Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நடிகனின் வேதனை
 
பக்தி கதைகள்
நடிகனின் வேதனை


விமானம் ஒரே சீராகப் பறந்து கொண்டிருந்தது. தலை போகும் வேலை, நீங்கள் வந்தேயாக வேண்டும் என்று வற்புறுத்தி என்னைச் சென்னைக்கு அழைத்துச் செல்கிறார்கள். பயமாக இருந்தது. பச்சைப்புடவக்காரியை நினைத்தேன்.
அடுத்த நொடி ஒரு அழகான விமானப் பணிப்பெண் என்னிடம் ஓடி வந்தாள். “என்ன வேண்டும் கூப்பிட்டீர்களே?” என்று சத்தமாகக் கேட்டுவிட்டு, ‘பெரிய இடத்தில் பிரச்னை. பரிகாரம் சொல்லச் சொல்வார்கள். அன்பை அடிப்படையாகக் கொண்டு நீ சொல்லும் எந்தப் பரிகாரமும் பலிக்கும்’’
அவள் சென்ற திசையை நோக்கிக் கைகூப்பினேன்.
ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலின் பிரமாண்டமான அறையில் அமர்ந்திருந்தேன். சில நிமிடங்களில் பர்தா அணிந்த ஒரு பெண் வந்தாள்.
“வணக்கம்” என்ற ஆண்குரலைத் தொடர்ந்து பர்தா விலக்கப்பட்டது. அதிர்ந்தேன். இவன் பெரிய திரைப்பட நடிகன் ஆயிற்றே? இவனுக்கு என்ன பிரச்னைகள் இருக்க முடியும்?
“இருக்கறது எல்லாமே பிரச்னைகள்தான். எழுபது கோடி ரூபாய்க்கு மேல கடன் இருக்கு. கடன அடைக்கமுடியல. ஏதோ ஒரு சக்தி கடன அடைக்கவிடாமத் தடுக்குது”
நடிகனின் அழகான முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“பொண்டாட்டியோட பிரச்னை வந்து விவாகரத்து வரைக்கும் போயிருச்சி.. அவளச் சொல்லியும் தப்பில்ல. நான் சினிமாக்காரன்தானே. கொஞ்சம் முன்ன பின்னதான் இருப்பேன். யாரோ போட்டுக்கொடுத்துட்டாங்க. இப்போ விவாகரத்து ஆச்சின்னா என் ரெண்டு மகள்களையும் கூட்டிக்கிட்டுப் போயிருவா. என் மார்க்கெட் போயிரும். என் பொண்ணுங்களவிட்டுட்டு என்னால வாழமுடியாது’’
கிளிசரினின் துணையில்லாமலேயே அழுதான் நடிகன்.
“இதுக்கு நடுவுல ஒரு நடிகையோட நெருங்கிப் பழகிட்டேன். அவ விடமாட்டேங்கறா. இந்த நிமிஷத்துல நீ என்னக் கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தான் ஆச்சுன்னு மிரட்டறா. இல்லேன்னா நாம சேந்து இருக்கற வீடியோவ இண்டர்நெட்டுல போட்டிருவேன்னு பயமுறுத்தறா”
நடிகனையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவன் வாழ்க்கை முறையினாலும் ஒழுக்கமின்மையாலும் இவனாகவே உண்டாக்கிக் கொண்ட பிரச்னைகள்தான் எல்லாமே.
“நான் நல்லவன். ஈ எறும்புக்குக்கூடத் துரோகம் செய்யாதவன். எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்னு நான் பச்சைப்புடவைக்காரிகிட்ட நியாயம் கேக்கல சார். நான் கெட்டவன். ஒழுக்கமில்லாதவன். செஞ்ச தப்ப மனசாரா உணர்ந்தவன். திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கொடுத்தா என்னன்னு ஒரு பிச்சைக்காரனப்போலப் பச்சைப்புடவைக்காரிகிட்ட கெஞ்சறேன் சார் நீங்க என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யறேன்”
நெகிழ்ந்தேன். சரியான பரிகாரம் என்னவென்று தோன்றியது.
“துணை நடிகர் ராஜனத் தெரியுமா?”
