|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » பாடகரின் பார்வை |
|
பக்தி கதைகள்
|
|
அறையில் நுழைந்தவரைப் பார்த்து எழுந்து நின்று கைகூப்பினேன். பிரபலமான பாடகராயிற்றே! இவர் பச்சைப்புடவைக்க்காரியைப் பற்றிப் பாடினால் நாத்திகன்கூடக் கண் கலங்குவானே! இவர் ஏன் கசங்கிய ஆடை, கலங்கிய கண்களுடன் காலை வேளையில் என்னைப் பார்க்க வர வேண்டும்? “என் ஒரே பொண்ணு மாதங்கி திடீர்னு பித்துப் பிடிச்ச மாதிரி ஆயிட்டா சார். நடு ராத்திரில வீல்னு கத்தறா. சாமான்களை போட்டு உடைக்கறா. ஆஸ்பத்திரில சேத்திருக்கோம். ஏதோ பெரிய அதிர்ச்சினு டாக்டர் சொல்றாரு. எவனோ ஒரு ராட்சசன் தப்பா நடக்க முயற்சி பண்ணியிருக்கான். அந்த அதிர்ச்சில இப்படி ஆயிட்டா. பச்சைப்புடவைக்காரியப் பத்திப் எந்த நேரமும் பாடிக்கிட்டே இருந்ததுக்குக் கைமேல பலன் கெடைச்சிருக்கு. பச்சைப்புடவைக்காரிக்குக் கருணை காட்டறதுன்னா என்னன்னே தெரியாதோ?” அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அன்று மாலை அன்னையின் கோயிலுக்கு நடைப்பயணமாகக் கிளம்பினேன். தெருமுனையில் மாம்பழம் விற்கும் பெண் வழிமறித்தாள். அவளை முறைத்துப் பார்த்தேன். “வழிகாட்ட வந்தால் முறைக்கிறாயே!” பழக்காரி வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன். “பாடகரின் மகள் இருக்கும் மருத்துவமனைக்குப் போ. அவன் மகளைப் பார்க்காதே. பாடகனைப் பார்த்துப் பேசு” “என்ன பேசவேண்டும்?” “அந்தச் சமயத்தில் தானாகத் தெரியும்” ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு ஓடினேன். மகளின் அறைவாசலில் கவலையுடன் அமர்ந்திருந்தார் பாடகர். ஓடி வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார். அந்தக் கணத்தில் எல்லாம் தெரிந்தது. சற்றுத் தள்ளிப்போய் ஆளரவமில்லாத இடத்தில் அமர்ந்தோம். “தப்பு செய்யாதவங்களக் கொடூரமாத் தண்டிக்கறதே பச்சைப்புடவைக்காரியோட பொழுதுபோக்காயிருச்சே!” “ மூடுய்யா வாயை. செய்யறத எல்லாம் செஞ்சிட்டு எங்கம்மா மீது பழியப் போட்ட, அடிச்சே கொன்னுருவேன்” அதிர்ச்சியில் உறைந்தார் பாடகர். “அஞ்சு வருஷத்துக்கு முன்பு திவ்யான்னு ஒரு பொண்ணு உங்ககிட்ட பாட்டு கத்துக்க வந்துச்சில்ல? நல்ல எதிர்காலம் இருக்கு, ஸ்பெஷலா சொல்லித் தரேன்னு சொல்லி வீட்டுக்கு வரவழைச்சி யாரும் இல்லாத சமயத்துல அந்தப் பொண்ண... அந்தப் பொண்ண... கதறக் கதற…’’ தொண்டை அடைத்து வார்த்தைகள் வர சில நொடிகளாயிற்று. “அந்தப் பொண்ணுக்கு உங்க மகளவிட ரெண்டு வயசு குறைச்சல். அவள மகளாப் பாக்காம .