|
எல்லாமே இயந்திரத்தனமான வாழ்வியல் ஆகிவிட்ட பிறகு குளிக்க வேண்டும் என்று கூட சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் வந்து நிற்கின்றோம். குளிக்காமலா இருக்கின்றோம் என்று கோபப்படக்கூடாது. எப்படிக் குளிக்கின்றோம் என்று கொஞ்சம் அசை போடுவோமா? உடம்பை நனைக்கின்றோம். விளம்பரத்தில் மயங்கி ஏதேனும் ஒரு சோப்பைப் போட்டு அழுக்கைக் கழுவியும், கழுவாமலும் துடைத்துக் கொண்டு ஓடுகின்றோம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் எல்லோரும் கண்மாய்களில், ஊருணிகளில், நதிகளில் தான் பெரும்பாலும் குளித்தோம். நீரிலே இறங்கி, அதனை வணங்கி, தலையை மூழ்கிக் குளித்தோம். புறந்துாய்மை நீரான் அமையும் என்னும் வள்ளுவனின் வாக்கின் வண்ணம் உடலைத் துாய்மைப்படுத்துவதோடு, இரவு முழுவதும் துாங்கி எழுந்த பின்னர் உடல் வெப்பத்தினைச் சமன் செய்யும் ஒரு நிகழ்வாகவும் குளியல் அமையும். வெறும் தண்ணீரை மேலே ஊற்றிக் கொள்ளுவதன் நோக்கம் மட்டுமல்ல குளியல். காலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீரினை ஊற்றிக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் தணியத் துவங்குகிறது நிறைவாகத் தலையில் தண்ணீரை ஊற்றி முழுமையாக வெப்பத்தினைச் சமன் செய்கின்றோம். குளிப்பதற்கென்றே சில மந்திரங்கள் இருக்கின்றன. காலப் போக்கில் எல்லாம் காணாமல் போயின. குறைந்த பட்சம் நம் வீட்டு பாத்ரூமில் உள்ள வாளி அல்லது டப் தண்ணீரில் மோதிர விரலால் ஓம் என்று எழுதி புனித நதிகளின் பெயர்களை சொல்லி இஷ்ட, குல தெய்வங்களை வணங்கி, இந்த நீர் எனது உடல் அழுக்கைப் போக்குவதுடன், மன அழுக்குகளையும் போக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்த பிறகே குளிக்க வேண்டும். மூக்கைப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் மூழ்கும் போது சில விநாடிகள் சொல்லும் மந்திரம் எல்லாம் கூட இருந்தது. திருஞானசம்பந்தப் பெருமானின் தந்தை சிவபாத இருதயர் அப்படி மந்திரம் சொல்லும் போதுதான் சம்பந்தர் தந்தையைக் காணாமல் அழுதார். அவசரப் போக்கில் தலைக்கே குளிக்காமல்... அதற்கே நாம் தலை முழுகிவிட்டோமோ.... குளிக்கின்றோம் நாம். குளிப்பதற்கென்றே நேரம் ஒதுக்க வேண்டும். குளித்த பின்னர் முதலில் முதுகுப் பகுதியைத் தான் துடைக்க வேண்டும். தயவு செய்து அடுத்த தலைமுறைக்குச் சொல்லித் தருவோம். முதுகினை முதலில் துடைப்பதன் மூலமாக நவக்ரஹ தோஷங்கள் நீங்கும் என்பது நமது முன்னோர்கள் தந்த செய்தி. நதிகள், ஊருணிகள் வெறும் நீர்நிலை அல்ல. அவைகள் கடவுளின் அருட்பெருக்கை நமக்கு அள்ளித் தருவன. பகீரதன் பெரும் முயற்சி செய்து வான் கங்கையை மண்ணிற்குக் கொண்டு வந்தான். அதனால் தான் இன்றும் அரிதான செயல்களுக்கு பகீரதப் பிரயத்தனம் என்று சொல்கின்றோம். எல்லா நதிகளும் புனிதமானவை. மேம்போக்காக அவற்றை அழுக்கு எனச் சொல்லி ஹைஜீன் என்ற காரணம் சொல்லி ஒதுக்கிவிட்டோம். ஆராய்ச்சியாளர்கள் கங்கையின் புனிதத்தைக் கண்டு வியக்கின்றார்கள். நம்பிக்கையுடன் குளிப்பவர்களுக்கு சகல பாவங்களும் தீர்கின்றன. ஒருமுறை பரமசிவனாரும், பார்வதி தேவியும் வயதானவர்கள் போல் வேடமிட்டு கங்கைக் கரை வந்தனர். இங்கு குளிப்பவரின் பாவமெல்லாம் நீங்கி விடுமா என்று ஒருவன் கேட்க, தேவி நம்பிக்கையுடன் குளித்தால் பாவம் நீங்கும் எனக் கூறினாள். அதனை உலகிற்கு உணர்த்தவே வயோதிகராக இருந்த சிவன் உடல்நலக் குறைவாக கை, கால்களை ஆட்டிக் கொண்டு அவதிப்பட்டார். எல்லோரும் உதவ முன் வந்தார்கள். ஆனால், தேவியோ என் கணவரைத் தொடுவதானால் பாவமற்றவராக ஒருவர் இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர் தொட்டால், தொடுபவர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் என்றாள். உடனே எல்லோரும் பின் வாங்கினார்கள். அப்போது தான் அவர்கள் கங்கையில் மூழ்கி வந்தவர்களாக இருந்தனர். நம்பிக்கையில்லை. ஆனால் ஒரு இளைஞர் முன் வந்தான். கங்கை ஆற்றிலே குதித்தான். மனமுருக வேண்டிக் குளித்தான். வெளியே வந்தான். முதியவரைத் தொட்டுத் துாக்கி முதலுதவிகள் செய்தான். எல்லோரும் வியந்தார்கள். அவன் உரக்கச் சொன்னான் கங்கையில் மூழ்கினால் தான் சகல பாவங்களும் தீர்ந்து விடுமே என்று. சிவனும், பார்வதியும் காட்சி தந்து சொன்னார்கள். யார் நம்பிக்கையுடன் கங்கையில் நீராடுகின்றார்களோ, அவர்களின் பாவங்கள் நிச்சயம் போய்விடும் என்றருளினார்கள். கங்கை மட்டுமல்ல, காவிரி, வைகை, தாமிர வருணி, யமுனை, கோதாவரி எனச் சொல்லிக் கொண்டே போகலாம். நதிகள் மட்டுமல்ல. நமது தமிழகத்தின் ஒவ்வொரு தலத்திலுள்ள ஊருணிகளும் புனிதமானவைதான். மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய்த் தொடங்கினவர்க்கு என்பார் தாயுமானவர். தலம் எவ்வளவு உயர்ந்ததோ, அங்குள்ள சுவாமி எத்தனை கீர்த்தி மிக்கவரோ அதுபோலத் தான் அங்குள்ள தீர்த்தமும் புனிதமானது. கோயில்கள் எல்லாம் வியாபார ஸ்தலமான சூழலில் தீர்த்தங்கள் காணாமல் போயின. லாட்ஜில் ரூம் போட்டுக் குளித்துவிட்டுப் போகின்றோம். சட்டப்படி ஒரு தலத்திற்குச் சென்றால், அந்தத் தலத்தில் ஓரிரவு தங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கிய பிறகே, சுவாமியை தரிசிக்க வேண்டும். ஒவ்வொரு தலத்திலுள்ள தீர்த்தக்குளமும் வரலாற்றுச் சிறப்புடையதாகும். சகல நோய்களையும் போக்கும் வல்லமை நிறைந்தது வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள சித்தாமிர்தத் தீர்த்தம். அதில் இன்றும் நம்பிக்கையுடன் மூழ்கி எழுபவர்களுக்கு நோய்கள் மட்டுமல்ல வினைகளும் தீர்ந்துவிடும். திருக்கானப்பேர் எனும் காளையார்கோவில் பாண்டிய மன்னர் வீரசேனன் என்பவன் தனது மனைவி சோபனாங்கியுடன் தரிசனம் செய்ய வந்தான். அங்கே உள்ள ருத்ர தீர்த்தத்தின் பெருமையை கேட்டு, உணர்ந்து தனது மனைவியுடன் நீராடச் சென்றான். வீரசேனனுக்கு குழந்தைப் பேறு இல்லாமையால் பெரியோர் ஆலோசனைப்படி தங்கத்தினால் ஆன ஒரு குழந்தைப் பதுமையை தன் மனைவியின் மனமகிழ்ச்சிக்காக கூடவே வைத்திருந்தான். வீரசேன பாண்டியன் தனது மனைவியுடனும், தங்கக் குழந்தையுடன் மூழ்கி எழுந்தான். அசரிரீயாக தங்கப் பதுமையை உள்ளேயே விடு என்றார் சிவன். பாண்டிய மன்னன் பதுமையை விட்டதும், நான்கு வயது பாலகனாக தங்கப் பதுமையில் இருந்து மைந்தன் வெளியே வந்தான். திருக்கானபேர் காளீஸ்வரர் அருளால் நடந்த இந்த அதிசயத்தை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தில்லையிலே வாழ்ந்தவர் திருநீலகண்ட நாயனார். அவருக்கும், அவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிணக்கில் மனைவியோ ‘தீண்டுவீராயின் எம்மைத் திருநீல கண்டம்’ என்று சூளுரைத்தான். அன்று முதல் எந்த மாதரையும் மனதில் தீண்டாதது மட்டுமல்லாமல், மனைவியும், கணவனும் ஒருவரை ஒருவர் தீண்டாமல் நீண்ட காலம் கழித்தனர். ஒரு திருவோட்டினை முன்னிட்டு சிவன் இவர்களை திருப்புலீச்சரம் கோயிலின் முன்பு உள்ள குளத்தில் மூழ்கி எழச் செய்தார். இருவரும் மூழ்கி எழுந்தபோது இளமையாக எழுந்தார்கள். அதனால் அக்கோயில் இளமையாக்கினார் கோயில் என பெயர் பெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், திருவெற்றியூரில் உள்ள வாசுகி தீர்த்தத்தில் இன்றும் நீராடி பக்தர்கள் நோய் நீங்கப் பெறுகிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம். சனி நீராடு என்றால் குளிர்ந்த நீரில் நீராடு என்றும் பொருளுண்டு. சனிக்கிழமை தோறும் என்னை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்ற பொருளும் உண்டு என்பார்கள். புதன்கிழமை, சனிக்கிழமை ஆண்களும், வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை பெண்களும் எண்ணை தேய்த்துக் குளிக்கும் மரபு உண்டு. ஆனால் கடந்த இரண்டு தலைமுறைகளாக மாற்று மருத்துவத்தால் நாம் இந்தப் பொக்கிஷத்தை இழந்திருக்கின்றோம் என்றே சொல்ல வேண்டும். நம் நாடு உஷ்ணப் பிரதேசம். இங்கு வசிக்கும் நமக்கு உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது கடமையாகிறது. குளிர்ப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மருத்துவக் கல்விக்கு எண்ணெய் தேய்த்து உடலைக் குளிர்வித்து கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஆனால் நமக்கோ உடலின் வெப்பத்தைச் சமநிலையில் வைத்துக் கொள்ள எண்ணைக் குளியல் அவசியம். சதுர்நாட்கொருக்கால் நெய்முழுக்கைத் தவிரோம் என்பது நமது பழமொழி. கோடைக் காலங்களில் வாரம் இருமுறையும், குளிர்காலங்களில் வாரம் ஒருமுறையும் குளிப்பது பழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது தீபாவளியன்று மட்டும் கொஞ்சம் தலையில் சாஸ்திரத்திற்காக வைத்துக் கொள்கிறோம். ஆனால் உடல் முழுவதும் நல்ல எண்ணெய்யைத் தடவிக் கொண்டு அரை மணி நேரம் கழித்து சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும். குளித்த அன்று உடலின் வெப்பம் கண் வழியே வெளியேறுவதால் பகலில் துாக்கத்தைத் தவிர்க்க வேண்டும். மேலும் அசைவ உணவு, பழங்கள், மோர், தயிர், குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பொருட்களையும் தவிர்ப்பது நலம். எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலமாக வியர்வைச் சுரப்பிகள் துாய்மை பெறுவதுடன், நிணநீரின் செயல்பாடும் துாண்டப் பெறுகிறது என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் உடல் வறட்சி, தோல் நோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தடுக்கப்படுகிறது. குறிப்பாக பித்த உடம்புக்காரர்களுக்கு மிகவும் நல்லது. கப உடல் உள்ளவர்களுக்கு கபத்தினால் வரும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. பாட்டி சொல்லைத் தட்டாதே என்னும் பழமொழியை உணர்ந்து கேட்போம். பயன்பெற்று நலமாக வாழ்வோம்.
|
|
|
|