Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பரசியின் துயரம்
 
பக்தி கதைகள்
அன்பரசியின் துயரம்


என் அறையில் நுழைந்த பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கும். நல்ல உயரம். நல்ல நிறம். தோற்றத்தில் இயல்பான கம்பீரம்.
“நான் மாலதி”
இவள் வங்கியில் பெரிய பதவியில் இருக்கிறாள். இவளது கணவர் வருமானவரி துறையில் உயரதிகாரி. அவர் மும்பையில் இருக்கிறார். ஒரே மகளுக்குத் திருமணமாகி விட்டது. பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை. என்றாலும் இவள் முகத்தில் கவலை ரேகைகள்.
“என் மாமியார்தாங்க பிரச்னை. 97 வயசு. பத்து வருஷமா படுத்த படுக்கையாக் கெடக்காங்க. மூணு மாசமா பெட் சோர் வந்து முதுகெல்லாம் புண்ணாகியிருக்கு. எப்பவும் வலி வலின்னு முனங்குறாங்க. இந்த நிலையில மரணம் அவங்களுக்கு சொர்க்கமா இருக்கும்”
அதற்கு நான் என்ன செய்ய முடியும்?
“பச்சைப்புடவைக்காரிகிட்ட கேட்டு… .”
“அவ சொல்லலாம். நான் கேட்க முடியாது. நான்தாம்மா பச்சைப்புடவைக்காரியோட அடிமை. பிரார்த்தனை பண்ணுவோம். வழி தெரிஞ்சாக் கூப்பிடறேன்”
“சீக்கிரமாவே கூப்பிடுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு சார்”
எனக்கு நம்பிக்கை இல்லை. மாலதி சென்றுவிட்டாள்.
வழக்கமான பிரார்த்தனை தவிர மருத்துவ ஆலோசனை கேட்கலாம் என நண்பரின் மருத்துவமனைக்குச் சென்றேன். மாலதி தன் மாமியாரின் மருத்துவ விபரங்களை அனுப்பியிருந்தாள்.
காதும் காதும் வைத்தாற்போல் கருணைக்கொலை செய்ய வழி இருக்கிறதா என கேட்கும் அளவுக்கு யோசித்தேன்.
மருத்துவரின் அறையில் நண்பர் இல்லை. ஒரு பெண் மருத்துவர் கம்பீரமாக அமர்ந்திருந்தாள்.
“டாக்டர்… சுந்தரம்...’’
“உனக்கு வேண்டியது மாலதியின் பிரச்னைக்குத் தீர்வு. அதை யார் கொடுத்தால் என்ன?”
பச்சைப்புடவைக்காரியை அடையாளம் கண்டு விழுந்து வணங்கினேன்.
“கொஞ்சம் சிக்கலான கருமக் கணக்குப் பிரச்னை. உன் மூலம் முயன்று பார்க்கிறேன். நாளை பிற்பகல் மாலதியின் வீட்டிற்குப் போ. அவளுடன் பேசு. அந்தச் சமயத்தில் என்ன தோன்றுகிறதோ  அதை உடனே செயல்படுத்திவிடு.  அது எவ்வளவு கொடூரமாகத் தோன்றினாலும் உடனே செயல்படுத்து. வேறு வழியில்லை.”
அன்னை மறைந்துவிட்டாள்
மறுநாள் பிற்பகல் 12 மணியளவில் மாலதியுடன் அவளது பெரிய வீட்டில் இருந்தேன்.
மாலதியின் மாமியாரைச் சென்று பார்த்தோம். அந்த அறைக்குள் நுழைந்த போதே  துர்நாற்றம் வீசியது. கிழிந்த நாராகப் படுக்கையில் கிடந்த அந்த முதியவள் வலி தாளாமல் முனகினாள். லேசாகப் புரண்டு படுத்த போது முதுகில் பாளம் பாளமாக வெடித்திருப்பது தெரிந்தது. படுக்கையெல்லாம் ரத்தக்கறை.
மாலதியின் கண்களில் நீர். “எப்படி வாழ்ந்தவங்க தெரியுமா?”
அந்தக் கணத்தில் நடந்தது அனைத்தும் தெரிந்தது. மாலதியிடம் சைகை காட்டினேன். இருவரும் வெளியே வந்தோம்.  வேறு அறையில் அமர்ந்து கொண்டோம். மனதில் தோன்றியதை அப்படியே அவளிடம் சொன்னேன். அவள் கத்தினாள். கதறினாள்.
“இப்போதைக்கு இது ஒண்ணுதான் வழி. அப்புறம் உங்க இஷ்டம்.”
மாலதி மவுனமானாள்
“ஒரே ஒரு நிபந்தனை. இன்னிக்கு நீங்க என்கூடச் சாப்பிடணும். நீங்க சொன்னத நான் செய்யும்போது என் பக்கத்துல இருக்கணும்”
ஏற்றுக்கொண்டேன்.
சாப்பிட்டுவிட்டு மீண்டும் மாலதியின் மாமியாரின் அறைக்கு வந்தோம். இடைப்பட்ட நேரத்தில் மாலதி பல ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். என்னைக் கண்ணீர் மல்கப் பார்த்துவிட்டு திடீரென மாமியாரைப் பார்த்துக் கத்தத் தொடங்கினாள்.
“என் புருஷனப் பெத்தவங்கங்கறதுனால இதுவரைக்கும் பொறுத்துக்கிட்டேன். இனி முடியாது.  எனக்குத் தெரிஞ்ச முதியோர் இல்லத்துல கொண்டு போய்த் தள்ளிடப் போறேன். இனி சாகறவரைக்கும் அங்கதான் தனியா இருக்கணும். நீங்களும் கொஞ்சம் அவதிப்பட்டாத்தான் அறிவு வரும். அடுத்தவங்க வேதனை உங்களுக்குப் புரியும்.
“வாங்கப்பா, துாக்கிட்டுப் போங்க...’’
முதியவள் அதிர்ந்து விட்டாள். வெள்ளைச் சீருடை அணிந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவளை அப்படியே படுக்கையுடன் ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தள்ளிக்கொண்டு போனார்கள். ஆம்புலன்சில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தனர். அதைச் சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டு அந்த வீட்டின் பின்புறம் உள்ள சின்ன அறையில் முதியவளை இறக்கி வைத்தனர். அங்கே வேறு நர்சுகள் இருந்தார்கள்.
நானும் மாலதியும் வேறு அறையில் இருந்தோம். அவள் சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தாள்.
“என்னை ஏன் இந்தக் கொடுமையச் செய்ய வச்சீங்க?”
“உங்க மாமியார் செஞ்ச கொடுமைதான் காரணம்”
“என்ன செஞ்சாங்க?”
“அவங்க மாமியார அவங்க கொடுமைப்படுத்தினாங்க. மாடிப்படிக்குக் கீழ படுக்க வச்சாங்க. வேளா வேளைக்கு சாப்பாடு தரல. துாக்கியெறிஞ்சி பேசினாங்க. அவமானம் தாங்கமுடியாம அந்தக் கிழவி வீட்டவிட்டு ஓடிப் போயிருச்சி. அனாதப் பொணமா எங்கேயோ செத்ததுகூட இவங்களுக்குத் தெரியாது.
“அதுக்கப்புறமும் உங்க மாமியார் மனசுல இருக்கற கொடூரம் குறையல. உங்களயும் முடிஞ்சளவுக்குக் கொடுமைப்படுத்தினாங்க. நீங்க வீட்டுக்கு விலக்காகும்போது உங்கள கார் ஷெட்ல தங்கவச்சி ஊசிப் போன சாப்பாடக் கொடுத்து, உங்களப் பத்தி உங்க கணவர்கிட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி...’’
எழுந்து நின்று மாலதியைப் பார்த்துக் கைகூப்பினேன்.
“நீங்க எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு மாமியார் மீது அன்பக் காமிச்சீங்க. அவங்களுக்கு வியாதி வந்தபோது நல்லாப் பாத்துக்கிட்டீங்க. கடைசி வரைக்கும் அவங்கள  எதிர்த்துப் பேசல. உங்க அன்பு உங்க மாமியார்த் திணறடிச்சிருச்சி. ஆனா உங்க மாமியார் செஞ்ச பாவம் அவங்களத் தண்டிக்க ஆரம்பிச்சிருச்சி. அதுதான் பத்து வருஷமா அவங்களப் படுத்திக்கிட்டிருக்கு.
“உங்க மாமியாரோட கர்மக் கணக்கு மொத்தத்தையும் இந்த ஜன்மத்துலயே முடிச்சிரணும்னு பச்சைப்புடவைக்காரி நெனச்சா. அதுனாலதான் அவங்க வலியும் வேதனையும் அதிகமாகிக்கிட்டே இருந்துச்சி. ஆனா நீங்க வேதனைப்படறீங்கன்னு தெரிஞ்சவுடன் உங்களுக்காக வேற வழிகாட்டினா பச்சைப்புடவைக்காரி. நீங்க ரெண்டு நிமிஷம் உங்க மாமியாரத் திட்டினீங்க. அவங்கள வீட்டை விட்டுத் துரத்தற மாதிரி நடிச்சீங்க. அந்த ரெண்டு நிமிஷம் உங்க மாமியார் மரண வேதனைப்பட்டாங்க. ஆனா அதுல அவங்க கர்மக்கணக்கு நேராயிருச்சி. அடுத்த பிறப்பு அவங்களுக்கு நல்லா இருக்கும்”
மாலதி ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஒரு நர்ஸ் ஓடி வந்தாள்.
“எல்லாம் முடிஞ்சிருச்சிம்மா”
மாலதியும் நானும் ஓடினோம். முதியவளின் முகம் நிர்மலமாக இருந்தது. மாலதி அழுது கொண்டிருந்தாள். மென்மையான குரலில், “பச்சைப்புடவைக்காரி கேட்டதக் கொடுத்துட்டா. ஆனா ஒரே ஒரு குறை. 35 வருஷமா அவங்ககிட்ட அன்பா பேசிக்கிட்டிருந்த நான் கடைசி நேரத்துல கோபப்படறமாதிரி நடிக்க வேண்டியதாயிருச்சே! பாவம், அவங்க மனசு என்ன பாடுபட்டிருக்கும்’’
என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை.
விடைபெற்றுக் கொள்ளாமல் மாலதியின் வீட்டைவிட்டு வெளியேறினேன். வாசலில் குப்பைக் கூட்டிக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
“இழுத்துக் கொண்டு கிடந்தவளைக் கரையேற்றி விட்டுவிட்டாயே!”
அவளைக் கண்ணீர்த் திரையினுாடே பார்த்தேன்.
“அதுதான் எல்லாம் நன்றாக முடிந்துவிட்டதே, இன்னும் ஏன் அழுகிறாய்?”
நான் சிரிக்க முயன்றேன்.
“உனக்கு என்ன வேண்டும் சொல், தந்துவிட்டுப் போகிறேன்”
“மாலதியை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது, தாயே! தன்னைக் கொடுமைப்படுத்திய மாமியார் மீதும் அன்பு காட்டுகிறாள் என்றால் அவள் எவ்வளவு பெரிய அன்பரசியாக இருக்க வேண்டும். அதனால் அடுத்த பிறவியில்…’’
“மாலதி அளவிற்கு அன்பு இருப்பவனாகப் பிறக்க வேண்டுமாக்கும்?”
“நான் அந்த அளவிற்குப் பேராசைக்காரன் இல்லை. அடுத்த பிறவியில் மாலதியின் வீட்டில் கடைநிலை ஊழியம் செய்யும் பேறு வேண்டும் தாயே. அந்த அன்பரசியைத் தினமும் பார்க்கும் பாக்கியம் வேண்டும் தாயே!”
பெரிய சிரிப்புச் சத்தத்துடன் காற்றில் கலந்து விட்டாள் அன்னை.
நான் தொய்வுடன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar