|
மகந்தன் என்ற வியாபாரி கெட்ட எண்ணம் கொண்டவனாக இருந்தான். தர்மம் செய்யும் எண்ணம் துளியும் அவனுக்கு கிடையாது. ஆனால் தன் சுகத்துக்கு தாராளமாக செலவிடுவான். வணிக விஷயமாக வெளியூருக்கு வண்டியில் செல்வான். செல்லும் வழியில் உள்ள விநாயகரை தவறாமல் வழிபடுவான். ஒருமுறை அவன், “அப்பனே விநாயகா! உனக்கு சதுர்த்தி தோறும் நுாறு தேங்காய் உடைக்கிறேன். எனக்கு பெரும் பணம் கிடைக்கச் செய்வாய்” என பேரம் பேசினான். விநாயகர் அவனுக்கு புத்தி புகட்ட முடிவு செய்தார். அந்தக் கோயில் வாசலில் பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மனைவி, குழந்தைகள் உண்டு. அவன் அன்று விநாயகரிடம், “எந்த பிறவியில் என்ன பாவம் செய்தேனோ தெரியலையே! கை, கால்களை இழந்து பிச்சை எடுக்கிறேன். என் பாவங்களை மன்னித்து நல்வழி காட்டு” என கண்ணீருடன் பிரார்த்தித்தான். ஏழையின் கண்ணீர் விநாயகரின் மனதைக் கரைத்தது. மறுநாள் வியாபாரி கோயிலுக்கு வந்தான். அப்போது அவன் காதில் மட்டும் விழும்படியாக அசரீரி ஒலித்தது. “நான் தான்... விநாயகப்பெருமான் பேசுகிறேன். அதோ... அங்கு அமர்ந்திருக்கிறானே பிச்சைக்காரன்... அவனுக்கு இன்று மாலைக்குள் நுாறு பொற்காசுகள் உள்ள முடிப்பு கிடைக்கப் போகிறது” என்றது அக்குரல். வியாபாரிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அந்த பொன்முடிப்பை அபகரிக்க திட்டமிட்டான். வேகமாக பிச்சைக்காரனிடம், “ஏனப்பா! பக்தர்கள் சாதாரண நாணயங்களைத் தான் உனக்கு பிச்சையிடுகிறார்கள். ஆனால் நான் உனக்கு பொற்காசு தருகிறேன். ஆனால் இன்று மாலை வரையும் உனக்கு கிடைக்கும் வருமானத்தை எனக்கு தந்து விடு” என்றான். பிச்சைக்காரனுக்கு சந்தோஷம். “மாலை வரை பார்த்தாலும் நுாறு ரூபாய் தேறும் அளவுக்கு சில்லறைகள் தான் விழும். இவனோ தங்கக்காசு தருகிறேன் என்கிறான். ஆஹா... இதைக் கொண்டு சுகமாக வாழலாம்” என கற்பனையில் ஆழ்ந்தான். வாக்களித்த படி வியாபாரி பொற்காசு ஒன்றை பிச்சையிட்டு காத்திருந்தான். மாலை நேரம் நெருங்கியது. ஆனால் பிச்சைக்காரனுக்கு பொன்முடிப்பு ஏதும் கிடைக்கவில்லை. கோபத்துடன் விநாயகர் அருகில் சென்ற வியாபாரி, ‘‘விநாயகா... ஏமாற்றி விட்டாயே” என்று சொல்லி சுவாமியை அடிப்பது போல கையை ஓங்கினான். தும்பிக்கையால் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தார் விநாயகர். மற்ற பக்தர்களின் கண்ணுக்கு அது தெரியவில்லை. வலி தாளாமல் அழுத அவனைப் பார்த்தவர்கள் அழுது கொண்டே வழிபடுவதாக நினைத்தனர். ‘‘நுாறு பொற்காசுகள் உள்ள பொன்முடிப்பை பிச்சைக்காரனுக்கு இன்று நீ கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கொன்று விடுவேன்” என்றார் விநாயகர். தண்டனையில் இருந்து தப்பிக்க பொன்முடிப்பை கொடுத்து விட்டு புறப்பட்டான் மகந்தன். பணக்காரனாக வாழ ஆசைப்படுவதில் தவறில்லை. அது சுயஉழைப்பின் மூலம் அடைய முயற்சிக்க வேண்டுமே தவிர பேராசைப்பட்டால் இதுதான் கதி.
|
|
|
|