரச்னை’’ எனக் கேட்டார். ‘‘என்னை நாய் துரத்துகிறது. நாயாக மாற்றினால் நன்றாக இருக்கும்’’ என்றது. உடனே நாயாக மாற்றினார். சில நாள் கழிந்தது. அந்த நாய் துறவியின் முன்பு நின்றது. ‘‘இப்போது என்ன வேண்டும்’’ எனக் கேட்ட போது, ‘‘பயம் என்னை வாட்டுகிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றுங்கள்’’ என்றது நாய். அதை புலியாக மாற்றினார். சில நாள் சென்றதும், ‘‘காட்டிலுள்ள வேடன் கொல்ல வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றுங்கள்’’ என்றது புலி. உடனே வேடனாக மாற்றினார். சிலநாளுக்கு பிறகு,‘‘ மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது’’ என்றது. ‘‘உன்னை எப்படி மாற்றினால் என்ன? பயம் போகாது. பிறவிக்குணம் மாறாது. நீ எலியாக இருப்பதே சரி’’ என முடிவெடுத்தார் துறவி. உருவத்தால் மாறலாம். ஆனால் மனதில் மாற்றம் வராவிட்டால் பயனில்லை. உங்களைப் பற்றி எப்படி நினைக்கிறீர்களோ அப்படித்தான் செயல்படுவீர்கள்.
|
|
|
|