|
தோழி இப்படி எதையும் ஒளிக்காமல் சொன்னதை பிரம்மச்சாரியின் வேடத்தில் வந்த பரமசிவன் கேட்டு, மனத்தில் மகிழ்ச்சி கொண்டார். ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் பார்வதியை நோக்கி, ‘‘உன் தோழி சொன்னதெல்லாம் உண்மையா?’’ என்று கேட்டார். பார்வதி, தன் விரல்களை ஒன்று சேர்த்து அஞ்சலி செய்தாள். சிறிது நேரம் ஆலோசித்துவிட்டு பேச ஆரம்பித்தாள். ‘‘வேதம் அறிந்தவரே! தோழி சொன்னது அனைத்தும் உண்மையே. சிவபெருமானின் மனைவி என்ற பெரும் பதவியை அடைய நான் தவம் செய்கிறேன். என் தவத்தின் அளவு என் விருப்பம் நிறைவேற போதுமோ தெரியவில்லை’’ என்றாள். இதைக் கேட்ட சிவன் தன் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் பார்வதியைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்க எண்ணி அவளை கனிவுடன் பார்த்து, ‘‘நான் சில விஷயங்கள் சொல்கிறேன். அதன் பிறகும் நீ அவரை விரும்புகிறாயா பார்க்கலாம்’’ என்றார். ‘‘பார்வதி! எனக்கு சிவனை நன்றாகத் தெரியும். மன்மதனை எரித்ததும், நீயும் அவரை நன்கு புரிந்து கொண்டிருக்கவேண்டும். உன் காதலை அவர் லட்சியம் செய்யவில்லை என்று தெரிந்தும், நீ அவர் மீது விருப்பம் கொண்டிருப்பது எனக்கு என்னவோ சரியாகப் படவில்லை. உனக்கு அவர் சிறிதும் பொருத்தமற்றவர். அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றை கேட்டுவிட்டு அதன் பிறகு ஒரு முடிவுக்கு வா’’ ‘‘திருமணத்தின் போது மங்கல சரடு கட்டியுள்ள உன் கையை, பாம்பு சுற்றியிருக்கும் அவர் கையால் பிடிக்க வேண்டியிருக்கும். அப்பொழுது உனக்கு பயமாக இருக்காதா? ஓரத்தில் அன்ன உருவங்கள் பதித்த பட்டு வஸ்திரத்தை நீ உடுத்தியிருப்பாய். ஆனால் சிவனோ யானைத்தோல் அணிந்து வந்திருப்பார். இது எப்படி பொருந்தும்? செம்பஞ்சு குழம்பு தீட்டப்பட்ட உன் அழகிய, மென்மையான பாதங்கள் உன் வீட்டில் உள்ள மலர்கள் இறைந்து கிடைக்கும் விசாலமான அறைகளில் நடந்து பழக்கப்பட்டவை. சிவனை மணந்தால் இதையெல்லாம் விட்டுவிட்டு, சுடுகாட்டில், கரடுமுரடான தரையில் நடக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட இழி நிலையை, உன் நன்மையையே விரும்பும் எங்களால் எப்படி சகிக்கமுடியும்?’’ ‘‘சுடுகாட்டு சாம்பலையே அள்ளிப்பூசும் சிவனை, எப்பொழுதும் குளிர்ந்த சந்தனத்தையே பூசிக்கொள்ளும் உன்னால் எப்படி சகித்துக்கொள்ளமுடியும்?’’ ‘‘திருமணம் முடிந்ததும், சிவன் உன்னை அவர் வீட்டுக்கு அழைத்துப் போகவேண்டும். அப்படி போகும் போது உன் அந்தஸ்துக்கும், அழகுக்கும், ஏற்றவாறு ஒரு ரதத்திலோ அல்லது நல்ல ஒரு யானையின் மீதோ உன்னை அழைத்துச் சென்றால் பொருத்தமாயிருக்கும். ஆனால், சிவனோ ஒரு ஒரு தொத்தலான கிழ எருதின் மீது உட்காரச் சொல்லி அழைத்துச் செல்வார். இதை பார்த்து ஊர் சிரிக்காதா? இந்த அவமானத்தை நீ எப்படி பொறுத்துக்கொள்வாய்?’’ ‘‘ஏற்கனவே சிவபெருமானை அடைந்து அவரது தலையில் அணியாய் விளங்கும் சந்திரன், ‘இவரிடம் வந்து மாட்டிக்கொண்டோமே! எப்படி வெளியேறுவது?’ என்று வருத்தத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். நீயும் அவரிடம் சேர்ந்தால், ‘பார்வதிக்கும் இந்த நிலை வந்துவிட்டதே’ என்று உலகம் வருந்தும். நல்ல நிலையில் இருக்க வேண்டிய இரண்டு பொருள்கள் இப்படி வீணாகி விட்டனவே என்று அனைவரும் மனம் வருந்துவார்கள்’’ ‘‘பெண்ணைப் பெற்றவர்கள் தான் தேடும் மாப்பிள்ளைக்கு நல்ல தோற்றம், உயர்ந்த குடிப்பிறப்பு, போதுமான அளவு செல்வம் இவைகள் உள்ளனவா என்று பார்ப்பார்கள். சிலர் ஒன்று குறைந்தால் கூட, மற்ற அம்சங்கள் நிறைவாய் இருந்து விட்டால் போதும் என்றுகூட நினைப்பார்கள். ஆனால் பரமசிவனுக்கு இவற்றில் ஒன்று கூட இல்லை. முகத்தில் மூன்று கண்கள் அதுவே ஒரு விகாரம், அவர் பிறந்த குலம் யாருக்குமே தெரியாது, உடுத்திக்கொள்ள நல்ல துணிகூட அவரிடம் கிடையாது. ஆகையால், அவர் உனக்கு கொஞ்சம்கூட பொருத்தமில்லாதவர். உன் எண்ணத்தை விட்டுவிடு. இதுதான் நான் சொல்வேன்’’ வந்திருக்கும் விருந்தாளி பரமசிவனைப் பற்றி இப்படி குறை பேசப்பேச, பார்வதிக்கு கோபம் ஏறி உச்சத்தில் நின்றது. அவள் கண்கள் சிவந்தன. உதடு துடித்தது. புருவத்தை நெரித்து அவரைப் பார்த்தாள். பிறகு, ‘‘ஐயா! நீர் விருந்தினராக வந்து விட்டதால், நான் பொறுமையாக பதில் சொல்லும் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இல்லாவிட்டால் நடப்பதே வேறு. சிவபிரானை உங்களுக்கு நன்கு தெரியும் என்று சொல்லிவிட்டு, இவ்வளவு விஷயங்களைக் கூறினீர். ஆனால், என்னைப் பொறுத்தவரை, நீங்கள் அவரைப்பற்றி கொஞ்சம்கூட அறியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. நீர் சொன்னதில் இருந்து ஒரு விஷயம் சந்தேகமற தெரிகிறது. அது உங்கள் அறியாமை. நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக, உங்களுக்கு சிவபெருமானைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஞானிகள், மஹான்கள் இவர்களுடைய நடத்தை, பேச்சுகள், முதலியன நம்மைப் போல் சாதாரண மனிதர்களுடையது போல் இருக்காது, இந்த உண்மை புரியாமல் உம்மைப் போன்றவர்கள் அவர்களை வெறுப்பார்கள். குறையும் கூறுவார்கள். நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள், தங்களிடமுள்ள குறைகளை போக்கிக்கொள்ள, உயர்ந்த ஆடை அணிகளை, வாசனை திரவியங்களை உபயோகிக்கிறார்கள். யாகம் முதலியவை செய்கிறார்கள். சிவபெருமானுக்கு எந்த குறையும் கிடையாது. அவர் உலக நாயகர். அவருக்கு எதையும் பெற வேண்டும் என்ற ஆசையோ நிர்பந்தமோ கிடையாது. ஆசையை உண்டாக்கி மனத்தை கெடுக்கும் பொருள்களால் அவர் பெறவேண்டிய பயன் எதுவுமில்லை. தான் செல்வமற்றவராயினும், வேண்டுபவர்களுக்கு செல்வத்தை அளிப்பவர் அவர். சுடுகாட்டில் வசித்தாலும், மூவுலகுக்கும் அவரே தலைவர். அச்சுறுத்தும் பாம்பை அணிந்திருந்தாலும், அவர் ஒரு சாந்த மூர்த்தி. முரண்பட்ட குணங்கள் அவரிடம் உள்ளது போல் நமக்குத் தோன்றினாலும், உண்மையாக அவரை நம்மால் அறிய முடியாது. ‘‘இந்த மாபெரும் உலகமே அவரது தோற்றம். ஆனாலும், அவரது வடிவம் எதுவென்று நம்மால் அறிய இயலாது. அவர் விரும்பினால் பாம்பையும் அணிவார், ஆபரணங்களையும் தரிப்பார். மண்டை ஓடோ அல்லது சந்திர