|
ஆயிரக்கணக்கில் வானரப் படைகள் வந்து குவிந்து விட்டன. அவர்கள் அனைவருக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான் சுக்ரீவன். சீதையின் நகைகளைக் கண்டெடுத்த இடத்தை ஓர் ஊகமாக வைத்துப் பார்த்தால், அவள் தென்திசை நோக்கிக் கடத்திச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது. அத்திசையில் எப்பகுதியில் ராவணன் சீதையை ஒளித்து வைத்திருக்கிறான் என்பது கண்டறியப்பட வேண்டும். ஆகவே அவர்கள் பகுதி பகுதியாகப் பிரிந்து தேடல் பணியை மேற்கொண்டார்கள். சுக்ரீவன் தன் பிரதான தளபதிகளுக்கு விதவிதமான ஆணைகள் பிறப்பித்தான். வினதன் என்ற சேனாதிபதியை அழைத்து, ‘ உன் படையினருடன் கிழக்கு திசை நோக்கிச் செல்’ என்று பணித்தான். அதேபோல அங்கதன், நீலன், ஜாம்பவான் மற்றும் அனுமன் குழுவினரை தென் திசை நோக்கிச் செல்லுமாறு கட்டளையிட்டான். தாரையின் தந்தையான சுஷேணனிடம் பராக்கிரமம் மிக்க பல வீரர்களை அழைத்துக் கொண்டு மேற்கு நோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான். சதபலி என்ற இன்னொரு தளபதியை வடதிசை நோக்கிச் செல்லுமாறு ஆணையிட்டான். இவ்வாறு நான்கு திசைகளிலும் வீரர்களை அவர்களுக்கென்று தலைவர்களோடு அனுப்பிய அவன் அவ்வாறு அவர்கள் செல்லும் திசைகளில் உள்ள நகரங்கள், நதிகள், மலைகள் எல்லாவற்றையும் நுணுக்கமாகக் குறிப்பிட்டுச் சொன்னான். இந்த ஏற்பாட்டைக் கண்டு பெரிதும் திகைத்தனர் ராம, லட்சுமணர். ஒவ்வொரு திசைக்கும் வீரர்களை அனுப்பியது சரி, ஆனால் அங்கிருக்கும் எல்லா இடங்களையும், ஒன்று விடாமல் மிக கவனமாகக் குறிப்பிட்ட அவனுடைய அறிவாற்றல் அவர்களை வியக்க வைத்தது. ‘இது எப்படி சாத்தியமாயிற்று?’ என்று அவனைக் கேட்டார்கள். ‘தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்பதுபோல என்னை எல்லா திக்குகளிலும் துரத்தித் துரத்தி அடித்த வாலிதான் காரணம். அவன் அவ்வாறு செய்யவில்லை என்றால் என்னால் இத்தனை ஊர்களை, இத்தனை பகுதிகளைப் பார்த்திருக்கவே முடியாது, அவற்றை மிகத் துல்லியமாக நினைவு கொண்டிருந்திருக்கவும் முடியாது’ என்று தன் வேதனை அனுபவம் மூலம் அறிவு வளர்ந்த விதத்தைச் சொன்னான் சுக்ரீவன். ராமன் அவனை வாயாரப் புகழ்ந்தான். இத்தகையவனிடம் அனுமன் மட்டுமல்ல, அறிவுசால் ஆன்றோர்களும் விரும்பி இணைந்து பணியாற்ற விரும்புவார்கள் என்றும் நினைத்துக் கொண்டான். சுக்ரீவனின் ஏற்பாடுகளால் மனம் தெளிந்தான் ராமன். ஆனாலும் தனிப்பட்ட முறையில் அனுமன் மீதான நம்பிக்கை அவனுக்கு வலுப்பெற்றிருந்தது. முதல் சந்திப்பு முதல் இப்போதுவரை அவனது பணிவு, அடக்கம் மிகுந்த பராக்கிரமம், நிதானம், உறுதியுடன் பேசும் பாங்கு எல்லாம் அவன் எதையும் சாதிக்க வல்லவன் என்ற உறுதியை ராமனுக்குள் வளர்த்தது. அனுமன் எப்போதுமே