பொதுக்கூட்டம் ஒன்று நடக்கவிருந்தது. இளம் பேச்சாளர் இருவருக்கு இடையே போட்டி. யாருடைய பேச்சுக்கு கைதட்டல் கிடைக்கும் என்று. கூட்டம் துவங்கும் முன் இருவரும் பேசியபடி இருந்தனர். அப்போது ஒரு பேச்சாளரின் அலைபேசியில் அழைப்பு வரவே எழுந்து சென்றார். அவர் எழுதிய குறிப்புகள் மேஜை மீது இருந்தது. போட்டி பேச்சாளர் அந்த குறிப்புகளை வேகமாகப் படித்தார். அவர் தயாரித்திருந்ததை விட நன்றாக இருந்தது. முதலாமவர் திரும்ப வருவதற்குள் குறிப்பை வைத்து விட்டு இடத்தை காலி செய்தார். கூட்டம் ஆரம்பித்தது. போட்டி பேச்சாளருக்குத் தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பில் படித்ததை எல்லாம் தன் கருத்தாக பேசி முடித்தார். பலத்த கைதட்டல். பேசியவரும் தன்னை புத்திசாலியாக கருதி மகிழ்ந்தார். அப்போது தான் முதலாமவருக்கு எதிரியின் விஷமம் புரிந்தது. மேடையேறினால் பேச விஷயம் இல்லையே... என யோசித்தபடி மைக்கை பிடித்தார்.‘‘ எனக்கு முன்னால் பேசிய நண்பருக்கு முதலில் நன்றி தெரிவிப்பது என் கடமை. உடல்நலமின்மையால் என்னால் பேச முடியவில்லை. என் குறிப்புகளை தொகுத்து உங்களால் பேச முடியுமா என அவரிடம் கேட்டேன். பெருந்தன்மையுடன் சம்மதித்து தன் பணியை சிறப்பாகச் செய்தார். அவருக்கு மீண்டும் என் நன்றிகள்’’ என்று சொல்லி அமர்ந்தார். அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சூழ்நிலைக்கு ஏற்ப சமயோஜிதமாகச் செயல்படுபவனே அதிபுத்திசாலி.
|