|
அரசு பணியாளரான வைத்தியநாதன் டில்லியில் பணிபுரிந்தார். தினமும் 14 கி.மீ., துாரத்திலுள்ள அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்வார். ஒருநாள் அலுவலகத்தில் கணக்கு புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்த போது பார்வை மங்குவதை உணர்ந்தார். டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் பரிசோதித்தும் பலனில்லை. தன் சொந்த ஊரான சென்னைக்கு வந்தார். அங்குள்ள மருத்துவர் ஒருவரை சந்தித்தார். அதிலும் பலனில்லை. கடைசியாக மருத்துவர் பத்ரிநாத்திடம் சோதி்த்த போது, ‘போடோகொயாகுலேஷன்’ என்னும் குறைபாடு இருப்பதாகவும், ஆறு மாத சிகிச்சைக்குப் பின் ஆப்பரேஷன் செய்து ரெடினாவை மறைக்கும் திரவத்தை வற்றச் செய்தால் பிரச்னை தீரும் என்றார். உடனடியாக வெள்ளெழுத்து கண்ணாடியை அணியும்படியும் தெரிவித்தார். கண்ணாடிக்கு ஆர்டர் கொடுத்தார். மஹாபெரியவரின் பக்தர்களான அவரும், அவரது மனைவி பத்மாவும் தேனம்பாக்கம் மடத்திற்கு சென்றனர். மஹாசுவாமிகள் அழைத்தால் அன்றி அவர் அருகில் செல்வதில்லை என பிடிவாதமாக சற்று தள்ளி அமர்ந்திருந்தார். பக்தர்கள் அனைவரும் ஆசி பெற்று சென்றனர். இறுதியாக இவர்களுக்கும் ஆசியளித்து விட்டு மஹாசுவாமிகள் அவரது அறைக்குச் சென்றார். மறுநாள் புதிய கண்ணாடியுடன் மருத்துவர் பத்ரிநாத்தை சந்தித்தார். சோதனைப் பலகையில் உள்ள பொடி எழுத்தைக் கூட தடையின்றி படிக்க முடிந்தது. ‘கண்ணில் கசிந்த திரவம் எப்படி மறைந்ததோ... தெரியவில்லையே’’ என மருத்துவர் ஆச்சரியப்பட்டார். ‘நேற்று காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தேன்’ என பதிலளித்தார். ‘வைத்தீஸ்வரரான மஹாபெரியவரை தரிசித்த பிறகு மருத்துவம் எதற்கு’ எனக் கேட்டார் பத்ரிநாத். இதன்பின் மகிழ்ச்சியுடன் டில்லிக்கு புறப்பட்டார். கண்ணப்ப நாயனாருக்கு சிவபெருமான் கண் கொடுத்தது போல தனக்கும் மஹாபெரியவர் கண் கொடுத்த செய்தியை வார இதழ் ஒன்றுக்கு கட்டுரையாக எழுதி அனுப்பினார். சில நாட்களுக்கு பிறகு அக்கட்டுரை வெளியானது. அதை படித்த வைத்தியநாதன், ‘ஒருவேளை நம் பார்வை சிலநாட்கள் மங்கி மீண்டும் சரியானது சாதாரண நிகழ்வாக இருக்குமோ...’ என எண்ணினார். அந்த சமயத்தில் மீண்டும் பார்வை மங்குவது போல உணர்ந்தார். அதிர்ச்சியுடன், ‘தெய்வமே... என் அறியாமையை மன்னித்து விடுங்கள்’ என உருகி வேண்டினார். மீண்டும் புத்தகத்தில் மஹாபெரியவர் புன்சிரிப்புடன் காட்சியளித்தார். கண் கொடுத்த தெய்வத்தைச் சரணடைந்தார் வைத்தியநாதன்.
|
|
|
|