தர்மத்தின் பக்கம் நிற்பவன். அவனுக்குப் பதவியில் எல்லாம் ஆசை இல்லை. அப்படி இருந்திருந்தால் சுக்ரீவனைவிட பலசாலியான வாலியிடம் போய்ச் சேர்ந்திருப்பான். சுக்ரீவனிடம் அனுசரணையாக இருந்த காலத்திலும் அவன் எந்தப் பதவியையும் கோராமலேயே தன் சேவையை ஆற்றினான். இதற்கு முக்கிய காரணம், அவன் தாயார் அஞ்சனாதேவி அவனை நேராக சுக்ரீவனிடம் கொண்டு சேர்த்ததுதான். இவனே சீதையைக் கண்டுபிடிக்க வல்லவன் என்ற அதீத நம்பிக்கையும் ஏற்பட்டது ராமனுக்கு. ஒருவேளை அவளை அவன் சந்திப்பானானால் ராம துாதுவன் என்ற முறையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அனுமனை தயார் செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டான். ஆகவே அனுமனிடம் சீதையுடனான தன் அந்தரங்க சம்பவங்கள் சிலவற்றைக் கூறினான். அதோடு தான் அணிந்திருந்த கணையாழியைக் கழற்றி அவனிடம் கொடுத்தான். ‘நீ என்னால் அனுப்பப்பட்டவன் என்பதற்கு இதுதான் பிரதான அத்தாட்சி’ என்று விளக்கினான். இரு கரம் தாழ்த்தி நீட்டி, அந்தக் கணையாழியை அனுமன் வாங்கிக் கொண்டபோதே சீதையைப் பார்த்துவிட்ட மன நிம்மதிக்கு ஆளானான் ராமன். திசையெங்கும் வீரர்கள் படை படையாகப் புறப்பட்டுச் சென்றனர். அவ்வாறே தென் திசைக்குழுவும் தன் பயணத்தை மேற்கொண்டது. அங்கதன் தலைமையில் சென்ற அவர்கள் வழியில் பல இடையூறுகளை சந்தித்தார்கள். பாலைவனமாக மாறிவிட்ட கண்டு என்னும் மகரிஷியின் காடு, மலைபோல நெடிதுயர்ந்த அரக்கன், ரிஷி பிலம் என்னும் குகை என அவர்கள் பல தடைகளை கடந்து கடற்கரைப் பகுதிக்கு வந்தார்கள். மறுகரையே காண இயலாத அந்த நெடிய கடற்பரப்பு அவர்களை திகைப்பாலும், அயர்ச்சியாலும் அப்படியே ஸ்தம்பிக்க வைத்தது. ஏரியைக் கடக்கலாம், ஆற்றைக் கடக்கலாம், இந்தக் கடலை எப்படிக் கடப்பது? ‘தெய்வத்தாலும் ஆகுமோ‘ என்ற அச்சம் அவர்களுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அப்போது குழுவிலிருந்த ஜாம்பவான் முன்னே வந்தான். ‘இதனை இவன் முடிக்கும்’ என்று அனுமனைச் சுட்டிக் காட்டினான். அனைவரும் ஆச்சரியத்துடன் அனுமனைப் பார்த்தார்கள். ஜாம்பவான் தொடர்ந்தான்: ‘அனுமன், பாலகனாக இருந்தபோதே பராக்கிரமசாலியாகத் திகழ்ந்தான். ஒரு மாலைப் பொழுதில் அஸ்தமிக்கும் சூரியனை வான மரத்தில் பழுத்திருக்கும் சிவந்த பழம் என்றே கருதி, உடனே அதைப் பறிக்க விண்ணோக்கிப் பாய்ந்தவன் அவன்! அது மட்டுமல்ல, சிறுவனாக இருந்தபோது பருத்து உயர்ந்திருந்த மரங்களை அனாயசமாகப் வேரோடு பிடுங்கி எறிவான். உடனிருக்கும் நண்பர்களை உற்சாகப்படுத்த, அவன் பலம் கண்டு ஆரவாரிக்கும் அவர்களின் பாராட்டைப் பெற, அவன் அடிக்கடி இந்த வீர சாகசத்தைச் செய்தான். அவன் அவ்வாறு எறியும் மரங்கள் வெகு தொலைவில் தவம் மேற்கொண்டிருந்த முனிவர்களின் ஆசிரமத்தில் போய் போய் விழுந்தன. இப்படி திடீர், திடீரென்று வானத்திலிருந்து மர மழை பொழிவதைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டார்கள். ஏதோ அசுரனின் அட்டகாசமோ என்று நினைத்து கலங்கினார்கள். ஆனால் அவ்வாறு செய்தது அனுமன் என்று அறிந்த அவர்கள், பெரிதும் கவலை கொண்டார்கள். அதாவது இப்போதே இவ்வளவு பலசாலியாக இருக்கிறானே, இவன் வளர்ந்து, வாலிபனாக மாறும்போது இவனால் இந்த சமுதாயத்துக்கு தீங்கு நேரிடுமோ என்று பயந்தார்கள். உடனே அவனுக்குத் தன் உண்மையான பலம் தெரியாமலேயே போகட்டும் என்று சபித்து விட்டார்கள். இதை அறிந்த அனுமனின் தாயாரான அஞ்சனாதேவி ஓடோடி வந்து முனிவர்களின் காலில் விழுந்து சிறுவன் அறியாமல் செய்ததை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டாள். அவர்களும் மனம் அமைதியாகி, ‘நாங்கள் விடுத்த சாபம் விடுத்ததுதான். ஆனால் மிக முக்கியமான கட்டத்தில் இவனுக்கு யாரேனும் இவனுடைய பலத்தை உணர்த்தினார்களானால் இவன் அந்த பலத்தால் தீவினைகளை அழிக்கும் ஆற்றல் பெறுவான்’ என்று ஆறுதல் பரிகாரமும் அருளினார்கள். அந்த அனுமனால், இந்த இக்கட்டான தருணத்தில், இந்தப் பெருங்கடலை அப்படியே தாண்ட முடியும்’ என ஜாம்பவான் சொன்னதைக் கேட்டதும் அனைவரும் குதுாகலித்தார்கள். விரிந்த விழிகளுடன் அனுமனைப் பார்த்தார்கள். அவன் மெல்ல தன் கண்களை மூடினான். பளிச்சென்று மனதிற்குள் ராமன் தோன்றினான். உடலே சிலிர்த்தது அவனுக்கு. ராமனை தியானம் செய்தான். அப்போதே அவன் உடல் பிரமாண்டமாக வளர்ந்தது. உடனிருந்தவர்களும், சுற்றுச் சூழலும் அப்படியே கீழே, கீழே போக, இவன் வானோக்கி உயர்ந்தான். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற அவனுடைய மன ஒலி அப்படியே பிரபஞ்சமெங்கும் பரவி நிறைந்தது. இடையில் முடிந்து வைத்திருந்த, ராமன் கொடுத்த கணையாழி அவனுக்கு உறுதுணையாக இருந்தது. லேசாகக் கால்களை பூமியில் உந்தினான், அப்படியே ஜிவ்வென்று பறந்து மேகத் திரள்களிடையே மறைந்தான். அவனுடைய நிழல் கடல் பரப்பில் விழ, கடல்வாழ் உயிரினங்கள், பகலிலேயே இருள் சூழ்ந்துவிட்டதோ என்ற அதிசயத்தால் கலவரப்பட்டன. பறந்து சென்ற அவன் இலங்கை கடற்கரையைக் கண்டு, கீழிறங்கினான். சுவேல மலையின் உச்சியில் நின்றான். தன் உருவத்தைச் சுருக்கி இயல்பு தோற்றத்துக்கு மாறினான். அங்கிருந்தபடியே இலங்கை மாநகரைக் கண்ட அவன் ஆச்சரியத்தால் விழி விரித்தான். குதுாகலித்திருந்த வேளையில் இயற்கை உருவாக்கிய நகரமோ என்று வியந்தான். அத்தனை பசுமை, செழுமை, குளுமை, வளமை! இந்த நகரத்திலா அன்னையார் சிறைபட்டிருக்கிறார்? இரவு கவிந்தபின், அனுமன் ஒரு பூனை அளவுக்குத் தன்னைச் சுருக்கிக் கொண்டு இலங்கை நகருக்குள் நுழைந்தான்.
|
|
|
|