“நல்லாத் தெரியும். அவருக்கு உடம்பு சரியில்லன்னு…”
“ஆமா. குடிப் பிரச்னை. கல்லீரல் கெட்டுப்போயிருக்கு. கல்லீரல் மாற்றுச் சிகிச்சை செஞ்சாத்தான் பொழைப்பாரு. அதுக்கு அறுபது லட்சம் செலவாகும். அவர்கிட்ட பணம் இல்ல”
“அளவில்லாமக் குடிச்சான் சார் அவன். அவனுக்கு எதுக்கு உதவி செய்யணும்?”
“ஒரு விதத்துல நீங்களும்தான் அளவு தெரியாம வாழறீங்க. சக்திக்கு மீறின கடன், நடிகையோட தொடர்பு, மனைவியோட தகராறு... நீங்க ரொம்ப ஒழுங்கோ?”
நடிகன் அடங்கினான்.
“சரி, ராஜன் சிகிச்சைக்கு நான் பணம் கொடுக்கறேன். என் பிரச்னை அதனால தீர்ந்திருமா?”
“உத்தரவாதம் கொடுக்கமுடியாது. நம்பிச் செஞ்சா நல்ல பலன் உண்டுன்னு பச்சைப்புடவைக்காரி சொல்லியிருக்கா”
சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஊர் திரும்பிவிட்டேன். ஒரு வாரம் கழித்து நடிகனே என்னை அழைத்தான்.
“ராஜனுக்கு லிவர் ட்ரான்ஸ்ப்ளேண்ட் ஆப்பரேஷன் முடிஞ்சிருச்சி. மொத்தச் செலவும் என்னுதுதான்”
“உங்களப் பச்சைப்புடவைக்காரி நிச்சயமாக் காப்பாத்துவா”
இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் நடிகன் என்னை அழைத்தான். காட்டுக்கூச்சல் போட்டான்.
“பரிகாரம் செஞ்சா என் பிரச்னை தீரும்னு சொன்னீங்க, இப்போ பிரச்னை இன்னும் ஜாஸ்தியாயிருச்சி. என் உயிரே போகப் போகுது,”
“என்ன ஆச்சு?”
“இனிமே என்ன ஆகணும்?  எனக்கு மூளையில ஒரு கட்டி வந்திருக்காம். அது கேன்சராம். நான் இன்னும் ஆறு மாசம்தான் உயிரோட இருப்பேனாம்.  இதுதான் பச்சைப்புடவைக்காரியோட அன்பா?  நம்பிச் செஞ்சா நல்ல பலன் கிடைக்கும்னு சொன்னீங்களே உங்க வாய்க்குச் சர்க்கரைதான் போடணும். கைமேல பலன். உடனடி மரணம். இனிமே பச்சைப்புடவைக்காரி கருணைக்கடல், அன்பரசின்னு எழுதாதீங்க. கையில இருந்த பணத்த எல்லாம் ராஜனோட ஆப்பரேஷனுக்குக் கொடுத்துட்டேன். இந்த மாசம் வட்டிகட்டக்கூடப் பணம் இல்ல. என்ன ஏன் சார் அவ இப்படி சித்திரவதை செய்யணும்?”
எனக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.  சமாதானம் சொல்ல முயன்றேன். என்னைப் பேசவிடாமல் தடுத்துவிட்டான் நடிகன்.
அன்பை அடிப்படையாகக் கொண்டு நீ சொல்லும் எந்தப் பரிகாரமும் பலிக்கும். என்று பச்சைப்புடவைக்காரியே சொன்னாளே! ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? மணியைப் பார்த்தேன். மதியம் மூன்று மணி. கோயில் திறந்திருக்க மாட்டார்களே! அதனால் என்ன அனாதையாக, பிச்சைக்காரனாக அவளுடைய கோயில் படிகளில் விழுந்து கிடப்பது என்ற தீர்மானத்துடன் நடக்கத் தொடங்கினேன்.
சொக்கநாதர் கோயில் படிகளில் ஒரு அழகான சுமங்கலி அமர்ந்திருந்தாள். நான் அவளைத்தாண்டி பூட்டிய கதவுகளுக்கு அருகில் போனேன்.
“நான் இங்கே இருக்கிறேன். அங்கே யாரைத் தேடுகிறாய்?” சுமங்கலி கேட்டாள்.
அவள் காலில் விழுந்து வணங்கினேன்.
“நீ சொன்ன பரிகாரம் பலித்துவிட்டது. சந்தோஷம்தானே!”
“கேலி செய்யாதீர்கள் தாயே! நான் சொன்ன பரிகாரம் ஆளையே அடித்துவிட்டது”
“நீ புரிந்துகொண்ட லட்சணம் அவ்வளவுதான். என்ன நடந்தது என்று நான் காட்டுகிறேன் பார்”
நடிகனுக்குப் புற்று நோய், இன்னும் ஆறு மாதம்கூடத் தாங்க மாட்டான் என்ற செய்தி பரவியதும் நடிகனிடம் பல வருடங்களாக மேனேஜராக இருந்தவன் ஓடிவிட்டான். நடிகரின் மனைவிக்கு சந்தேகம் வந்தது. அந்த மேனேஜரின் விவகாரங்களைத் தோண்டித் துருவிப் பார்த்ததில் அவன்தான் நடிகனின் கடன் அடையாமல் பார்த்துக்கொண்டான் என்ற உண்மை புரிந்தது. நடிகனின் மனைவியே கடன்காரர்களிடம் நேரடியாகப் பேசினாள். நடிகனின் நிலைமையை அறிந்த அவர்கள் பாதிப் பணம் கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.  நடிகனுக்குச் சொந்தமான நிலத்தை விற்றுக் கடனை அடைத்துவிட்டாள் மனைவி
அவனை விவாகரத்து செய்யவிருந்த தன் திட்டத்தையும் மாற்றிக்கொண்டாள். சூழ்நிலைக் கைதியாகத் தவறு செய்துவிட்டான் என்று புரிந்துகொண்டு தன் கணவன் வாழும்வரை அவனை நல்லபடியாகப் பார்த்துக்கொள்வேன் என்று விரதம் பூண்டுவிட்டாள். தாலிப்பிச்சை வேண்டி பச்சைப்புடவைக்காரியிடம் பிரார்த்திக்கிறாள்.
நடிகன் தொடர்பு வைத்திருந்த நடிகைக்கும் செய்தி தெரிந்தது. ஆடிப்போய்விட்டாள். இனிமேல் நடிகனைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று நினைத்து மூட்டைமுடிச்சுக்களுடன் ஆந்திராவிற்குப் போய்விட்டாள்.
“ஆக அவன் உன்னிடம் சொன்ன எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிட்டன.  நல்ல பரிகாரமாகத்தான் சொல்லியிருக்கிறாய்”
எனக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது.
“எல்லாம் சரிதான், தாயே! நடிகனுக்கு இன்னும் நாற்பது வயதுகூட ஆகவில்லை. அதற்குள் இறப்பதென்றால்…’’
“இந்த வயதில் புற்று நோய் வந்து இறக்கவேண்டும் என்பதுதான் அவன் விதி. துணை நடிகனின் உயிரைக் காப்பாற்றினான். அந்தக் குடும்பத்தையே வாழவைத்துவிட்டான்.  நடிகன் காட்டிய அன்பின் காரணமாக மரணத்திற்குப் பதிலாக மரணத்தின் நிழலில் இரண்டு வாரம் வாழ்ந்தால் போதுமென்று தண்டனையைக் குறைத்துவிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் நடிகனுக்கு அறுவை சிகிச்சை செய்வார்கள். நோய் குணமாகிவிடும் நிறைவாக வாழ்வான். நல்ல நடிகனாக நிறையச் சாதிப்பான். அவனை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்”
“நீங்கள் என்னைச் சொல்ல வைத்த பரிகாரத்தில் பொதிந்திருக்கும் ரகசியம் எல்லோருக்கும் தெரியவேண்டும்”
“அப்படி என்னப்பா ரகசியம்?”
“கையளவு அன்பிருந்தால் போதும், கடலளவு துன்பத்தையும் போக்கிவிடலாம் என்ற ஆன்மிக ரகசியத்தை அனைவரும் அறியவேண்டும்”
சத்தமாகச் சிரித்துவிட்டு சட்டென மறைந்தாள் சாமுண்டேஸ்வரி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar