|
நரேந்திரன் என்னும் மன்னர் நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தார். என்னதான் மன்னராக இருந்தாலும் அனைத்தையும் அவரால் பார்க்க முடியாது அல்லவா... எனவே பொறுப்புகளை தனது மந்திரிகளுக்கு பகிர்ந்து கொடுத்திருந்தார். அந்த மந்திரிகளில் ஒருவருக்கு, மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் ஒருநாள் பாடசாலை ஒன்றிற்கு சென்றார். அப்போது அந்த பாடசாலையை நடத்துபவர், ‘‘மந்திரியாரே! பாடசாலையின் கூரை சேதமடைந்து உள்ளதால், மழை பெய்யும் போது அங்கங்கே ஒழுகுகிறது. மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அதை சரிசெய்து கொடுத்தால் உதவியாக இருக்கும்’’ என்றார். அதற்கு அவர், ‘‘மன்னரிடம் சொல்கிறேன்’’ என்று கூறினார். அடுத்து சிறைச்சாலையை பார்வையிட சென்றார். பாடசாலையை விட இதன் கட்டமைப்பு நன்றாக இருந்தது. ஆனாலும் தன்னுடன் வந்த அதிகாரியிடம், ‘சிறைச்சாலைக்கு வசதிகள் செய்து தர வேண்டும்’ என மன்னருக்கு ஓலை அனுப்பச் சொன்னார். சுற்றும் முற்றும் பார்த்த அவரோ, ‘‘மந்திரியாரே! ஐந்து வருடத்திற்கு முன்புதானே சிறைச்சாலையின் கட்டமைப்பை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தினோம். ஆனால் பாடசாலைக்கு கூரை அமைத்து பல வருடங்கள் ஆகிவிட்டதே. அதைப்பற்றி ஓலையில் எழுத சொல்லவில்லையே ஏன்?’’ எனக்கேட்டார். ‘‘நான் எதிர்காலத்தில் பாடசாலைக்கு படிக்க செல்வேனா... இல்லை... ஆனால் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது. என்றாவது ஒருநாள் நான் செய்யும் ஊழல் மன்னருக்கு தெரிந்துவிடும். அப்போது என்னால் எதுவும் செய்ய இயலாது. எனவே நான் செல்லவிருக்கும் இடத்தை மேம்படுத்திக்கொள்வது சரிதானே!’’ என்றார். பார்த்தீர்களா... அந்தக்காலத்திலும் சரி. இந்தக்காலத்திலும் சரி. நாட்டை ஆள்பவர் நேர்மையாக இருந்தாலும், அவரது ஆட்சிக்கு உட்பட்டு குறிப்பிட்ட பகுதியை நிர்வகிப்பவர் இப்படித்தான் உள்ளார். இதற்கு எப்போதுதான் விடியல் வருமோ?
|
|
|
|