ஒரு போகப்பொருளாப் பார்த்தீங்களே! என்ன பார்வையா உங்க பார்வை.. சே!” பல நிமிடங்களுக்குப் பின் பலவீனமாகக் கேட்டார் பாடகர். “என்ன பரிகாரம் செய்யணும்? தங்கத்தேர் இழுக்கட்டுமா? இல்ல, ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யட்டுமா?” “ஆமா, இருட்டுல காசத் தொலைச்சிட்டு வெளிச்சத்துல தேடுங்க. நீங்க கெடுத்த திவ்யா இப்போ பெரிய அதிர்ச்சில இருக்கா. அவ வீட்டுல கல்யாணத்துக்குப் பாத்துக்கிட்டிருக்காங்க. இந்த அதிர்ச்சியில திருமணம் செஞ்சிக்க முடியுமா, அப்படியே செஞ்சிக்கிட்டாலும் இயல்பான மணவாழ்க்கை அமையுமாங்கறது பெரிய கேள்வி” “நான் என்ன செய்யணும்?” “போய் திவ்யாவை பாருங்க. அவங்க அப்பா அம்மா கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க. அவளுடைய மனநல சிகிச்சைக்கு நெறையச் செலவாகும். மொத்தச் செலவயும் ஏத்துக்குங்க.” “இதெல்லாம் செஞ்சா என் பொண்ணு சரியாயிருவாளா?” “உத்தரவாதம் கொடுக்க முடியாது. முதல்ல உங்க பாவக் கணக்க நேர் செய்யுங்க. அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” அவர் பதிலுக்குக் காத்திருக்காமல் விடுவிடுவென வெளியேறினேன். ஒருமாதம் எந்த நிகழ்வும் இல்லாமல் ஓடியது. அலைபேசி ஒலித்தது. தெரியாத பெண் குரல். “நான் பாடகருடைய மனைவி பேசறேன். உடனே ஆஸ்பத்திரிக்கு வர முடியுமா?” “என்னாச்சு?” “நெறைய நடந்து போச்சு. வாங்க சொல்றேன்.” ஓடினேன். பாடகரின் மனைவி மருத்துவமனை வாசலில் காத்திருந்தாள். இரண்டாவது மாடியில் ஒரு அறையில் பாடகர் படுத்திருந்தார். அருகில் ஒரு அழகான பெண் அமர்ந்திருந்தாள். “”இது மாதங்கி. எங்களோட ஒரே பொண்ணு.” அவள் முகம் தெளிவாக இருந்தது. அழகாக வணக்கம் சொன்னாள். மனநிலை சரியில்லை என்றார்களே, இப்போது சரியாகி விட்டதோ? அப்போதுதான் படுத்திருந்த பாடகரைப் பார்த்தேன். கண்ணில் கட்டுப் போட்டிருந்தனர். பாடகரின் மனைவி நான் வந்திருப்பதைச் சொன்னாள். அடுத்த சில நொடிகளில் மனைவியும் மகளும் அறையை விட்டு வெளியேறினர். “”உங்க கையக் கொடுங்க. என்னால உங்களப் பாக்கமுடியாது.” அவர் கைகளைப் பற்றிக் கொண்டேன். பாடகர் பேசத் தொடங்கினார். “திவ்யாவப் போய்ப் பாத்தேன். அவ கால்லயும் அவளோட அப்பா அம்மா கால்லயும் விழுந்து மன்னிப்பு கேட்டேன். செஞ்ச தப்புக்குப் பரிகாரமா நங்கநல்லுார்ல இருக்கற என் பிளாட்ட திவ்யா பெருக்கு எழுதி வச்சிட்டேன். அவ சிகிச்சைக்கான செலவையும் ஏத்துக்கிட்டேன். சிகிச்சை நடந்துக்கிட்டிருக்கு. இன்னும் ஆறு மாசத்துல சரியாயிருவா. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு. “என் மனசு நிம்மதியாச்சு. என் மக கையப் பிடிச்சிக்கிட்டு உட்காந்திருந்தேன். திடீர்னு ரெண்டு கண்ணுலயும் சுரீர்னு ஒரு வலி. அம்மான்னு அலறினேன். என் பொண்ணும் அலறினா. எல்லாரும் ஓடி வந்தாங்க. பெரிய பெரிய டாக்டர் எல்லாம் பாத்தாங்க. என் ரெண்டு கண்லயும் பார்வை போயிருச்சின்னு சொல்லிட்டாங்க. “பச்சைப்புடவைக்காரி போடற கணக்குல ஒரு சின்னத் தப்புக் கூட இருக்காது. என் மக வயசுல இருந்த திவ்யாவ நான் மகளாப் பாக்கல. காமக்கண்ணோட பார்த்தேன். அதனால என் பார்வையையே பிடுங்கிட்டா பச்சப்புடவைக்காரி. கண் போனதுக்காக நான் வருத்தப்படல. இப்போ என் கண்ல பச்சைப்புடவைக்காரி மட்டும் தான் தெரியறா. அவள நெனச்சி உருகி உருகிப் பாடிக்கிட்டிருக்கேன். இது வரைக்கும் மத்தவங்களுக்காகப் பாடினேன். இப்போ அவளுக்காக மட்டும்தான் பாடறேன். இன்னொரு அதிசயமும் நடந்தது. திடீர்னு நான் அலறினது என் மகளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியமாப் அமைஞ்சிருச்சி. அவ சரியாயிட்டா. இனிமே அவ தாராளமாக் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு” அபிராமி அந்தாதியிருந்து இரண்டு வரிகளை மெல்லிய குரலில் பாடிக் காட்டினார் பாடகர். நான் அழுதே விட்டேன். அவர் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றினேன் விடைபெற்று வெளியே வந்து மருத்துவமனையின் வரவேற்பறையில் பிரமை பிடித்தவனைப் போல் அமர்ந்திருந்தேன். “யாரைப் பார்க்க வந்திருக்கீங்க” - அதட்டலாகக் கேள்வி கேட்ட அழகான பெண்மருத்துவரைப் பார்த்தேன். “பயந்து விட்டாயா என்ன? நான்தான்” பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன். “பாடகனை எப்படி தண்டித்தேன் பார்த்தாயா” “நீங்கள் எங்கே தண்டித்தீர்கள்? உங்களால் தண்டிக்கவே முடியாது. அன்பு காட்டத் தானே முடியும்” “என்னடா உளறுகிறாய்? நான் பராசக்தியடா. பத்ரகாளியடா. அத்துமீறுபவர்களை அடையாளம் தெரியாமல் அழித்து விடுவேன்” “வேறு யாரிடமாவது கதை சொல்லுங்கள். என்னிடம் வேண்டாம். பாடகரை மன்னித்து விட்டீர்கள்.” “அவனுடைய மகளுக்கு மனநோயைக் கொடுத்தேனே” “அது சரியாகி விட்டது. தற்காலிகத் தண்டனை” “பாடகனின் கண்களைப் பறித்துக் கொண்டேனே” “அவரைப் பொருத்தமட்டில் அது தண்டனையல்ல, வரம். இனி அவரால் மற்ற பெண்களை போகப்பொருட்களாகப் பார்க்க முடியாது. அதுபோக…’’ “அது போக...” “ ‘துணையும் தொழும் தெய்வமும்...’ என அவர் பாடிய போது அவரது மூடிய கண்களுக்குள் நீங்களே காட்சி தருகிறீர்கள் என்பது தெளிவாகப் புரிந்தது. அந்த வரிகளைக் கேட்டு எனக்கு அழுகை வந்துவிட்டது. இதே நிலையில் சில காலம் பாடகர் இருந்தால் இந்தப் பிறவியின் முடிவில் உங்களுடன் ஒன்றி விடுவார். தாயே, உங்களால் யாரையுமே தண்டிக்க முடியாது. மனதில் அன்பு இல்லாத நிலையில் சில மூடர்கள் உங்கள் அன்பையே தண்டனை என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்” அன்னை கலகலவென சிரித்தாள். என்னால்தான் அழுகையை அடக்கமுடியவில்லை.
|
|
|
|
|