|
படிப்பு, பணம் என்னும் இருவருக்குள் ஒருமுறை சண்டை மூண்டது. ‘‘ பக்தன் ஒருவன் சுவாமியை தரிசிக்க சென்றாலும் என் தயவில்லாமல் அர்ச்சனைக்கு தேங்காய், பழம் வாங்க முடியுமா? இல்லை பொழுதுபோக்காக திரைப்படத்திற்குச் சென்றாலும் பணம் தானே அவசியம். பணம் இல்லாதவன் பிணத்திற்குச் சமமாவான்’’ என்றது பணம். இதைக் கேட்டதும் படிப்பு, ‘‘அறிவு இல்லாதவனிடம் பணம் எவ்வளவு இருந்தும் பயனில்லை. பணத்தை ஆக்க வழியில் செலவழிக்க என் கருணை அவசியம்’’ என்றது. இருவரும் துறவி ஒருவரின் உதவியை நாடினர். ‘‘எங்களுக்குள் சிறந்தவர் யார் என்பதை தெரிவியுங்கள்’’ எனக் கேட்டனர். ‘‘கண்களில் சிறந்தது வலக்கண்ணா இடக்கண்ணா எனக் கேட்டால் அது சரியா... அது போலத் தான் இருவரும் சண்டையிடுகிறீர்கள். படிப்பும், பணமும் சமம். இரண்டையும் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அழிவில் தள்ளி விடும். மனிதன் முழுமை பெற பணம், படிப்பு அவசியமானவை’’ என விளக்கினார் துறவி. அதைக் கேட்டு, ‘சரியான தீர்ப்பு’ என்று சொல்லி ஒருவருக்கொருவர் கைகொடுத்து மகிழ்ந்தனர்.
|
|
|
|