கலையோ எதையும் அவர் முடி மீது தரிப்பர். அவருக்கு இரண்டும் ஒன்றுதான். பல முரண்பட்ட தர்மங்கள் அவரிடம் சேர்ந்தே காணப்படும். அவை நம்மைப் போன்றவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அறிவுபூர்வமாக ஆராய்ந்தால் குழப்பங்கள் விலகும். அவரை முற்றுமாக அறிந்தவர் எவரும் இல்லை. சுடுகாட்டு சாம்பல் அவர் கை பட்டதும், புனிதமாகி அனைத்தையும் துாய்மைப்படுத்தும். இது உண்மை. அவர் தாண்டவமாடும் போது அவர் மீதிருந்து தரையில் விழும் சாம்பலை, தேவர்கள் அனைவரும் எடுத்து, பக்தியுடன் தரிப்பார்கள். யானைமீது செல்லும் இந்திரனும், எருதின் மீது ஏறிப் போகின்ற சிவபெருமானை கண்டால், தன் வாகனத்தின் மீதினின்று இறங்கி, அவர் பாதத்தில் தலைபடும்படி வணங்குகிறான். குற்றம் காண்பதே உமது குணம் என்று நினைக்கிறேன். உம்முடைய மனம் அந்த அளவு கெட்டுக் கிடக்கிறது. ஆனாலும், இடையே உம்மை அறியாமலேயே ஒரு நல்ல வார்த்தை சொல்லிவிட்டீர். ‘அவர் பிறப்பே யாருக்கும் தெரியாதென்று’ இது உண்மை. உலகைப் படைக்கும் பிரம்மனையே அவர் படைத்தார். அனைத்திற்கும் முதலில் இருக்கும் அவருக்கு பிறப்பேது? ஆதி அந்தம் இல்லாதவர் என்பதுதான் நீ கூறியதற்குப் பொருள். ‘‘போதும். உம்மோடு இதற்கு மேல் நான் விவாதம் செய்ய எண்ணமில்லை. நீர் சொல்கிறபடி பரமசிவன் எனக்குப் பொருத்தமில்லாத, நற்குணமில்லாதவராகவே இருக்கட்டும். என் மனம் அவரைத் தான் நாடுகிறது. சுயவிருப்பத்தின்படி நடப்பவர் எவரும், பிறர் கூறுவதை பொருட்படுத்த மாட்டார்கள். நானும் நீர் கூறுவதை மதிக்கவில்லை’’ என்று சொல்லிவிட்டு, தோழியைப் பார்த்து, ‘‘சகியே! இவர் மேலும் எதோ சொல்ல விரும்புகிறார் என நினைக்கிறேன். சிவநிந்தனையாகத்தான் இருக்கும். அவரை பேச விடாதே. மகான்களை நிந்திப்பது மட்டும் பாவமல்ல, அதை கேட்பதும் பாவம்தான். நான் இந்த இடத்தை விட்டு செல்கிறேன்’’ என்று கூறி வேகமாக, அவள் மேலாடையான மரவுரி நழுவ எழுந்தாள். உடனே சிவபெருமான் அவள் முன் சுய உருவில் தோன்றி அவள் கையைப் பற்றி புன்னகைத்தார். எதிர்பாராத விதமாக சிவபெருமான் தோன்றியதும், பார்வதிக்கு சிவனிடம்தான் பேசுகிறோம் என்று அறியாமல், அவரிடமே தன்னுடைய காதலை வெளியிட்டதால் அவளுக்கு வெட்கமும் அச்சமும் ஏற்பட்டன. உடம்பு வியர்த்தது. மேலே செல்ல அடுத்த அடி வைக்க முடியாமல், அவள் நின்றாள் என்றோ அல்லது நடந்தாள் என்றோ சொல்லமுடியாதபடி காணப்பட்டாள். மலையினால் தடைபட்ட நதி, அந்த பக்கமோ இந்த பக்கமோ செல்லமுடியாதபடி இருந்த இடத்திலேயே குழம்பி நிற்பதுபோல், பார்வதியும் விவரிக்க முடியாத மனக் குழப்பதிலோ நின்றாள். சிவபெருமான் அவளை நோக்கி, ‘‘உன்னுடைய தீவிரமான தவம் என்னும் விலையைக் கொடுத்து என்னை நீ வாங்கி விட்டாய். அதனால் உனக்கு இப்பொழுது நான் அடிமை’’ அந்தக் கணமே பார்வதி தவத்தினால் தான் பட்ட சிரமங்களையெல்லாம் மறந்தாள். மனத்தில் புதிய உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தாள். தான் கோரிய பலன் கிடைக்கப் பெற்றதால் புதுமை பெற்று விளங்கினாள். ................. தொடரும்
|
|
|
|