|
முருக பக்தரான கண்ணப்பன் சித்த வைத்தியராக இருந்தார். காஞ்சி மஹாபெரியவர் தேனம்பாக்கத்தில் ஒருமுறை முகாமிட்டிருந்த போது, ‘நடமாடும் தெய்வமான காஞ்சி மஹாபெரியவரை நேரில் தரிசிப்பது புண்ணியம்’ என பக்தர்கள் சிலர் சொல்லக் கேட்டார். உடனடியாக தேனம்பாக்கம் புறப்பட்டார். அங்குள்ள கிணற்றின் அருகே காவி உடுத்திய முனிவராக அமர்ந்திருந்த மஹாபெரியவரை கண் இமைக்காமல் பார்த்தபடி நின்றார். திடீரென மஹாபெரியவர் கை நீட்டி வைத்தியரைச் சுட்டிக் காட்டவே, பக்தர்கள் விலகி வழிவிட்டனர். அருகில் சென்றதும்,‘‘ நீங்கள் சித்த வைத்தியர் தானே... ஏன் தொழிலை கைவிட்டு விட்டீர்கள். தொடர்ந்து செய்யுங்கள்’’ என்றார். ‘இதற்கு முன்பு பார்த்திராத பெரியவர் இப்படி கேட்கிறாரே...’ என ஆச்சரியப்பட்டார். காவியுடையில் இருப்பவர் முருகப்பெருமானே என்று எண்ணி மகிழ்ந்தார். குடும்பச் சூழல் காரணமாக கைவிட்ட தொழிலை மீண்டும் தொடங்க முன்வந்தார். ஒருநாள் காலையில் மடத்திலுள்ள தொண்டர் ஒருவர் தொலைபேசியில், ‘‘பெரியவாளுக்கு உடல்நலம் இல்லை. காஞ்சி மடத்திற்கு வாருங்கள்’’ என்றார். வைத்தியரும் மஹா பெரியவரைச் சோதித்து மருந்து கொடுத்தார். மறுநாள் சென்ற போது, ‘‘நேத்து கொடுத்த மருந்தில உடம்பு சவுக்கியமாயிடுத்து’’ என திருவாய் மலர்ந்தார் மஹாபெரியவர். ‘மனிதனாகப் பிறந்த பயனை அடைந்தேன்’’ என வைத்தியர் கண்ணீர் சிந்தினார். வைத்தியர் ஒருமுறை மடத்தில் இருந்த நேரத்தில், காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில் அர்ச்சகர் வந்தார். கோயிலில் சுவாமிக்கு நைவேத்யம் செய்த மாம்பழம் ஒன்றை மஹாபெரியவருக்கு சமர்ப்பித்தார் அவர். அந்த பழம் தனக்கு கிடைக்காதா என எண்ணிக் கொண்டார் வைத்தியர். அப்போது மஹாபெரியவரை தரிசனம் செய்தவர்கள் புறப்படலாம்’ என அறிவிப்புடன் சன்னதிக்கு திரையிடப்பட்டது கிளம்ப மனமில்லாமல் வைத்தியர் அங்கேயே நின்றார். அப்போது மீண்டும் திரை விலக வைத்தியரின் கையில் பழம் விழுந்தது. கொடுத்தவர் சாட்சாத் காஞ்சி மஹாபெரியவர். இஷ்ட தெய்வமான முருகப்பெருமானே (மஹாபெரியவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுவாமிநாதன்) ஞானப்பழமான மாங்கனி கொடுத்தார் என வைத்தியர் மனம் நெகிழ்ந்தார்.
|
|
|
|