|
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் கலியர். இவர் வாழ்ந்த காலம் 8-ம் நூற்றாண்டு. இவர்,சென்னையில் உள்ள திருவெற்றியூரில் பிறந்தவர். செக்குத்தொழில் செய்து வந்தார். செல்வந்தராய் விளங்கியவர். சிறந்த சிவபக்தரான இவர் திருவெற்றியூர்க்கோயிலில் உள்ளும், புறமும் விளக்கேற்றும் தொண்டினை செய்து வந்தார். இவரின் பக்தியை சோதிக்க நினைத்தார் சிவபெருமான். ஆதலால் இவரின் பொருட்செல்வதை கரைக்க திருவிளையாடல் நிகழ்த்தினார். அதன்படி செல்வங்கள் யாவும் கரைந்தது. ஆனாலும் விளக்கேற்றும் தொண்டினை நிறுத்தவில்லை. தினமும் கூலி வேலைக்கு சென்று அந்த வருமானத்தைக் கொண்டு விளக்கேற்றினார். இப்படியே நாட்கள் கடந்தன, சில நேரங்களில் அந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் வீட்டில் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் விற்று அப்பணியை செய்து வந்தார். அவையும் தீர்ந்து போக தங்கி இருந்த வீட்டை விற்று தொடர்ந்து பணி செய்தார். ஒரு கட்டத்தில் சொத்துகள் யாவும் தீர்ந்த போக விற்பதற்கு எதுவும் இல்லை, எண்ணெய் வாங்கிவிளக்கெரிக்க பணமும் இல்லை. இதனால் தன்னுடைய மனைவியுடன் சன்னதிக்கு சென்றார். அங்கு, நான் செய்யும் இந்த விளக்கேற்றும் பணி நின்றுவிட்டால் என் உயிரையே மாய்த்துக்கொள்வேன் என புலம்பினார். விளக்குகளில் எண்ணெய் குறைந்து தீபம் நிற்கப்படுமாயின் என் ரத்தத்தை கொண்டு விளக்கேற்றுவேன் என்று நினைத்தவாறு கழுத்தினை அறுக்க முற்பட்டார். அப்போது அவரின் கையை சிவபெருமான் கரம் பிடித்து ஆட்கொண்டது. கோவிலில் இருந்த விளக்குகள் அனைத்திலும் எண்ணெய் நிரம்பி, விளக்குகள் பிரகாசமானது. காட்சி கொடுத்த சிவபெருமானை வணங்கினார் கலியர். எவ்வளவு துன்பம் வந்தாலும் அவற்றை கடந்து தொண்டு செய்ய வேண்டும். உண்மையான பக்திக்கு சிவபெருமான் நிச்சயம் அருள்புரிவார் என்பது கலியர் உணர்த்தும் பாடமாகும்.
|
|
|
|